தற்போதைய செய்திகள்

நாளைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால்-மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தமிழக அரசு அதிரடி முடிவு…

சென்னை,
நாளைக்குள் (வியாழக்கிழமை) உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பிப்ரவரி 16-ல் தீர்ப்பு

காவிரி நதிநீர் மேல்முறையீட்டு வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தையும் தீர்ப்பளிக்கப்பட்ட தினத்தில் இருந்து 6 வாரத்திற்கு மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
பிரதமர் சந்திக்கவில்லை

இந்தநிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட மத்திய அரசை வலியுறுத்திட தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றியதும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்திடவும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்திக்க முடியாத நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியதும், அதே நேரத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலைமைச் செயலாளர்களை அழைத்து மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியதும் தெரிந்தே. இந்த கூட்டத்தில் மேற்படி வாரியத்தை அமைப்பதற்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

சென்னை வந்த பிரதமரிடமும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதமும் கொடுத்தார்.

சட்டசபையில் தீர்மானம்

இத்தகைய சூழ்நிலையில், தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் கடந்த 15-ந் தேதி கூட்டப்பட்டு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைத்திட வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு அதன் நகலையும் பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் தமிழக அரசு அனுப்பி வைத்தது அறிந்ததே.
நல்ல முடிவு எடுப்போம்

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, குறுகிய காலமே உள்ளதால் காவரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். சட்டசபை கூட்டத்திலும் இதேபோன்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசுகையில், ‘இன்னும் காலம் இருக்கிறது பொருத்திருந்து பார்ப்போம். சாதகமான முடிவு வரவில்லை என்றால் அனைவரும் கூடி பேசி நல்ல முடிவு எடுப்போம்’ என்றார்.

அடுக்கடுக்கான போராட்டங்கள்

இத்தகைய சூழ்நிலையில் தான், அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.க்கள் மக்களவை கூட்டம் தொடங்கிய நாள் முதல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மக்களவை கூட்டத்தை முடிக்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் தமிழகம் முழுவதும் பல்வேறு விவசாய சங்கங்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் என பல்வேறு இயக்கங்களை இதுநாள் வரை நடத்தி வருகிறது.
முதல்வர் நம்பிக்கை
தமிழகமே எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கும், ‘காவிரி மேலாண்மை வாரியத்தை’ மத்திய அமைப்பதற்கான கெடு 29-ந் தேதியுடன் முடிகிறது. இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்குமா? என்று நேற்று சேலத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து கூறுகையில், ‘ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று கெடு விதித்திருக்கிறது. இன்னும் நாட்கள் இருக்கின்றது, நிச்சயம் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு இரண்டையும் அமைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.
கடமையும்-பொறுப்பும்
ஆக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றும் விதமாகவும், தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கையை உறுதிபடுத்தும் விதமாகவும், மத்திய அரசு, ‘காவிரி மேலாண்மை வாரியத்தை’ அமைக்குமா என்பதற்கான கேள்விக்கு 29-ந் தேதிக்குள் விடையளிக்க வேண்டிய கடமையும்-பொறுப்பும் மத்திய அரசுக்கு இருக்கிறது.

அவமதிப்பு வழக்கு

இந்தநிலையில் டெல்லி சென்றுள்ள தமிழக அரசை சேரந்த முதல்-அமைச்சரின் முதன்மை செயலாளர் சாய்குமார், பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழுத்தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் மூத்த வழக்கறிஞர்களுடன் நேற்று மாலை 5 மணியளவில் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையில் உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

அதவாது, உச்சநீதிமன்றம் விதித்த கெடு, நாளை முடிவடைகிறது. நாளைக்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் வருகின்ற சனிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Leave a Reply