BREAKING NEWS

நாகப்பட்டினத்தில் புத்த விகாரம் ( சயித்தியம் ) – பகுதி (2) சமய உரிமைக்கு வாய்ப்பளித்த சமுதாயப் பெருமை ..!

இடைக்காலத்தில் தோன்றிப் புகழ் பெற்ற சோழவேந்தர்களில் ஒப்பாரும் மிக்காருமில்லாத பெருவேந்தன் இராசகேசரி வர்மனான  முதல் இராசராசன் என்பது உலகறிந்த செய்தி. தஞ்சையில் மாமன்னர் எடுத்த  பெருவுடையார் கோயில், வேந்தரின் புகழுருவாய் நின்று காண்பார் காட்சிக்கு மாட்சி தந்துகொண்டிருக்கிறது.

சிவபாதசேகரன் எனத் தன்னைக் கூறிக்கொண்டதும்,  மரக்கால், நிறைகோல் முதலிய அளவைகட்கு ஆட வல்லான் என்று பெயர் குறித்து வழங்கியதும் பிறவும் அவர் சிறந்த சைவர் என்பதை வற்புறுத்துகின்றன.

உண்மைச் சிவநெறி ஒழுகும் சைவர்கட்குப் புறச் சமயங்கள் பலவும் சிவஞானம் பெறுவதற்குப் படிமுறைகள் என்பது கொள்கை. புறச்சமய நெறி நின்று மக்களிடையே பொருந்தாத ஒழுக்கங்களைக் கற்பித்தது பற்றியே  அந்நெறி நின்றாரைப் பற்றிச் சைவ சமய குரவர் பாட்டில்  காணலாமேயன்றி பிற சமயவாதிகளைப் போலப் புறச்சமயவுண்மைகளே யெடுத்தோதி மறுக்கும் செயலை மேற்கொள்ளாமையைத் தெளியக் காணலாம் .

சிவநெறியில் தோய்ந்த குடியில் தோன்றிச் சமய உரிமையைப் பேணும் அரசியல் வாழ்வு நடத்தும் அரசர் வழித் தோன்றலான முதல் இராசராசன், சூளாமணிவன் மன் விடுத்த வேண்டுகோளை வரவேற்று, அவன் விரும்பியவாறு செய்துகொள்ளுதற்குத் தன் இசைவு நல்கினான் அதுவே நாகப்பட்டினத்தில் புத்த சயித்தியம் கட்டப்பட துணை நின்றது. நாகப்பட்டினத்தில் சூளாமணிவர்மன்  விரும்பிய புத்த விகாரம் கட்டப்படுகையில் இராசராசனது இருபத்தோராம் ஆட்சியாண்டு வந்தது. அக்காலத்தே ஒரு நாள் ‘புத்த சாதுக்கள்” சிலர்  வந்தனர். வேந்தர் பெருமான் தஞ்சாவூர்  புறம்படி மாளிகையிலுள்ள ” இராஜா சிரயன் ” என்னும் திருவோலக்க மண்டபத்தில் வீற்றிருந்து அவர்களை வரவேற்றான் . அவர்கள் அரசனை வாழ்த்தி நாகப்பட்டினத்தில் சூளாமணி புத்த விகாரம் உருவாகி  வருவதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சிறிது போது அவரோடு உரையாடி  விடைகொடுத்துவிட்ட வேந்தர் பெருந்தகை, அமைச்சர் முதலிய அரசியற் சுற்றத்தாரை வருவித்து நாகப்பட்டினத்தில் எழும் புத்தவிகாரத்தின் நலம் குறித்துத் தான் செய்ய வேண்டியது என்ன என்று அவர்களோடு ஆராய்ந்தான்.

பின்பு, தனது இருபத்தோராம் ஆட்சியாண்டு தொண்ணுாற்றிரண்டாம் நாள் ” கடித்திரிய சிகாமணி வளநாட்டுப் பட்டினக் கூற்றத்து நாட்டாரும் பிரம தேயக் கிழவரும் தேவதானப்பள்ளிச் சந்தக்காணி முற்றூட்டுவிட்ட  பேரூர்த் தலைவர்களும் நகரங்களில் உள்ள தலைவர்களும் அறிக” என்று தொடங்கிக் கிடாரத்தரையன் சூளாமணி வன்மன், கூடித்திரிய சிகாமணி வளநாட்டுப் பட்டினக் கூற்றத்து எடுப்பிக்கின்ற சூளாமணி

வன்ம விகாரத்துப் பள்ளிக்கு வேண்டும் நிவந்தத்துக்காக கடித்திரிய சிகாமணி வளநாட்டுப் பட்டினக் கூற்றத்தைச் சேர்ந்ததும் தொண்ணுாற்றேழே இரண்டுமா முக்காணி முந்திரிகைக் கீழ் அரையே இரண்டு மா நிலமுடையதும், எண்ணாயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்து முக்கலனே இரு காணிக்குறுணி ஒரு நாழி நெல் வருவாயுடையதுமான ஆனைமங்கலம் என்னும் ஊரை, ஆண்டு இருபத்தொன்றாவது முதல் பள்ளிச்சந்த இறையிலியாக வரியிலிட்டுக் கொடுக்க ” என்று ஆணை பிறப்பித்தான்.

இந்த ஆணையை முடிமேற்கொண்டு, ஒலயெழுதும் நித்தவினு வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து விளத்தூர் கிழவன் அமுதன் தீர்த்தகரனும் ஒலநாயகம் உய்யக் கொண்டார் வளநாட்டு வெண்ணுட்டுக் கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலத்துக் கிருஷ்ணன் இராமனுன மும்முடிச் சோழ பிரமராயனும், நித்தவினு வளநாட்டுப் பாம்புணிக் கூற்றத்து அரைசூருடையான் ஈராயிரவன் பல்லவரையனை மும்முடிச் சோழனும், அருமொழித் தேவ வளநாட்டு நென்மலி நாட்டுப் பருத்திக்குடையான் வேளான் உத்தம சோழனும் மதுராந்தக மூவேந்த வேளானும் ஒப்பு நோக்கி, நாம் தீட்டினபடியே வரியிலிட்டுக் கொள்க’ வென்று கருமமாராயும் ஆரூரன் அரவணையானும் பராக்கிரம சோழ மூவேந்த வேளானுக்கும், கடித் திரிய சிகாமணி வளநாட்டுத் திருநறையூர் நாட்டுக் கற்குடையான் பிசங்கன் பாலூராரான மீனவன் மூவேந்த வேளானுக்கும் தெரிவித்தனர். அவர் அதனை  முறையே புறவு வரித் திணைக் களத்தாரான கிளி நல்லூர்க் கிழவன் கொற்றன் பொற்காரி’ கழுமலமுடையான் சூற்றியன் தேவடி முதலியோர்க்கு அறிவிக்க, அவர்கள் அதனை ! வரிப்பொத்தகக் கணக்கரான, சாத்தனூருடையான் குமரன் அரங்கனுக்கும், பருத்தியூர்க் கிழவன் சிங்கன் வெண்காடனுக்கும் தெரிவித்தனர். அவர்கள் ஒருங்கே கூடியிருந்து, யாண்டு இருபத்தொன்றாவது நாள் தொண்ணூற்று அறிஞர் தெரிவித்தனர் . பள்ளிச்சந்தம் இறையிலியாக வரியிலிட்டுக் கொடுத்த தங்கள் நாட்டுப் பட்டினக் கூற்றத்து ஆனைமங்கலம் அளந்தபடி நீங்கல் நீக்கி நிலம் தொண்ணூற்றேழே இரண்டுமாக் காணியரைக் காணி முந்திரிகைக் கீழரையே இரண்டுமாவும் பிடி சூழ்ந்து பிடாகை நடப்பிப்பதாக ‘ என்று அறிவித்தனர்.

அவர்கள் வெண்ணெய் நல்லூர்த் தம்மடிபட்டன், தூப்பில் சீதாபட்டன் முதலியோரை வருவித்து,” எல்லே தெரிவித்துப் பிடி சூழ்ந்து பிடாகை நடந்து கல்லும் கள்ளியும் நாட்டி அறவோலை செய்து போதுக’ என்னும் வாசகத்தை நாட்டாருக்குப் பணித்தனர். நாட்டார் பலரும் பிடியானை பின்னே வர, ஆனைமங்கலமுடையான் கோன்புத்த வேளான் அப்பிடிமேல் இருந்து எல்லே தெரிவித்து நடத்தினான் . முடிவில் நாட்டார் பலரும் கூடிப் ” பட்டினக் கூற்றத்து நாகப்பட்டினத்துக் கடாரத் தரையன் எடுப்பிக்கின்ற சூளாமணி பன்ம விகாரத்துப் பள்ளிக்குப் பள்ளிச்சந்தம் இறையிலியாகக் கொடுத்த இந்நாட்டு ஆனைமங்கலம் பள்ளிச்சந்தம் இறங்கல் உட்பட யாண்டு இருபத்தோராவது முதல் பிடி சூழ்ந்து பிடாகை நடந்து கல்லும் கள்ளியும் நாட்டி அறவோலை செய்து கொடுத்தோ ” மென்று கையெழுத்திட்டுத் தந்தனர்.

இவ்வோலை பின்னர், அரசன் திருமுன் கொணரப்பெற்றது ; அதனை அரசியல் முதல்வர்கள் பலரும் ஆராய்ந்து ஒப்புதல் செய்தனர். இதற்கிடையே ஏறக்குறைய மூன்றாண்டுகள் கழிந்தன.

யாண்டு இருபத்துமூன்றாவது, நாள் நூற்றறுபத்து மூன்றில் உய்யக்கொண் டார் வளநாட்டுத் திரைழர் நாட்டு நாடார் கிழான் அரையன் அருமொழியான இராஜேந்திர சோழப் பல்லவரையனும், உய்யக்கொண்டார் வளநாட்டு வெண்ணுட்டுக் கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலத்துக் கிருஷ்ணன் இராமன் இராசேந்திர சோழப் பிரமராயனும் நித்த வளநாட்டுப் பாம்புணிக் கூற்றத்து அரைசூருடையான் ஈராயிரவன் பல்லவராயனும் உத்தம சோழப் பல்லவராயனும், இராசேந்திர சிம்ம வளநாட்டுக் குறுக்கை நாட்டுக் கடலங்குடி வேதகோமபுரத்துத் தாமோதரப்பட்டனும், உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டுக் குறும்பில் கிழான் அரையன் சிகண்டனை மீனவன் மூவேந்த வேளானும் ஒப்புநோக்கிக் கையெழுத்திட்டு உறுதி செய்தனர்.

சோழ வேந்தர் பெருமான் முதல் இராசராசன் நாகப்பட்டினத்தில் தான் எடுத்த புத்த விகாரத்துக்கு நிவந்தமளித்துப் பள்ளிச்சந்தமாக ஆனமங்கலமென்னும் என்னும் ஊரை அளித்த  ,செய்தியைக் கடார நாட்டுச் சூளாமணி வன்மன் கேள்வியுற்றுப் பெருமகிழ்ச்சியுற்றான். ஆயினும் அவன் அக்காலத்தே உடல் நலம் குன்றிப் படுக்கையிற் கிடந்தான் ; சில நாட்களில் அவன் இறந்தான் , அதற்குப்பின் அவன் மகன் மாற விசயோத்துங்க வன்மன் அரசு கட்டிலேறினான் . தன் தந்தை நாகப்பட்டினத்தில் எடுத்த புத்த சயித்தியம் முற்றுப்பெறாதபோதே இறந்ததும், அந்நிலையிலேயே சோழ வேந்தன் பள்ளிச்சந்தம் விட்டுச் சிறப்பித்ததும் அறிந்து சோழ மன்னனுடைய நட்புநலம் பெற்று அச்சைத் தியத்தை விரைவில் கட்டிமுடித்தான். இதுபற்றியே அவனுடைய வடமொழிச் செப்பேடுகள் நாகப்பட்டினத்துச் சூளாமணி வன்ம புத்த விகாரத்தை மாற விஜயோத்துங்க வன்மன் கட்டினான் என்று குறிக்கின்றன.

சில ஆண்டுகட்குப்பின் முதல் இராசராசன் மறைந்தான் ; அவன் மகனான இராசேந்திர சோழன் அரசகட்டிலேறிச் சோழநாட்டுப் பேரரசனாய் விளங்கினான் . அவன் காலத்தே பட்டினக்கூற்றத்து நாகப்பட்டினத்துப் புத்த சயித்தியப் பகுதி சோழகுலவல்லி பட்டினமெனப் பெயர் பெற்றது . இராசராசன் செய்த சிறப்புக்கு நன்றி பாராட்ட விஜயோத்துங்க வன்மன், சூளாமணி வன்ம விகாரத்தின் ஒரு பகுதிக்கு இராஜராஜப் பெரும்பள்ளியெனவும், ஒரு பகுதிக்கு இராசேந்திரனைச் சிறப்பித்து இராசேந்திர சோழப் பெரும்பள்ளியெனவும் பெயரிட்டான். அன்றிலிருந்து சூளாமணி வன்ம விகாரம் இப்பெயர்களே கொண்டு நிலவிவந்தது.

ஆண்டுகள் பல கழிந்தன. புத்த விகாரங்கட்குரிய இடங்களில் காணியாளர் பலர் புத்த சங்கத்தாரை ஏமாற்றி அவரது இடத்தைக் கவர்ந்துகொன்டனர் . தமிழ்நாட்டுப் பெருங்கோயில்களில் அவற்றிற்குரிய நிலங்களைக் கவர்ந்து பெருஞ்செல்வம் பெற்றுக் களிக்கும் கோயிற் பெருச்சாளிகள் அக்காலத்தே புத்த விகாரத்திற்குள் நுழைந்து அதன் செல்வநிலையைச் சீர்குலைத்தன. புத்த சங்கத்தார் மேற்கொண்ட வேண்டுகோளை ஏற்று ஆவன செய்யும் திறமை மாற விஜயோத்துங்கனுக்குப் பின் தோன்றிய கடாரத்தரசர்கட்கு இல்லாமற் போயின .

இந்நிலையில் கி.பி. பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதற் குலோத்துங்கன் இராசேந்திரனுக்குப்பின் தோன்றிய வேந்தர்கள் காலம், புத்த சங்கத்தார் தமது சயித்தியத்தின் நிலங்களை இழத்தற்கு வேண்டிய வாய்ப்பினையளித்தது. கடார வேந்தரும் சோழ வேந்தரும் போதிய துணை செய்யாமையால் புத்த விகாரத்தில் இருந்த சங்கத்தார் அரசியற் சலுகை பெறுதற்கு வழியின்றி வருந்தியிருந்தனர். முதற் குலோத்துங்கன் அரசனுக்குப்பின்  புத்த சங்கத்துக்கு ஒரு நற்காலம் வந்தது .

உரைவேந்தர் ஒளவை.சு.துரைசாமி

–   புத்த விகாரம் வளரும்

(தொடர்ச்சி வரும் 20/11/2019 புதன்கிழமை இதழில்)
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *