தற்போதைய செய்திகள்
mks.cms

தொண்டர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும்’,தி.மு.க. நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் கண்டிப்பு….

சென்னை,
தி.மு.க. மேல்மட்ட நிர்வாகிகள், தொண்டர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்று அந்த கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஸ்டாலின் தலைமை
தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த இரண்டு வருடங்களாக உடல்நலக்குறைவால், அவரது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில், கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் அந்த கட்சியின் செயல்தலைவரான மு.க.ஸ்டாலினே மேற்கொண்டு வருகிறார். இத்தகைய சூழ்நிலையில், கருணாநிதியின் எந்தவித வழிகாட்டுதலும் இல்லாமல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தி.மு.க. சந்தித்தது. ஆனால், இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைந்ததுடன் டெபாசிட்டையும் இழந்தது.
அதிரடி நடவடிக்கை
இந்த தோல்வியால், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்கு, தி.மு.க சார்பில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையில், கட்சி நிர்வாகிகள் சரிவர செயல்படாததே தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து, கட்சியில் இருந்து 150 நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
ஆய்வுக்கூட்டம்
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், வெற்றி பெற்றாக வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் தி.மு.க. உள்ளது. மேலும், இந்த வெற்றி மூலமே, அடுத்து நடைபெற உள்ள சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்றும் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
இதனால், மாநிலம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் பற்றி ஆலோசிப்பதற்காகவும், கட்சியில் உள்ள குறைபாடுகளை களைவதற்காகவும் மாவட்ட செயலாளர் முதல் ஊராட்சி நிர்வாகி வரை அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்கும் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை
இந்த ஆய்வுக்கூட்டத்தில், தொண்டர்களின் குறைகளை கண்டறிவதற்காக மிகப்பெரிய அளவிலான புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகார்பெட்டியில், இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெற்ற கூட்டத்தில் அதிகளவில் புகார்கள் குவிந்துள்ளன. பெரும்பாலான புகார்களில் தொண்டர்களையும், கீழ்மட்ட நிர்வாகிகளையும் மேல்மட்ட நிர்வாகிகள் மரியாதையுடன் நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டே இருந்தது.
இதனையடுத்து, மாவட்ட செயலாளர் உள்பட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கீழ்மட்ட தொண்டர்களை மதித்து செயல்பட வேண்டும். அவர்களுக்கும் கட்சியில் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கண்டிப்புடன் எச்சரித்துள்ளார். மு.க.ஸ்டாலினின் கண்டிப்பை தொடர்ந்து, தி.மு.க.வின் கீழ்மட்ட தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Leave a Reply