BREAKING NEWS

நியாயமான நெல் கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும்

விவசாயிகளுக்கான நியாயமான நெல் கொள்முதல் விலையை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெல் கொள்முதல் விலை

காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்பட்ட குறுவை நெல்லை அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் கணிசமான அளவில் குறுவை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை மத்திய அரசு கடந்த ஜூலை மாதமே அறிவித்து விட்டது. சாதாரண வகை நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 1815 ரூபாயாகவும், சன்ன வகை நெல்லுக்கான கொள்முதல் விலை 1835 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்திய மத்திய அரசு, இம்முறை அதில் மூன்றில் ஒரு பங்கான ரூ.65 மட்டும் தான் உயர்த்தியுள்ளது. இது எந்த வகையிலும் பயனளிக்காது.

பயனில்லை

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஓரளவாவது லாபம் கிடைக்க வேண்டுமானால், நெல்லுக்கான உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது தான் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரை ஆகும். ஆனால் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்ததால், அது உழவர்களுக்கு பயனளிக்கவில்லை.

நியாயமான விலை தேவை

நடப்பாண்டில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.2,091 செலவாகிறது. ஆனால், மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1,815 தான். நெல்லுக்கான கொள்முதல் விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசு செய்த தவறை தமிழக அரசு தான் சரி செய்ய வேண்டும். மத்திய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை உழவர்களுக்கு போதுமானதாக இருக்காது என்பதால், மத்திய அரசின் விலையுடன் தமிழக அரசு அதன் பங்குக்கு ஒரு தொகையை ஊக்கத் தொகையாக சேர்த்து வழங்கும். அந்த தொகை உழவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், பத்தாண்டுகளுக்கும் மேலாக ஊக்கத்தொகை உயர்த்தப்படாததால், அது வழக்கமான சடங்குகளில் ஒன்றாகிவிட்டது. எனவே, உழவர்களுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.3,000 கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகையை அதிகரித்து, நியாயமான கொள்முதல் விலையை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *