தற்போதைய செய்திகள்
Capture

நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணத்தில்-தீக்குளித்த ம.தி.மு.க. பிரமுகர் பலி வைகோ நேரில் அஞ்சலி…….

மதுரை,

மதுரையில் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணத்தில் தீக்குளித்த ம.தி.மு.க. பிரமுகர் ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நடைபயணம்

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து வைகோவின் நடைபயணத்தில் தீக்குளித்த ம.தி.மு.க. பிரமுகர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். தேனி மாவட்டம் போடி அருகே அம்பரப்பர் மலைப்பகுதியில் அமைய உள்ள நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 31-ந்தேதி 10 நாள் நடைபயணத்தை மதுரையில் இருந்து தொடங்கினார்.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

தீக்குளித்தார்

மு.க.ஸ்டாலின் வைகோவின் நடைபயணத்தை தொடங்கி வைத்து விட்டு சென்ற பின்னர் பல்வேறு கட்சி பிரமுகர்கள் வைகோவை வாழ்த்தி பேசினர். இந்த நேரத்தில் விருதுநகர் மாவட்ட ம.தி.முக. இளைஞரணி துணைச் செயலாளர் சிவகாசியை சேர்ந்த ரவி திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடல் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கிருந்தவர்கள் தண்ணீர் மற்றும் மணலை எடுத்து ரவி மீது வீசி தீயை கட்டுப்படுத்தினர். உடல் முழுவதும் கருகிய நிலையில் 90 சதவீத தீக்காயத்துடன் மதுரையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ரவி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மரணம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று சிகிச்சை பெற்ற ரவியை பார்த்து நலம் விசாரித்தார். மதுரை மாவட்ட மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ரவி அளித்த வாக்குமூலத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்ததாக கூறினார்.

சிகிச்சை பெற்று வந்த ரவி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உசிலம்பட்டியில் நேற்று நடைபயணம் மேற்கொண்ட வைகோ மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். ரவியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் கூறினார்.
Leave a Reply