தற்போதைய செய்திகள்
eps

நடவு நட்டப் போது இடி-மின்னல் தாக்கியும், கன்னியாகுமரியில் மரம் விழுந்து பலியான 9 பேரின்,குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு…

சென்னை,
நடவு நட்டப் போது இடி-மின்னல் தாக்கி பலியான 4 விவசாயிகள் மற்றும் கன்னியாகுமரியில் கனமழையினால் மரம் விழுந்து பலியான 5 பேர் என மொத்தம் 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி வழங்கிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நடவு பணி

இதுகுறித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக அரியலூர் மாவட்டம், கீழக்காவட்டாங்குறிச்சி மதுரா சேனாபதி கிராமத்தில் 27.11.2017 அன்று வயலில் நடவு பணியில் ஈடுபட்டிருந்த மேலக்கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த உண்ணாமலை,
செந்தமிழ்செல்வி, அஞ்சலை மற்றும், கோவில்எசனை மேற்கு கிராமத்தைச் சேர்ந்த கண்ணுசாமி ஆகிய நான்கு பேர் இடி மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
பேரிடர் நிதி
இடி, மின்னல் தாக்கியதின் காரணமாக உயிரிழந்த மேற்படி நான்கு பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில், 29.11.2017 மற்றும் 30.11.2017 ஆகிய தேதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக ராஜாக்கமங்கலம், கார்த்திகை வடலியைச் சேர்ந்த ராஜேந்திரன், கீழபால்கிணற்றான் விளை, சிவசெல்வபுரம் பகுதியைச் சேர்ந்த குமரேசன், மலையடி, வன்னியூரைச் சேர்ந்த அலெக்சாண்டர், மண்டைக்காடு மணலிவிளையைச் சேர்ந்த சரஸ்வதி மற்றும் பறளியார் எஸ்டேட்யைச் சேர்ந்த விமல்சிங் ஆகிய ஐந்து பேர் பலத்த காற்றின் காரணமாக மரம் முறிந்து விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
5 பேர் பலி

அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply