BREAKING NEWS

நாகப்பட்டினத்தில் புத்த விகாரம் ( சயித்தியம் ) – பகுதி (3) சமய உரிமைக்கு வாய்ப்பளித்த சமுதாயப் பெருமை ..!

முதற் குலோத்துங்கன் ஆட்சிக்காலம் தமிழ்நாட்டுக்குச் சிறப்பான காலமாகும் . கடார நாட்டிலும் நல்லரசர் தோன்றினர். புத்த சங்கத்தார் தங்கள் கடார நாட்டு வேந்தனுக்குத் தங்களுக்குற்ற இடுக்கணைத் தெரிவித்து, சோழவேந்தனைக் கொண்டு தங்கள் குறையைப் போக்கி முறை செய்யுமாறு வேண்டினர் . அவர் வேண்டுகோட்கிசைந்த கடாரத்தரசன் அது குறித்து ” இராஜவித்யாதர மரீ சாமந்தன், அபி மானதுங்க மரீ சாமந்தன் என்ற இருவரைக் குலோத்துங்கன் பால் தூது விடுத்தான்.

அவர்கள் இருவரும் நேரே நாகப்பட்டினத்துக்கு வந்தனர் . அங்கேயிருந்த புத்த சங்கத்தாரைக் கண்டு வேண்டுவனவற்றை அறிந்துகொண்டு முதல் இராசராசன் பள்ளிச் சந்தமாகத் தந்த செப்பேட்டை நன்கு ஆராய்ந்து அதனையும் எடுத்துக்கொண்டு முதற் குலோத்துங்கனைக் காணச் சென்றனர். குலோத்துங்கன், ஆயிரத்தளியான ஆகவமல்ல குலகாலபுரத்துக் கோயிலின் உள்ளமைந்த திருமஞ்சன சாலையாகிய காளிங்கராயன் மண்டபத்தில் திருவோலக்கமிருந்தான். கடாரத்திலிருந்து வந்த தூதுவரும் உடன்வந்த புத்த சங்கத்தாரும் வேந்தனைக் காணவே, அவன் அவர்கட்குரிய சிறப்புச் செய்து இருக்கை தந்து மகிழ்வித்தான். அரசியற் சுற்றத்தாருள் சந்தி விக்கிரக இராஜ வல்லப பல்லவரையரும் அதிகாரிகளான இராசேந்திர சிங்க மூவேந்த வேளாரும் உடனிருந்தனர்.

இராஜவித்தியாதரனும் அபிமானதுங்கனும் நாகப்பட்டினத்துப் புத்த விகாரத்துத் தோற்றமும் வளர்ச்சியும் முதல் இராசராசன் முதலிய வேந்தர் பெருமக்கள் செய்த சிறப்புகளும் ஆகியவற்றை விரிவாக எடுத்துக் கூறி , முடிவில் ” கடாரத் தரையன் பட்டினக் கூற்றத்துச் சோழகுலவல்லி பட்டினத்து எடுப்பித்த இராஜேந்திர சோழப் பெரும்பள்ளிக்கும் இராஜராஜப் பெரும்பள்ளிக்கும் பள்ளிச்சந்தமான ஊர்கள் பழம்படியே அந்தராயமும் வீர சேஷையும் பண்ணேயும் அண்டைவெட்டியும் குந்தாலியும் சுங்கமேரையும் உள்ளிட்டனவெல்லாம் தவிரவும், முன்பு பள்ளிச்சந்தங்களைக் காணியுடைய காணியாளர் தவிரவும், இப்பள்ளிச் சங்கத்தார்க்கே இவை காணியாக அமையவும் பண்ணியருள வேண்டும் ‘ என விண்ணப்பம் செய்தனர்.

கேட்ட வேந்தன் தன் அதிகாரிகளை நோக்கி உண்மையாராய்ந்து உரியவற்றைச் செய்க ’ எனப் பணித்தான். அவர்கள் பட்டினக்கூற்றத்து நாகப்பட்டினத்தையடைந்து இன்றியமையாத ஆராய்ச்சிகளைச் செய்து ” கடாரத்தரையன் ஐயமாணிக்க வளநாட்டுப் பட்டினக்கூற்றத்துச் சோழகுலவல்லி பட்டினத்து எடுப்பித்த இராசராசப் பெரும்பள்ளிக்குப் பள்ளிச்சந்தம் ஐயமாணிக்க வளநாட்டுப் பட்டினக் கூற்றத்து ஆனைமங்கலத்திலும், முஞ்ஞைக் குடியிலும், திருவாரூர்க் கூற்றத்து ஆமூரிலும், அளநாட்டு வடகுடியான நாணலூரிலும், கீழ்ச்சந்திரபாடியிலும், பாலேயூரிலும், ஜயங்கொண்ட சோழ வளநாட்டுக் குறும்பூர் நாட்டுப் புத்த குடியிலும், விஜய ராஜேந்திர சோழ வளநாட்டு இடைக்கழி நாட்டு உதய மார்த்தாண்ட நல்லூரிலும்” இருப்பது கண்டு, ஆங்காங்குள்ள நிலங்களையும் அவ்வவற்றுக்குரிய காணிக்கடனையும் அறுதியீட்டையும் குறித்துத் தொகுப்பாக வேந்தர்க்குத் தெரிவித்தனர்.

முதற் குலோத்துங்கன், நாட்டவரையும் அரசியற் சுற்றத்தாரையும் ஆராய்ந்து, ஆனை மங்கலம் முதலிய ஊர்களிற் கண்ட நிலங்களை இப்பள்ளிக்கு வேண்டும் நிவந்தங்களுக்காக ” இறையிலியாக்கினேம் ” என்றும், இப்பள்ளிச்சந்தங்களையுடைய காணியாளரைத் தவிர்த்துக் குடிநீக்கிப் பள்ளிச்சங்கத்தார்க்கே “காணியாகக் கொடுத்தோம்’ என்றும் குறிப்பிட்டு, ‘ஜயமாணிக்க வளநாட்டுப் பட்டினக் கூற்றத்துச் சோழகுலவல்லி பட்டினத்துறி சயிலேந்திர சூளாமணி வன்ம விகாரமான இராஜராஜப் பெரும்பள்ளிக்குப் பள்ளிநிலையும் பள்ளிவளாகமும் இறையிலியாய்க் கொடுத்தோம் ; இப்படிச் செய்து கொடுக்க ‘ என்று சோழர்பெருமான் திருவாய் மொழிந்தருளித் ” திருமுகம் பிரசாதம் ‘ செய்தருளினன்.

திருமுகம் பெற்ற சந்திவிக்கிரக இராஜ வல்லப பல்லவரையர், அதிகாரிகள் இராஜேந்திர சிங்க மூவேந்த வேளார்க்கறிவிக்க, அவர் செப்பேடு எழுதுவோனுக்கு நிகழ்ந்தது தெரிவித்துச் செப்பேடு பொறிக்குமாறு கட்டளையிட்டார். அவன்,“தாமிர சாசனம் பண்ணிக்கொடுக்க வென்று சந்திவிக்கிரக இராஜ வல்லப பல்லவரையரும் அதிகாரிகள் இராஜேந்திர சிங்க மூவேந்த வேளாரும் சொல்ல இத்தாமிர சாசனம்

* சங்க காலத்தில் ஒய்மா நாட்டு நல்லியக் கோடனை சிறுபாணுற்றுப்படை பாடிச்சிறப்பித்த நத்தத்தனூரும் ஒன்றே  இந்நல்லூர், எழுதினேன், உட்கோடி விக்கிரமாபரணத் தெரிந்த வலங்கை வேளைக்கார்கள்  நிலையுடைய பரனேயன்  நிகரிலி சோழ மதுராந்தகனேன்”* எனக் கையெழுத்திட்டு வழங்கினான், முறை வேண்டி நின்ற புத்த சங்கத்தார் வேண்டியாங்குப் பெற்றுத் தாம் எய்திய மகிழ்ச்சியால் வேந்தனை வாழ்த்தி விடைபெற்றுக்கொண்டு நாகப்பட்டினம் சென்று சேர்ந்தனர். செய்ய வேண்டியிருந்த திருத்தங்களைச் சாமந்தர் இருவரும் செய்துவிட்டுச் சோழ வேந்தன்பால் விடையும் , அவன் செய்த சிறப்புகளையும் பெற்றுக்கொண்டு தமது கடார நாடு சென்று சேர்ந்தனர்.

இரண்டாம் நரசிங்கவன்ம பல்லவனாம் இராசகேசரி வன்மமான முதல் இராசராச சோழ வேந்தனாலும், முதற் குலோத்துங்க சோழ வேந்தனாலும் பெருஞ்சலுகைப் பெற்று இனிதிருந்த புத்த சங்கம், ஆண்டுகள் கழி யக்கழியத் தன் செல்வநிலை குன்றிச் சீர்குலைவதாயிற்று. கி.பி. பதினெட்டாம் : நூற்றாண்டில் வங்காளக் கடலிற் கலஞ் செலுத்தி உலவிய மேனாட்டவர் கேள்விக்கு  இது ” புதுவேலி கோபுர ’ மென்றும், பழங்கோபுர ” மென்றும்,‘சினகோபுர ” மென்றும்,”சயின கோபுரமென்றும் பெயர் வழங்கி நின்றது.  இதனையடுத்திருந்த பள்ளிவளாகம் பாழ்நிலமாயிற்று.

நாகப்பட்டினத்துக்கு வடக்கில் கடற்கரையில் ஒன்று ஒன்றரைக்கல் தொலைவில் நின்ற இந்த இராசராசப் பெரும்பள்ளி மேனாட்டவர்களின் கண்களை உறுத்தி வந்தது. நான் பார்த்தபோது சதுரவடிவிற்றாய் மூன்று நிலைகளையுடைய கோபுரமாய்க் காட்சியளித்த இதன் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு வாயில் உண்டு; முற்றும் சிமெண்டு கலவாது சிறுசிறு செங்கற்களால் இது கட்டப்பெற்றிருந்தது. கீழ்நிலையின் மூலைகள் இடிந்து மேற்றளமொன்று இருந்ததுண்டெனவுணர்த்தும் குறிகளுடன் இது நின்றது ‘ எனவும், இதன்கண்  சிற்பமோ கல்வெட்டெழுத்துகளோ காணப்படவில்லையெனவும் எலியட் என்பார் குறித்திருக்கின்றார்.

கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் புதுச்சேரியிலிருந்த யூதக் கிறித்தவர்கள் பிரெஞ்சுக்காரர்கட்கு அஞ்சி  இப்பகுதியில் குடியேறினர். சில ஆண்டுகளில் அவர்கள் இப்பகுதியைத் தமக்கு உரியதாக்கிக்கொண்டு கி.பி. 1859-ல் எஞ்சியிருந்த இப்புத்த சயித்தியத்தை இடித்துவிடக் கருதி அரசியலாரை அனுமதி வேண்டினர்.

அவர்கள் விண்ணப்பத்தை அந்நாளைய ஆங்கில அரசியலார் அப்பகுதிக்குரிய பொறியாளரான கேப்டன் ஒக்ஸ் என்பார்க்கு அனுப்பிப் புத்தசயித்தியக் கட்டடத்தைப் பார்வையிட்டுத் தனது கருத்தைத் தெரிவிக்குமாறு பணித்தனர்.

அவர் வந்து பார்த்து, “ இதன்கண் கல்வெட்டோ, சிற்பமோ ஒன்றும் இல்லை; இது மிகுதியும் பாழ்பட்டுக் கிடத்தலால் இதனை இடிப்பது தக்கதே’ என்று அரசியலார்க்கு அறிவித்தார். ஆயினும் எலியட் என்பார்க்கு அதனை இடிப்பதில் விருப்பமில்லை. அதனையறிந்த சென்னை ஆளுநர் தான் நேரில் கண்டு தமது கருத்தை யுரைப்பதாகக் கூறினார், இதற்கிடையே எலியட் தமது ஆங்கிலநாட்டுக்குச் சென்றார், அப்போது நாகப்பட்டினம் வந்த ஆளுநர் புத்த சயித்தியத்தைப் பார்வையிட்டு அதனைப் பழுதுபார்ப்பது வீண்முயற்சியும் பயனில்லா உழைப்புமாகும் எனத் துணிந்து அதனைச் சுற்றி வேலியிட்டுப் புகைப்படமொன்று ” எடுத்து வைக்குமாறு பணித்தார்.

நாகப்பட்டினத்து யூதக் கிறித்தவர்கட்கு அச்சயித்தியத்தை இடித்துத் தள்ளுவதில் எழுந்த நாட்டம் போகவேயில்லை. கி.பி. 1867-ல் அவர்கள் மறுபடியும் முயன்றனர். அந்நாளைப் பொறியாளர் அவர் விருப்பத்தை மறுத்துச் சில பகுதிகளைப் பழுதுபார்த்துச் செம்மைப்படுத்தி, “நாகப்பட்டினக் கடற்கரையருகே இயங்கும் கப்பல்களுக்கு  இக்கட்டடம் கலங்கரை விளக்கமாக விளங்கியது ; இங்கே வாழும் மக்களும் இதனை இடிப்பது கூடாதென மறுத்தனர் ‘ என்றொரு குறிப்பும் எழுதி அரசியலாருக்கு அறிவித்தார். ஆனால், அங்கே இருந்த புனித  ஜோசப் கல்லூரித் தலைவர்கள், அதனைத் தகர்த்தாலொழியத் தங்கள் கல்லூரிக்குக் காப்பு இல்லை என விடாப்பிடியாய் நின்றனர். சென்னை ஆளுநர் அமைச்சரோடு ஆராய்ந்து,” கல்லூரித் தலைவர்களே அக்கோபுரத்தைத் தகர்த்து அங்கே சிதைந்த பொருள்களைத் தங்கள் கல்லூரிக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் ‘ என்று தெரிவித்தார். கோபுரமும் தகர்க்கப்பட்டது.

இரண்டாம் நரசிங்கவன்ம பல்லவன் காலத்தில் தோன்றி, முதல் இராசராசன், முதல் இராசேந்திரன், முதற் குலோத்துங்கன் முதலிய சோழ மன்னர் காலத்தில் செல்வாக்குற்று நின்ற நாகப்பட்டினத்துப் புத்த சைத்தியம், ஆங்கிலே ஆட்சிக்காலத்தில் நிலையிழந்து இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று.

சூடாமணி என்பது புத்த விகாரத்தின் பெயர்  என்றும் நாகப்பட்டின வளாகத்தில் நூற்றுக்கணக்கான புத்தர் படிமங்கள் கிடைத்தன என்றும் எழுதியுள்ளனர். மாமன்னன் இராசராசன் காலத்தில் எழுந்த கோயிலைப் போல காலம் செல்லச் செல்ல பல்வேறு கட்டடங்கள் இடிபாடுகளாகச் சிதைந்தன .கல்வி நிலையங்களும் , புகைவண்டி நிலையங்களும் ,அணைகளும் பெருகப் பெருக பல்வேறு கட்டடங்கள் இடிபட்டன .

இது காலத்தின் கோலம் போலும் .சீன வேந்தன் பெயரோ – சீன நாட்டிலிருந்து வந்த குறிப்புக்களோ இச் செய்திகளை எப்படி வலியுறுத்துகின்றன .

இங்கிருந்த புத்த சங்கத்தினரின் பெயர்களில் சீன மொழி ஒலியோ காணப்படவில்லையென சிலர் வினவலாம் .காஞ்சி ,மாமல்லபுரம் ,நாகப்பட்டினம்,திருவாரூர்  முதலிய இடங்களைப் பற்றிய குறிப்பு எங்கள் சீன ஏடுகளில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளன என்று எவரும் கூறக் காணோம் .

புகழ் வாய்ந்த தமிழ் காப்பியமான மணிமேகலை புத்த சமயத்துக்கே வாய்த்த பெருங்கொடை , ஆனால், எந்த புத்த சங்கத்திலும் , எந்த நாட்டிலும் மணிமேகலை பெயர் வழக்கத்தில் இருந்ததாகவோ, வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதாகவோ அறியமுடியவில்லை..

லலித விஸ்தாரம் என்னும் பௌத்த நூலில் கௌதம புத்தர் படித்த பல மொழிகளுள் தமிழ் மொழியும் உண்டு என்ற குறிப்பும் உண்டு.

இப்படி ஆராயலாம்ன்ற நோக்கத்தில்தான் இக்கட்டுரையை வெளியிட்டுள்ளோம்.

 

உரைவேந்தர் ஒளவை.சு.துரைசாமி

–   புத்த விகாரம் நிறைவு
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *