BREAKING NEWS

தேனியில் மட்டும் திமுக கூட்டணி தோல்வி ஏன்? வாய்ப்பை நழுவவிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தமிழகம், புதுவையில் நடந்த 39 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றது. ஆனால், தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக சார்பில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார் 65,717 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேனியில் இளங்கோவன் போட்டி

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் திமுக கூட்டணிக்கான ஆதரவு அலை வீசிய நிலையில் தேனியில் மட்டும் அதற்கு விதிவிலக்காக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தோல்வியடைந்தது அக்கூட்டணி கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்காக காங்கிரஸ் தலைமை கடைசி வரை திமுகவிடம் ஈரோடு தொகுதியைக் கேட்டுப் போராடியது. ஆனால், வைகோ, தங்களுக்கு ஒதுக்கிய ஒரே ஒரு தொகுதியை கணேசமூர்த்திக்காக ஈரோட்டில் கேட்டிருந்தார். அவர் கேட்டதிலும் ஒரு நியாயம் இருந்ததால் திமுக தலைமை ஈரோட்டை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க மறுத்தது. அதனால், வேறு வழியில்லாமல் ஈவிகேஎஸ்.இளங்கோவனை காங்கிரஸ் தலைமை தேனியில் போட்டியிட வைத்தது.

தோல்விக்கான காரணம்

தொகுதிக்கும், அங்குள்ள மக்களுக்கு நேரடி அறிமுகமும், சம்பந்தமும் இல்லாத ஈவிகேஎஸ்.இளங்கோவனை தேனியில் போட்டியிட வைத்ததும் அவரது தோல்விக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

ஈவிகேஎஸ்.இளங்கோவன், தமிழகம் அறிந்த ஒரு தலைவர். ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்தில் உச்சத்தில் இருந்தபோது அவரை எதிர்த்துத் துணிச்சலாகப் பேசியவர். ஜிகே.வாசனால் காங்கிரஸ் கட்சி உடைந்தபோது மாநிலத் தலைவராக காங்கிரஸ் கட்சியினர் அவர் பின்னால் போகாமல் கட்சியைக் காப்பாற்றியவர்.

பிரச்சாரம் செய்யவில்லை

மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராகவும், கட்சியில் மாநிலத் தலைவராகவும் இருந்தவர். ஆனால், தேர்தலில் அவர் ஒரு வேட்பாளராக தன்னைப் பார்க்காமல் ஒரு தலைவர் என்ற அந்தஸ்துடன் பிரச்சாரத்துக்கு கிராமங்கள்தோறும் செல்லவில்லை.

கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. அவர்களுடைய தேர்தல் வியூகங்களையும், ஆலோசனைகளையும் அவர் கேட்டுப்பெறவில்லை.

கூட்டணிக் கட்சியினர் ஆதங்கம்

தேர்தலுக்காக எடுத்த வாடகை வீட்டிலேயே அதிகமான நேரத்தைச் செலவிட்டதாகவும், ஈவிகேஎஸ்.இளங்கோவனை எளிதாக அணுக முடியவில்லை என்றும் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் நேரத்தில் ஆதங்கப்பட்டனர். இந்தத் தொகுதியில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அவரை எதிர்த்து அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார், அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் போட்டியிட்டதால் இந்தத் தொகுதியின் தேர்தலை ஒட்டுமொத்த தமிழகமே உன்னிப்பாக கவனித்தது.

மகனுக்காக ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தேர்தல் பணிக்குழுவை அமைத்து, தேனி தொகுதியில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் மகனை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்து, அவர்களுக்கு உடனடியாகச் செய்து கொடுக்கக்கூடிய உதவிகளை, கவனிப்புகளை தாராளமாகச் செய்தனர்.

மோடியின் பிரச்சாரம்

பிரதமர் மோடியும், ஓ.பன்னீர்செல்வத்துக்காக அவரது மகனுக்கு தேனியில் நேரடியாக வந்து பிரச்சாரம் செய்தார். அது அதிமுக கூட்டணிக் கட்சியினரை உற்சாகமடைய வைத்தது. ஆனால், ஈவிகேஎஸ்.இளங்கோவனோ, தனக்கே உரிய பாணியில், ‘‘மோடி தேனியில் பிரச்சாரம் செய்து சென்றுவிட்டதால், என்னுடைய வெற்றி உறுதி’’ என்று கிண்டல் செய்தார்.

ஆனால், அவரது தோல்வி தற்போது கட்சியில் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில் தேர்தலுக்கு முன் கட்சியிலும் பொதுவெளியிலும் விமர்சனங்களைச் சந்தித்து வந்த ஓ.பன்னீர்செல்வம், மகனின் வெற்றியால் கட்சியில் தனக்கான இடத்தைத் தக்க வைத்துள்ளார்.

மாலையில் மட்டும் பிரச்சாரம்

இது குறித்து காங்கிரஸ் கட்சியினரிடம் கேட்டபோது, ‘‘ஈவிகேஎஸ்.இளங்கோவன், மாலை நேரப் பிரச்சாரம் மட்டும்தான் செய்தார். நிறைய கிராமங்களுக்குச் செல்ல முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால், தமிழகம் முழுவதுமே வெயிலால் எல்லா வேட்பாளர்களும் காலை நேரப்பிரச்சாரத்தைத் தவிர்த்தனர்.

காலையில் நிர்வாகிகளிடம் ஆலோசனை, மாலையில் பிரச்சாரம் என்ற அடிப்படையில் தேர்தல் பணி செய்தோம். அவரை புது ஆளு என்று மக்கள் நினைக்கவில்லை. திமுகவின் கணிசமான வாக்குகளும் அவருக்குக் கிடைத்துள்ளது.

முக்கிய காரணங்கள்

அதிமுக மிகப்பெரிய அளவில் நெட்வொர்க் அமைத்து வாக்காளர்களைக் கவனித்ததே, அவர்கள் வெற்றிக்கு முக்கியக் காரணம். அதனால்தான், தங்க தமிழ்செல்வனுக்கே பெரியளவில் வாக்குகள் விழவில்லை. அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள்கூட அவருக்கு வாக்களிக்கவில்லை.

வாக்காளர்களை அதிமுகவினர் ஒரு வீடுகூட விடாமல் சென்று பார்த்து வந்தனர். ஈவிகேஎஸ் இளங்கோவன் தோல்விக்கு மற்ற எந்தக் காரணமும் இல்லை ’’ என்றனர்.




Leave a Reply