BREAKING NEWS

நகைக்கடை, ஜவுளிகடைகள் வருமான வரி சோதனை – ரூ.7 கோடி, 15 கிலோ தங்கம் பறிமுதல்.

சென்னையில் நகைக் கடை, ஜவுளிக்கடைகள் என 23 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. இதில் ரூ.7 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஐ.டி., ரெய்டு

சென்னையில் உள்ள பிரபல நகைக் கடையான மேத்தா ஜூவல்லரி, அதன் உரிமையாளருக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அபிராமபுரம், சி.பி. ராமசாமி ரோடு, நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் ரோடு, தி.நகர் உஸ்மான் ரோடு மற்றும் தி.நகர் திருமலை பிள்ளை சாலையில் உள்ள நகைக் கடை, இந்த நகைக் கடையின் உரிமையாளர் சுரேந்தர் ேமத்தா, அவரது சகோதரர் துஷார் மேத்தா, மகன் நரேஷ் மேத்தா அவரின் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.

இதற்காக காலை 6 மணிக்ெகல்லாம் அதிகாரிகள் அங்கு நுழைந்து விட்டனர்.

23 இடங்களில்..

இதேபோன்று பல்லாவரம் இந்திரா காந்தி சாலையில் உள்ள சந்தோஷ் ஜூவல்லரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும் பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, சவுகார்பேட்டையில் உள்ள ஜெயின் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய இடங்களிலும் இந்த சோதனை நடந்தது. அந்த வகையில் சென்னையில் மட்டும் 23 இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளது.

15 கிலோ தங்கம் பறிமுதல்

அப்போது ரூ.7 கோடி ரொக்கம் மற்றும் 15 கிலோ தங்கம் சிக்கியதாக கூறப்படுகிறது. இதுதவிர வருமான வரித்துறை அதிகாரிகளால் மேலும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனங்கள் கோடைக்கால விற்பனை என்று சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்துள்ளது.

அப்போது கோடிக்கணக்கில் வருமான வரி ஏய்ப்பு நடந்து உள்ளது. இதுகுறித்த புகார்கள் வருமான வரித்துறையினருக்கு கிடைத்து உள்ளது. அதனடிப்படையிலே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாகவும் தெரிகிறது.

இதுமட்டுமின்றி இந்நிறுவனங்கள் 75 ஆண்டுகாலம் பாரம்பரியமிக்கது என்றும் கூறப்படுகிறது. இதனடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.

அதிகாரி பேட்டி

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இங்கு சோதனை நடத்தி வருகிறோம்.

இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. இந்த ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறோம். ஆய்வு முடிந்த பின்னரே முழுமையான தகவல்கள் கிடைக்கும்.’’ என்றார். சென்னையில் 23 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

—–




Leave a Reply