BREAKING NEWS

நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தததால்  பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அம்பலம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்ததன் மூலம், தமிழகத்தில் பா.ஜ.க.- அ.தி.மு.க. இடையே இருந்த மர்மக்கூட்டணி அம்பலம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு அநீதி

தமிழகத்தின் நலன்களை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்துள்ள மத்திய அரசிற்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்காமல், தமிழக மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்திருக்கும் முதலமைச்சருக்கு கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். `நீட்’ தேர்வுக்கு எதிரான மசோதோக்களுக்கு குடியரசுத் தலைவர் அனுமதி பெறாமல், தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைத்துள்ளது மத்திய அரசு.

சர்வாதிகாரம்

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் தாமதத்தை உருவாக்கியதும், 15 ஆவது நிதி ஆணையத்தின் மூலம் மாநில நிதிப்பங்கீட்டை குறைக்கும் முயற்சி, உயர் கல்வி ஆணையத்தை அமைத்து மாநில உரிமைகளைப் பறிக்க முற்படுவது, அணை பாதுகாப்புச் சட்டம் என்று அணைகளின் கட்டுப்பாட்டைக் எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறது. ஒட்டு மொத்தமாக மாநிலத்தின் அதிகாரங்களை அபகரித்து சர்வாதிகார முறையில் ஆட்சி நடத்துகிறது மத்திய அரசு.

தமிழகத்திற்கு எந்தவொரு முக்கியத் திட்டங்களுக்கோ, நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கோ நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. வர்தா புயல், சென்னை வெள்ளம், `ஓகி’ புயல் என்று எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை. 19 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிதியையும் மத்திய அரசு இன்னும் கொடுக்கவில்லை.

கூட்டணி அம்பலம்

நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும், மாநில சுயாட்சிக்க்கும் முற்றிலும் எதிராகச் செயல்படும் மத்திய அரசை எதிர்க்க முதுகெலும்பின்றி, பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ள முதல்வரும், தமிழ்நாட்டின் சுயமரியாதையை அடகு வைத்திருக்கும் அ.தி.மு.க எம்.பி.க்களும் தமிழக மக்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்திருக்கிறார்கள். மத்திய அரசை ஆதரித்ததன் மூலம் பா.ஜ.க –-அ.தி.மு.க. இடையே உள்ள மர்மக்கூட்டணியும் அம்பலமாகி விட்டது.

திடீரென்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிற்கு நான்கு நாட்களுக்கு முன்பு முதலமைச்சருடைய சம்பந்தியின் பங்குதாரரின் நிறுவனங்களில் வருமான வரித்துறையை ஏவி சோதனை செய்த பா.ஜ.க.வின் உள்நோக்கம் நிறைவேறி விட்டது.

தி.மு.க. அனுமதிக்காது

அ.தி.மு.கவின் எம்.பி.க்களை வளைப்பதற்காக பா.ஜ.க. எடுத்த பிரத்யேக முயற்சி தான் இந்த வருமான வரித்துறை சோதனை. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக, வருமான வரித்துறையை துஷ்பிரயோகம் செய்து அதன் நம்பகத்தன்மையை சீர்குலைத்திருக்கும் மத்திய அரசையும், மத்திய அரசை ஆதரித்திருக்கும் அ.தி.மு.க அரசையும் தமிழக மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பா.ஜ.க.வை ஒரு போதும் தி.மு.க. அனுமதிக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply