BREAKING NEWS

நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்காது –  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.


 

மத்தியில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக இன்று எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூசகமாக தெரிவித்தார்.

ஆந்திரா முதல்வர்

மத்தியிலுள்ள பா.ஜ.க. அரசுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியில் இருந்தது. ஆந்திர மாநிலத்திற்கான சிறப்பு சலுகைகளை பா.ஜ.க. அரசு வழங்கவில்லை என்றும், எனவே அந்த கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் என்றும் தெங்கு தேச கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த மக்களவை கூட்டத்தின் போது, மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முயற்சி செய்தது. இது வெற்றி பெறவில்லை. இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார். இதற்காக காங்கிரஸ்-பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் ஆதரவையும் சந்திரபாபு நாயுடு கோரினார்.

இன்று நடக்கிறது

இந்த சூழ்நிலையில், நேற்று முன் தினம் மக்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இதில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீசை மக்களவை சபாநாயகரிடம் தெலுங்கு தேசம் கட்சி நேற்று முன் தினம் கொடுத்தது. இதை ஏற்றுக் கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை (இன்று) நடக்கும் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

இதற்கிடையே, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூசகமாக நேற்று அறிவித்தார்.

நேற்று, காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி மேட்டூரில் நடந்தது. இதில் பங்கேற்ற பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

முதல்வர் பேட்டி

அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

கேள்வி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதியில்லாமல் திறக்கக்கூடாது என்று பி.ஆர்.பாண்டியன் அவர்கள் கூறியிருக்கிறாரே?

பதில்: அவருக்கு சட்டத்தைப் பற்றி என்ன தெரியும்? அவர் விவசாய சங்கத் தலைவர்தான். ஆனால், அரசாங்கத்திற்கு சட்டம் முழுவதும் தெரியும். அந்த உரிய தலைவருக்கு தகவல் அனுப்பப்பட்டுவிட்டது. அந்தத் தகவலின் அடிப்படையில்தான் தண்ணீர் திறக்கப்பட்டது.

சோதனை

கேள்வி: எஸ்.பி.கே.நிறுவனத்தில் வருமானவரித் துறை ரெய்டு குறித்து …?

பதில்: தமிழ்நாட்டில், வரிவசூல் செய்வதற்கு விற்பனை வரி வைத்திருந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு கடைகளிலும் எவ்வளவு மொத்த விற்பனை செய்கிறார்கள் என்ற கணக்கு இருக்கிறது. அந்தக் கணக்கின் அடிப்படையில் வரியை செலுத்தினால் எங்கேயும் ரெய்டு செய்யமாட்டார்கள். ஆனால் குறைத்து வரி செலுத்தினால், அந்தக் கடைகளில் சோதனை செய்வார்கள்.

அதேபோல, மத்திய அரசில் வருமான வரித்துறை, ஒவ்வொரு தொழில் செய்பவர்களையும் கண்காணிப்பார்கள், அவர்கள் எவ்வளவு தொழில் செய்கிறார்கள், எவ்வளவு வருமானம் வருகிறது, அந்த வருமானத்திற்கு ஏற்றவாறு வரி கட்டுகிறார்களா என்று பார்ப்பார்கள். அவர்களது வருமானத்திற்கு ஏற்றவாறு வரி கட்டாமல், குறைவாக வரி கட்டியிருந்தால் வருமானவரி சோதனை செய்வார்கள், இது வழக்கமாக நடைபெறும் ஒன்று . அண்மையில் கூட, 350 கோடிக்கு ஒரு நிறுவனத்தில் செய்தார்கள். இதுபோல பலமுறை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே வருமான வரி சோதனை நடைபெற்றிருக்கிறது.

ராஜினாமா?

அவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வேண்டும், ஸ்டெர்லைட் எடுத்தார்கள், உடனே ராஜினாமா செய்யவேண்டும் என்பார்கள், காவிரி பிரச்சினை வந்தது, சரியாக உச்சநீதிமன்றத்தில் வாதாடவில்லை, ராஜினாமா செய்யவேண்டும் என்று சொன்னார்கள், இப்பொழுது இதை எடுத்துக் கொண்டார்கள். சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன் கேள்வி எழுப்பினார். எல்-1, எல்-2 இருக்கிறது, நீங்கள் எல்-2-விற்கு தான் கொடுக்கிறீர்கள் என்று சொன்னார்கள்.

ஆனால் அவர் எனக்கு உறவினராவதற்கு முன்னாலேயே டெண்டர் போட்டது, அது உயளந நடந்து கொண்டிருக்கிறது, அது தெரியாமல் அவர் கேட்டார். அது யார் டெண்டர் என்றால், மச்சினனும், மச்சினனும் தான் போட்டார்கள், வேறு யாரும் போடவில்லை, மச்சினனும், மச்சினனும்தான் டெண்டரில் போட்டி போட்டு போட்டார்கள். போட்டபிறகு, அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றார்கள், எல்-1க்கு தீர்ப்பு ஆகியது. இரண்டாவது, நீதிமன்றம் சென்றார்கள், ஒரு மாதத்திற்கு முன் எல்-2 ராமலிங்கம் அண்டு கோ-வுக்கு தீர்ப்பாகி இப்பொழுது அவர் அந்தப் பணியை செய்கிறார். அன்றைக்கு தவறு என்று சொன்னார்கள். ஆகவே, டெண்டர் சட்டத்தில் யாருமே தப்பு செய்ய முடியாது.

டெண்டர் கொடுத்தனர்

இன்றைக்கு எனது உறவினருக்கு டெண்டர் கொடுத்தேன் என்று சொல்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், ராமலிங்கம் அண்டு கோ, ஈரோடு-க்கு 10 பணிகள் கொடுத்திருக்கிறார்கள், சுமார் 500 கோடி ரூபாய் அளவில் டெண்டர் கொடுத்திருக்கிறார்கள், அவர்கள் எப்படி அளித்தார்கள்?

அவர் 35 ஆண்டுகாலமாக ஒப்பந்தப்பணியில் ஈடுபட்டு, இன்றைக்கு கர்நாடகத்திலும், தமிழகத்திலும், பல்வேறு மாநிலங்களிலும் ஒப்பந்தப்பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். எனவே, ஒப்பந்தம் யார் வேண்டுமானாலும் போடலாம். அவர்களுக்கு தகுதி இருக்கிறதா, ஒப்பந்த விதிகளுக்குட்பட்டு அவர்கள் போட்டு இருக்கிறார்களா, அதையெல்லாம் ஆய்வு செய்துதான் அதற்கு உயர்மட்ட கமிட்டி அமைத்து, அந்த கமிட்டியின் மூலமாகத்தான் இதையெல்லாம் ஆய்வு செய்து சரியாக இருந்தால் தான் அவர்களுடைய ஆட்சியிலும் சரி, நம்முடைய ஆட்சியிலும் சரி. அதனால், இதில் எந்தவித முறைகேடு நடக்க வாய்ப்பே கிடையாது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக பேசப்படுகிற விஷயம்.

22 நாள் நடக்கவில்லை

கேள்வி: நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிமுக-வின் நிலை குறித்து …?

பதில்: நம்பிக்கையில்லா தீர்மானம் நான் கொண்டு வரவில்லை. ஆந்திர மாநிலத்தினுடைய பிரச்சினைக்காக அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறார்கள். நாம் தமிழ்நாட்டினுடைய பிரச்சினைக்காக அப்பொழுது காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் 22 நாட்கள் அவையே நடக்க முடியாத ஒரு சூழ்நிலையை, அங்கே குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

நமக்கு யார் குரல் கொடுத்தது?

அப்பொழுது நமக்கு யார் குரல் கொடுத்தார்கள்? யார் முன்வந்தார்கள்? நம்முடைய டெல்டா பாசன விவசாய மக்களுக்காக, நம்முடைய பிரச்சினை தீர்ப்பதற்காக எந்த மாநிலம் முன்வந்தது? எந்த மாநிலமும் முன்வரவில்லை.

நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் நம்முடைய தமிழ்நாட்டு மக்களுக்காக, தமிழ்நாட்டு விவசாய பெருங்குடி மக்களுக்காக, நம்முடைய உரிமையை பெறுவதற்காக, அரசின் சார்பாக, நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து நாடாளுமன்ற நிகழ்வே முடங்குகின்ற ஒரு சூழலை ஏற்படுத்தினார்கள். அப்பொழுது யாரும் நமக்கு துணை நிற்கவில்லை. அவரவர் மாநிலங்கள் என்று வரும்பொழுது பிரச்சினையை கிளப்புகின்றார்கள்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.




Leave a Reply