தற்போதைய செய்திகள்

நான்கு விக்கெட் கீப்பர்கள் தோனி ஓய்வுக்கு பிறகு கடும் போட்டியில்

நான்கு விக்கெட் கீப்பர்கள்
தோனி ஓய்வுக்கு பிறகு கடும் போட்டியில்
புதுடெல்லி,2019 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு தோனி இந்திய அணியில் நீடிப்பாரா? ஓய்வு பெற வாய்ப்புண்டா?

எதுவும் உறுதியில்லை. எனினும் 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு அதிகபட்சமாக ஒரு வருடம் தோனி விளையாடலாம். எப்படியிருந்தாலும் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்வின் கடைசிக் கட்டத்தில் உள்ளார் தோனி.

விக்கெட் கீப்பர்கள் அசத்தல்

இந்நிலையில் தோனிக்கு அடுத்ததாக அவருடைய இடம் யாருக்குச் செல்லப்போகிறது என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. அதிலும் இந்த வருட ஐபிஎல்-லில் விக்கெட் கீப்பர்கள் அசத்தி வருவதால் அவர் இடத்தைப் பிடிப்பதற்கான போட்டியாகவே இது பார்க்கப்படுகிறது.

தினேஷ்கார்த்திக்

சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன் என நான்கு வீரர்களும் இந்த ஐபிஎல்-லில் பல்வேறு சந்தர்ப்பங்களில் முத்திரை பதித்துள்ளார்கள். தோனிக்குப் பிறகு தினேஷ் கார்த்திக்தான் என்று நம்பும்படி அவர் தொடர்ந்து எல்லா வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ரன்கள் குவித்து வருகிறார்.

மறக்க முடியாத சிக்சர்

இலங்கை முத்தரப்பு டி20 போட்டியில் அவர் அடித்த சிக்ஸரைக் காலத்துக்கும் மறக்க முடியாது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் 11 ஆட்டங்களில் 321 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி – 45.85. ஒரு அரை சதமும் அடிக்காவிட்டாலும் 9 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 32 வயது தினேஷ் கார்த்திக்குக்கு 11-வது இடம்.

332 ரன்கள் குவித்த சாம்சன்

23 வயது சஞ்சு சாம்சன் தொடர்ந்து ஐபிஎல்-லில் கவனம் ஈர்த்து வருகிறார். இந்த வருடம் 10 ஆட்டங்களில் 332 ரன்கள். 2 அரை சதங்கள், 15 சிக்ஸர்கள். பெங்களூருக்கு எதிராக இவர் அடித்த 92* ரன்கள் முக்கியமானதாகும். வரிசையில் தினேஷ் கார்த்திக்குக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்.

20 வயது ரிஷப்பண்ட்

20 வயது ரிஷப் பண்ட், 10 ஆட்டங்களில் 393 ரன்கள் எடுத்துள்ளார். 3 அரை சதங்கள், 20 சிக்ஸர்கள். அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 6-வது இடம். இவரை பேட்ஸ்மேனாகவே அணியில் சேர்க்கலாம். எனினும் இலங்கை முத்தரப்பு டி20 போட்டியில் கிடைத்த வாய்ப்புகளைத் தவறவிட்டதால் இன்னும் அதிகமாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

மும்பை வெற்றிக்கு இஷான்கிஷன்

கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றுமுன்தின இஷான் கிஷனின் ஆட்டத்தை மறக்கமுடியுமா? 19 வயது இஷான் கிஷன், 21 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து மும்பையின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள். குல்தீப் யாதவ் பந்துவீச்சில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை அடித்து அட்டகாசம் செய்தார்.

தோனி ஊர்க்காரர்

இந்த வருடம் 11 ஆட்டங்களில் 238 ரன்கள் எடுத்துள்ளார். 2 அரை சதங்களுடன் 15 சிக்ஸர்கள் எடுத்துள்ளார். இவர் டி20 வீரர் மட்டுமல்ல. 32 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் 2097 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி – 41.11. தோனி ஊர்க்காரர். ஜார்கண்ட் வீரராக, டெல்லிக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் 14 சிக்ஸர்களுடன் 273 ரன்கள் எடுத்து கவனம் ஈர்த்தார்.

அதிரடி தேவை

தோனி ஓய்வுக்குப் பிறகு இந்த நான்கு பேரிலிருந்து ஒருவரைத்தான் தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டும். தோனியைப் போலவே அதிரடியாக விளையாடக் கூடிய வீரரே அவர்களுடைய தேவையாக இருக்கும். இந்த நான்கு பேருமே அதிரடியாக விளையாடக்கூடியவர்கள். ஒருவேளை, தினேஷ் கார்த்திக் மூத்தவர் என்பதால் அவருக்குப் பதிலாக இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க தேர்வுக்குழு முடிவு செய்தால் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், இஷான் கிஷன் ஆகிய மூவருக்கும் இடையேதான் கடும் போட்டி நடக்கும். அப்போது இந்த வருட ஐபிஎல்-லில் இவர்கள் என்ன செய்தார்கள் என்பது முக்கிய அளவுகோலாக இருக்கும்.
Leave a Reply