BREAKING NEWS

நானோ காருக்கு வந்த சோதனை.


 

சென்ற ஜூன் மாதத்தில் டாடா நிறுவனத்தின் நானோ மாடலில் ஒரே ஒரு கார் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்கார்களுக்கான உற்பத்தி விரைவில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிரிய கார்

டாடா குழுமத்தின் தலைவராக உள்ள ரத்தன் டாடாவின் யோசனையில் உருவானதுதான் டாடா நானோ கார். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இக்கார்களுக்கான உற்பத்தி 2007-ம் ஆண்டு சிங்கூர் ஆலையில் தொடங்கியது. ரூ.1 லட்சம் என்ற குறைந்த விலையில் நடுத்தர மக்களும் வாங்கிப் பயன்படுத்தும் நோக்கத்தில் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட இக்கார்களுக்கு அப்போதைய காலத்தில் நல்ல வரவேற்பு இருந்தது

உற்பத்தி

ஆனால், இக்கார்களுக்கான மவுசு காலம் செல்லச் செல்ல குறையத் தொடங்கியது. ஒருகட்டத்தில் இவற்றை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இருந்தாலும் ரத்தன் டாடாவால் அறிமுகம் செய்யப்பட்டது என்ற உணர்ச்சி ரீதியான காரணத்துக்காக இக்கார்கள் விற்பனையாகாவிட்டாலும் குறைந்த எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

விற்பனை மந்தம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் சென்ற ஜூன் மாதத்தில் ஒரேயொரு நானோ கார் மட்டுமே தயாரிக்கப்பட்டதாகவும், மூன்று கார்கள் மட்டுமே அந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு நானோ கார் கூட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை. 2017ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் மொத்தம் 275 நானோ கார்கள் உற்பத்தி செய்யப்பட்டதோடு, 167 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஏற்றுமதி

அதேபோல 25 கார்கள் ஏற்றுமதியும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இப்போது டாடா கார்கள் உற்பத்தி நிறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்துப் பேசுகையில், 2019-ம் ஆண்டுக்குப் பிறகு இக்கார்களின் உற்பத்தி தொடர வாய்ப்பில்லை எனவும், இப்பிரிவில் நிலைத்திருக்க அதிக முதலீடுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.




Leave a Reply