BREAKING NEWS

நிபா வைரஸ்’ பாதிப்பு தமிழத்தில் இல்லை,தமிழக அரசு அறிவிப்பு.

நிபா வைரஸ்’ பாதிப்பு தமிழத்தில் இல்லை,தமிழக அரசு அறிவிப்பு.


கேரளாவில் இதுவரை 15 பேர் பலி (பாக்ஸ்) மக்கள் பீதி அடைய வேண்டாம்
சென்னை, மே.21-

நிபா வைரஸ் பாதிப்பு குறித்து தமிழகத்தில் இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நிபா வைரஸ்

வவ்வால்களால் பரவும் நிபா வைரஸ் மனிதர்களையும், விலங்குகுளையும் தாக்கி வருகிறது. பல நாடுளில் இந்த வைரஸ் பெருத்த உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் தாக்குதலால் அங்கு 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நோய் பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்வு செய்கிறது.

தமிழகத்தில் அந்த வைரஸ் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இல்லை

மலைப்பாங்கான பன்றிப் பண்ணைகளில் இருந்து தான் நிபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. இந்த வைரஸ் மனிதரிடம் இருந்து மனிதருக்குப் பரவ வாய்ப்பில்லை. எந்தவொரு நோய்த் தாக்கத்தையும் வெளிப்படுத்தாமல் இருக்கக்கூடிய உயிரினம் வவ்வால். கேரளாவில் நோய் பாதித்த வவ்வால்கள் அதிக தூரம் பறந்து வர வாய்ப்பில்லை. இருப்பினும், கேரள எல்லையில் இருக்கக்கூடிய நீலகிரி, கோவை ஆகிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புடன் இருக்குமாறு சுகாதாரத் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அறிவுறுத்தியுள்ளோம்.

தமிழகத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் காய்ச்சல் நிலைமையை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கண்காணிக்கிறோம். அதனால், ஏதேனும் குறிப்பிட்ட பகுதியில் கூடுதலாக காய்ச்சல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தோம். ஆனால், இதுவரை அப்படி எதுவும் இல்லை.

தமிழகத்தில் தேவையற்ற பீதி வேண்டாம். சுகாதாரத் துறை கால்நடைத் துறையுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஏதேனும் காய்ச்சல் ஏற்பட்டால் அது எம்மாதிரியான காய்ச்சல் என்பதை அரசு மருத்துவமனைக்கு சென்று சோதித்துக் கொள்ள வேண்டும். கேரளாவில் உள்ள சுகாதாரத் துறையுடன் தொடர்பில் தான் உள்ளோம்.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழகம்-கேரளா எல்லைப்பகுதியில் ஊஷார் படுத்தப்பட்டுள்ளனர். வாகனங்களையும், அங்கிருந்து வரும் பொது மக்கள், சுற்றுலா பயணிகளையும் தீவிரமாக கண்காணிக்கும்படியும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

பாக்ஸ்

நோயின் அறிகுறி

நிபா வைரஸ் தாக்கியவர்களுக்கு முதல் அறிகுறியாக மூச்சிவிடுவதில் சிரமம் ஏற்படும். அதன் பிறகு கடுமையான தலைவலியும், காய்ச்சலும் உண்டாகும். இது 15 நாட்களுக்கு மேலாக நீடிக்கும். அதற்குள் உரிய சிகிச்சை செய்யாவிட்டால் மூளைக்காச்சலாக மாறிவிடும். அதனால் மூளை செயலிழந்து உயிரிழப்பை நோக்கி அழைத்து சென்றுவிடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.




Leave a Reply