BREAKING NEWS

தோனியின் பிட்னஸ் ரகசியம் என்ன?

 

 


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது உடல்திறனை மேம்படுத்தும் விதமாக தனக்கென தனி பிட்னஸ் பாணியைக் கடைபிடித்து வருகிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது 37-ஆவது பிறந்தநாளை  கொண்டாடினார். இதையடுத்து பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது ரசிகர்களும் நள்ளிரவு 12 மணி முதல் தங்களுடைய வாழ்த்துகளை இணையதளங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

500 சர்வதேச போட்டி

2004-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தோனி, கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். மேலும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரைத் தொடர்ந்து 500 சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கிய 3-ஆவது இந்தியர் என்ற சாதனையையும் மகேந்திர சிங் தோனி படைத்தார்.

இளம்வீரர்களுக்கு சவால்

இந்நிலையில், இந்திய அணியில் உடற்தகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வீரர்களில் ஒருவராக இருக்கும் தோனி, 37 வயதிலும் சிறந்த உடல்திறனுடன் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு காரணம் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெறும் இவ்வயதிலும் இளம் வீரர்களுக்கு ஆட்டத்திறனிலும், உடல்திறனிலும் கடும் போட்டியாகவே தோனி இருந்து வருவது தான்.

அறிமுகமானது முதல் கடந்த 15 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என இந்திய அணியில் அதிகம் இடம்பிடித்த வீரராக திகழ்கிறார். அதிலும் கிரிக்கெட்டில் மிகவும் கடினமாக விக்கெட் கீப்பிங் பணியைச் செய்து வருபவர். அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன தோனியிடம் ஆரம்ப காலத்தில் அவரின் வலிமை குறித்து கேட்டதற்கு, தினமும் 5 லிட்டர் வரை பால் குடிப்பதாக கூறியிருந்தார்.

மாற்றம்

இருப்பினும், தற்போதைய காலகட்டத்தில் உணவு முறைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றாலும் அதை சீர்படுத்திக்கொண்டுள்ளார். அதுபோல தனக்கென பிரத்தியேக பயிற்சி முறையையும் கடைபிடித்து வருகிறார். பெரும்பாலும் வீட்டு உணவுகளையே அதிகம் விரும்பும் தோனி, அதில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், கோழி இறைச்சி, பழம் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்கிறார். இவற்றில் கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், துரித பானங்கள், சோடா வகைகளை முற்றிலும் தவிர்த்துவிடுகிறார்.

உணவு பழக்கம்

காலையில் பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் பால் எடுத்துக்கொள்கிறார். மதியம் ரொட்டியுடன் தால் மற்றும் பட்டர் சிக்கன் விரும்புவார். இடையில் அவ்வப்போது காய்கறி சாலட், சிக்கன் சாண்ட்விட்ச் எடுத்துக்கொள்வார். போட்டி நடைபெறும் நாட்களில் அதிக புரதம் கொண்ட பானங்கள் மற்றும் பழச்சாறுகளை எடுத்துக்கொள்வார். இவற்றுடன் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை அதிகம் விரும்பி உண்ணக்கூடியவர். இருப்பினும் நண்பர்களுடன் இருக்கும்போது இதுபோன்ற உணவுக் கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. ஏனெனில் அச்சமயங்களில் அனைத்து வகை உணவுகளையும் புசிப்பதில் ஆர்வம் கொண்டவர்.

ஜிம்மை விரும்பாத தோனி

இதர வீரர்களைப் போன்று அதிக நேரம் ஜிம்மில் சென்று உடற்பயிற்சி செய்வதை விரும்பாத தோனி, தினமும் தேவையான உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக பாட்மிண்டன் மற்றும் தனக்கு மிக விருப்பமான கால்பந்து ஆட்டங்களை அதிகம் விளையாடுபவர். இதனாலேயே கிரிக்கெட் களத்தில் தன்னால் சுறுசுறுப்பாக செயல்பட முடிவதாகவும், வேகமாக நகர்வதற்கும், துல்லியமான பார்வையும் கிடைப்பதாக தோனி தெரிவித்துள்ளார். இன்று வரை வேகமாக ஓடி ரன்கள் சேர்ப்பதில் தோனி கில்லாடி. இதில் இவருடன் போட்டியிட்டு இளம் வீரர்களும் தோற்பது உண்டு.

தீவிர உடற்பயிற்சி

விக்கெட் கீப்பிங் செய்யும் போது குறைந்தபட்சம் 300 முறையாவது ஸ்குவாட்ஸ் வகைப் பயிற்சியை செய்தாக வேண்டும். உடனடியாக பேட்டிங் செய்யவும் வரவேண்டும். அப்படி இருக்கையில் தோனி சிறந்த உடற்திறன் கொண்ட வீரராக உள்ளார். அதிக நேரம் கடின உடற்பயிற்சிகளை செய்வதற்கு பதிலாக, தீவிரமாக உடற்பயிற்சி செய்வார் என்று தோனி குறித்து இந்திய அணியின் முன்னாள் பிஸியோதெரபிஸ்ட் ஜான் க்ளோஸ்டர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply