BREAKING NEWS

‘‘நான் அணிக்காக மட்டும் விளையாடவில்லை; நாட்டுக்காக விளையாடுகிறேன்”

நான் அணிக்காக மட்டும் விளையாடவில்லை. நாட்டுக்காக விளையாடுகிறேன் என துணை கேப்டன் ரோகித் சர்மா சூசக ட்வீட் செய்து உள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி அரையிறுதியில் தோற்ற பின், அணிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரோகித்தின் ஆலோசனையை விராட் கோலி ஏற்கவில்லை என்றும் இதனால்தான் பிரச்சினை என்றும் தெரிகிறது.

ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சில வீரர்களும், கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக சில வீரர்களும் தனித்தனியாக செயல்படுவதாகவும் கூறப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வந்தார். இந்நிலையில் திடீரென்று அவரை பின் தொடர்வதில் இருந்து ரோகித் வெளியேறி இருக்கிறார். விராட் கோலியின் பக்கத்தை பின் தொடர்வதில் இருந்து முன்பே விலகி விட்டார். ரோகித்தின் மனைவி ரித்திகாவும் அனுஷ்கா சர்மாவை பின் தொடர்வதில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து இவர்களது பிரச்சினை முற்றியதாக கூறப்பட்டது.

ரோகித் சர்மாவுடனான மோதல் குறித்து பேட்டி அளித்த விராட் கோலி “எனக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அதனை எனது முகத்தில் அல்லது எனது நடவடிக்கைகளில் நீங்கள் காண முடியும். நான் ரோகித் பற்றி எப்பொழுதும் புகழ்ந்தே பேசி வந்துள்ளேன். ஏனெனில் அவருக்கு அந்த தகுதி உள்ளது என நான் நம்புகிறேன். எங்களுக்குள் எந்த விவகாரமும் இல்லை.

இதுபோன்று பரப்பப்படும் அனைத்து செய்திகளாலும் யார் பலன் பெறுகிறார்கள் என்பதும் எனக்கு தெரியவில்லை” என கூறினார்.

இந்நிலையில் தற்போது ரோகித் சர்மாவின் தற்போதைய ட்வீட் வைரலாகி வருகிறது. ‘நான் அணிக்காக மட்டும் விளையாடவில்லை. நாட்டுக்காக விளையாடுகிறேன்’ என்ற கேப்ஷனுடன் இந்திய அணியின் சீருடையில் உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த சங்கேத ட்வீட் யாருக்காக போட்டிருக்கிறார் என்பது தெரியவில்லை. எது எப்படியோ, இந்திய அணிக்குள் நடந்து வரும் இந்தக் குழப்பங்கள் விரைவில் தீரவேண்டும். அப்போதுதான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணி சாதிக்க முடியும்.




Leave a Reply