BREAKING NEWS

நாகப்பட்டினத்தில் புத்த விகாரம் ( சயித்தியம் ) – பகுதி (1) சமய உரிமைக்கு வாய்ப்பளித்த சமுதாயப் பெருமை ..!

மேனாட்டு மக்களின் நாட்டு வரலாறுகளைக் காண்போமானால் , அந்நாடுகளில் சமய ஒருமையைக் காண முடியாது  , சமய உரிமைக்காக போர்களே நடந்துள்ளன . கி.பி. ஒன்பது பத்தாம் நூற்றண்டுகளிலேயே நம் நாட்டில் நிலவிய சமய ஒருமையும் நல்லிணக்கமும் உரிமை கொண்ட நாகரிகமாகவே தழைத்து நின்றது .

நாட்டு மக்களுக்கு உள்ள உரிமைகளில் சமய உரிமையென்பது ஒன்று. அவரவரும் தாம் விரும்பிய தெய்வத்தை வழிபடுவது சமயவுரிமையாகும்; ஒருவர் மேற்கொண்ட தெய்வ வழிபாட்டையே பிறர் அனைவரும் மேற்கொள்ள வேண்டுமென வற்புறுத்துவது சமயவுரிமையைத் தடுக்கும் கொடுமையாம் என்பது இதன் கருத்து.

நம்முடைய நாட்டின் வடபகுதியில் அரசியல் மாறுதல்கள் உண்டான போது இச்சமயவுரிமையைப் பறிக்கும் கொடுமையும் விளைந்ததுண்டு .

கி.பி. ஏழு எட்டாம் நூற்றண்டுகளில் நம் தென்னாட்டில்  சமயத் துறையில் கிளர்ச்சிகள் உண்டாயின; ஆயினும் சமயவுரிமையைப் பறிக்கும் கொடுமை நிகழவில்லை . பெளத்தரும் சமணரும் சைவரும்  வைதிகருமெனப் பல சமயத்தவர் இந்த நாட்டில் தங்கியிருந்து தத்தம் சமயக் கருத்துகளை மக்களிடையே பரப்பினர்.

அப்போது பிற சமயக் கருத்துகளைச் சொற்போர் வாயிலாக பட்டிமண்டபங்கள் நடத்தி வாதிடுவது வழக்கமாக இருந்தது. இவற்றால் மக்களுடைய பொதுவாழ்வில் எந்தக்கேடும் உண்டாகவில்லை. அதனால், இந்நாட்டை ஆண்ட வேந்தர்கள் சமயச்சொற்போர்களைத் தடுக்கவில்லை.

கி.பி.ஏழாம் நூற்றண்டில் காஞ்சி மாநகரைத் தலைமையாகக் கொண்டு அரசு நடத்திய பல்லவ வேந்தனான  முதல் மகேந்திர வர்மன்  ஆட்சியில் பெளத்தம், பாசுபதம், காபாலம், சமணம் என்ற சமயங்கள் இருந்த திறத்தை அவன் எழுதிய நாடகத்திலே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறான் .

தான் சமண சமயத்தை மேற்கொண்ட போதும் பின்னர் சைவத்தை மேற்கொண்ட போதும் அவன் நாட்டில் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை .

அசோக மன்னனுடைய கல்வெட்டுகளில் வேற்றுச் சமயங்கள் இருப்பதும் தெரிகிறது , கிறித்து  பிறப்பதற்கு முன்பிருந்த காலமுதலே சமய உரிமையை மதித்தொழுகும் பெருமை விளங்கியது . சைவ சமய அருளாளர்கள் காலத்தும் –  வைணவ ஆழ்வார் காலத்தும் சமய உரிமை காக்கப்பட்டு வந்தமை நடு நின்று நோக்கும் நல்லோர்க்குத் தெளிவாகும் .

பல்லவராட்சிக்குப்பின் சோழ வேந்தரது ஆட்சி தமிழகத்தில் மேன்மையடைந்தது. இடைக்காலத்தில் விசயாலயன் வழிவந்த சோழ வேந்தர்கள் தமிழகம் முழுதும் ஆண்டனர் ; அவர்கள் காலத்தே சைவ, வைணவ சமயங்கள் வங்கக் கடலைக் கடந்து கிழக்கிந்தியத் தீவுகள் எனப்படும் சாவகம் முதலிய தீவுகளிலும் சென்று பரவின.

விசயாலயன் வழிவந்த சோழ வேந்தர் அனைவரும்  சைவ வேந்தராவர்; தென்னாட்டில்  சிவன் கோயில்கள் மிகப் பலவாய் வானளாவி நிற்கும் கோபுரங்களாலும் மதில்களாலும் சிறப்புற்றிருப்பது இவ்வேந்தர்களின் சமயப்பணியாகும். சைவத் திருமுறைகளை வழங்கிய அடியார்களும் – திருவிசைப்பாத் திருமுறையைப் பாடிய சான்றோருள்  இராசகேசரி வன்மரான கண்டராதித்த சோழரும் ஒருவராவர்.

சங்க காலத்திருந்தே சீன நாட்டு வேந்தர்க்கும்  – கடாரத்தரசருக்கும் தமிழகத்தோடு தொடர்பிருந்ததென்பதைச் சங்க நூல்கள் குறிக்கின்றன. அது முதற்கொண்டே சீன நாட்டவர் தொடர்பு தமிழகத்தில் இருந்து வந்தது. நம் நாட்டின் வடபகுதியில் புத்த தருமம் தோன்றியபின் அது சீனநாட்டுக்குச் சென்றது ; சீனநாடு புத்த சமயம் நிலவும் பெருநாடாக மாறிற்று. புத்த பகவான் தோன்றிய நாடாதலால் சீனருக்கும் நம் நாட்டின் பால் பெருமதிப்புண்டாயிற்று. சீனநாட்டுப் புத்த துறவிகள் பண்டை நாளிலிருந்தே நம் நாட்டுக்கு வருவதும் சிலகாலம் இங்கே தங்கியிருப்பதும் பின்பு தமது நாட்டுக்குத் திரும்பிச் செல்லுவதுமாக இருந்தனர் . இது அவர்களுள் சிலரை புத்த சமய ஒழுக்கத்துக்கே ஆட்கொண்டதும், அவர்கள் பல்கலைக்கழகத்தில் பயின்றதும் குறிப்பிடத்தக்கது .

யுவான்சாங் முதலியோர் நம் நாட்டிற்கு வந்திருந்து அந்நாளில் தாம் கண்ட சிலவற்றைத் தம் குறிப்புக்களில் எழுதினர் . யுவான்சாங்  வந்திருந்தபோது நம் தமிழகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட “ சங்காராமங்கள்” இருந்தன என்றும், பத்தாயிரவர்க்குக் குறையாத “குருமார்கள் தேரவாதம் (ஸ்தவிர வாதம்) பயின்றனரென்றும்,” ததாகதர்” உரைத்த அறங்கேட்டு நாட்டவர் பலர் புத்தர்களாயிருந்தனரென்றும், சோழ பாண்டிய நாடுகளில் புத்தர்களும் புத்த நெறியும் மிகுதியாக உண்டெனினும் அவர் காலத்தே ” புத்த கருமம்” அருகியிருந்ததென்றும் வரைந்தார்.

சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்ட பின், பட்டினம் எனப் பெயர் பூண்ட ஊர்கள்  பல கீழை நாட்டவரோடும், அயல் நாட்டவரோடும் வாணிகம் புரிந்தனர். அவற்றுள் நாகப்பட்டினமும் ஒன்று. இங்கே சோழவேந்தர் ஆட்சி இடைக்காலத்தே தோன்றிச் சிறப்பதற்கு முன்பே  புத்த துறவிகள் பலர் தங்கிச்  சங்காராமங்கள்  நிறுவித் தமது ‘ புத்த தருமத்தை மக்கட்கு அறிவுறுத்தி வந்தனர். அக்காலத்தே தமிழகத்தை ஆண்ட அரசர்கள் அவர்கட்கு வேண்டுமான,.பாதுகாப்பு ஒழுங்குகளை அளித்தனர் .

இடைக்காலச் சோழர்கட்கு முன்பு தொண்டை நாட்டை ஆண்ட  மகேந்திரவன்மனுக்கு முன்னோருள்  ஒருவனாய்  விளங்கிய இரண்டாம் நரசிங்கவர்மன் காலத்தில் சீன நாட்டில்  அரசாண்ட சீனவேந்தன் நாகப்பட்டினத்தில் புத்த பகவானுக்கு ஒரு கோயிலெடுக்க விரும்பினான் . இரண்டாம் நரசிங்கனும் , கோக்கழற் சிங்கனும் அவன் விரும்பியவாறே புத்த சயித்தியம் அமைக்க இசைந்தனர். இதனைச் சீனவேந்தனுக்குத் தெரிவித்து தக்க பெயரைத் தெரிவிக்குமாறு சீனவேந்தனேக் கேட்டான். தன் வேண்டுகோளை ஏற்றுச் சயித்தியம் ஒன்றை நிறுவிய நரசிங்கவன் மனது நற் பண்பை வியந்து அச்சீன வேந்தன் உயர்நிலைத் தூண் ஒன்றைத் தன் நினைவளிப்பாகத் தந்தான். புத்த சயித்தியம் நின்று நிலவியது .

சில ஆண்டுகள் கழிந்தன . சைவ சமய வளர்ச்சியாலும், அரசியல் போக்கினாலும் சீனர்களின் போக்குவரவு குறைந்தது . சீனநாட்டுக்கும் தமிழகத்துக்கும் இடையிலுள்ள அருமணம் (Burma  – கடாரம்), மலயம், சண்பகம், சாவகம் முதலிய பகுதிகளில் வாழ்ந்த மக்களிடையே அரசியல் மாறுதல்களும் தோன்றின.

கடார நாட்டில் சயிலேந்திரர் மரபில் வேந்தர் தோன்றி ஆட்சிபுரிந்தனர். அவர்கள் பலரும் புத்தர்களாகவே காணப்படுகின்றனர். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் அருமணத்தின் வடபகுதியில் வாழ்ந்த சயிலேந்திர வேந்தன், வங்க வேந்தனான தேவபாலனை வேண்டி நாலந்தாவில் புத்த விகாரமொன்றை ஏற்படுத்தினான் . கி.பி. ஒன்பது பத்தாம் நூற்றாண்டில் சயிலேந்திர சூளாமணி வர்மன்  அருமண நாட்டின் தென்பகுதியிலிருந்து அரசுபுரிந்தான்.

இச்சூளாமணிவன்ம சயிலேந்திரன், நாலந்தாவில் புத்த விகாரம் தோன்றியதை அறிந்து,  நம் தென்னாட்டில்  ஒரு புத்த விகாரத்தை நிறுவ விரும்பினான்,  அது குறித்து அவன் செய்த முயற்சியால் நாகப்பட்டினத்தில் சீன வேந்தன் பெயரால் தோன்றி நின்ற புத்த சயித்தியம் அப்போது சீர்குலைந்திருப்பது தெரிந்தது. அக்காலத்தே சோழநாட்டில் தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு முதல் இராசராசன் தனது புகழ்மிக்க பேரரசை நிறுவித் திகழ்ந்தான்; சோழவேந்தனிடம் சூளாமணி வன்ம சயிலேந்திரன் தன் விருப்பத்தை நிறைவேற்றுமாறு

கேட்டுக்கொள்ளும் திருமுகமொன்றை அரசர்க்குரிய சிறப்புடன் பணிவுடன் அனுப்பி வைத்தான் .

உரைவேந்தர் ஒளவை. சு. துரைசாமி,

–   புத்த விகாரம் வளரும்…

                                                                                           (தொடர்ச்சி வரும் 13/11/2019 புதன்கிழமை இதழில்)
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *