தற்போதைய செய்திகள்

தேவாலயத்தில் போதகருடன் தகராறில் ஈடுபட்டதைக் கண்டித்து-சென்னையில் கிறிஸ்தவ அமைப்புகள் உண்ணாவிரதம் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரிக்கை….

சென்னை,

மதுரையில் தேவாலயத்துக்குள் புகுந்து போதகரை கடுமையாக திட்டியதைக் கண்டித்து, சென்னையில் கிறிஸ்தவ அமைப்புகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தகராறு

மதுரையில் உள்ள கூடல்நகர் பகுதியில் அமைந்துள்ளது சிக்கந்தர்சாவடி. இந்தப்பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்வதற்காக சிறிய அளவிலான தேவாலயம் ஒன்று உள்ளது. கடந்த 11ந் தேதி, இந்த தேவாலயத்தில் புகுந்த சிலர் தேவாலயத்தை உடனடியாக மூட வேண்டும் என்று அங்கிருந்த போதகரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

மேலும், இந்து முன்னணி அமைப்பினர் என்று தங்களைக் கூறிக்கொண்ட அவர்கள், தகாத வார்த்தைகளினால் கடுமையாக தாக்கிப் பேசினார். மேலும், கிறிஸ்தவர்களின் புனிதநூலான பைபிளையும், வசன பதாகைகளையும் கிழித்து சேதப்படுத்தினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உண்ணாவிரதம்

இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்த சம்பவத்தை கண்டித்தும் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனைத்துக்கிறிஸ்தவர் நலச்சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப்போராட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ போதகர்கள், கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனர்.

அப்போது, இந்த சம்பவத்துக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இந்தப் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக, போராட்ட ஒருங்கிணைப்பாளர் போதகர் சி.ஜே.சிபா கூறியதாவது:
மதக்கலவரம்
மதுரையில் தேவாலம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது இதுவரை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தகராறை, மதக்கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற ேநாக்கத்திலே மேற்கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு வேண்டும்
தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் உள்பட சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த தாக்குதலை மத்திய அரசும், மாநில அரசும் கண்டிக்க வேண்டும். இதற்கு, நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு லட்சம் கிறிஸ்தவர்கள் முதல்-அமைச்சர் அடுத்த மாதம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply