BREAKING NEWS

‘‘தேசத்துரோக குற்றம் சுமத்துவது வாடிக்கையாகிவிட்டது…!’’

அண்மைக்காலமாகவே நீதித் துறை தொடர்பான கருத்துகள்… வழக்குகள்… பணி நியமனங்கள் குறித்து பல்வேறு தரப்பினரிடையே ஐயங்களும் விவாதங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதியான கே.சந்துருவிடம் இது தொடர்பான ஒரு சில கேள்விகளை முன் வைத்தோம்…

இதோ நமது கேள்விகளும் நறுக்குத் தெறித்தாற் போன்ற அவரது பதில்களும்…

நாட்டில் சமீபத்திய காலங்களில் நடைபெற்று வரும் ‘ஜெய் ஸ்ரீராம்’ பெயரிலான தாக்குதலை எதிர்த்து, அதனைத் தடுக்கக் கோரி தென் இந்திய திரை பிரபலங்கள் 49 பேர் பிரதமருக்கு கடிதம் எழுதினர். அதன் தொடர்ச்சியாக அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. இது குறித்து உங்கள் கருத்து.

‘‘ உத்தரப் பிரதேசத்தில் யாரோ ஒருவர் கொடுத்த தனியார் புகார் மனுவை அங்குள்ள குற்றவியல் நடுவர் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 200வது பிரிவின் கீழ் அறிவிக்கை தவறான செயலாகும். அதை ரத்து செய்ய அலகாபாத் நீதிமன்றம் செல்ல வேண்டியிருக்கும்.  இப்படி பல நீதிமன்றங்களுக்கு ஒவ்வொருவரும் படையெடுத்துச் செல்வது பொருட்செலவு மட்டுமின்றி மன உளைச்சலையும் தரும் செயலாகும். அதனால்தான் தனியார் புகார்களை கோப்பில் எடுத்துக் கொள்ளும் முன் நீதிபதி அதன் முழு சாராம்சத்தையும் புரிந்து கொண்டு அப்புகாரை அப்படியே உண்மை என்று எடுத்துக் கொண்டால் குற்றம் நிரூபிக்கப்படும் என்று கருதினால் மட்டுமே சம்பந்தப்பட் ட நபர்களுக்கு அறிவிக்கை அனுப்ப முடியும்.

இப்படித்தான் திரைப்பட நடிகை குஷ்பு அளித்த பேட்டி ஒன்றை எதிர்த்து தமிழ் கலாசாரமே கெட்டுவிட்டது என்று தமிழ்நாட்டிலுள்ள குற்றவியல் நீதிமன்றங்கள் அனைத்திலும் வழக்கு தொடர்ந்து அவர்களுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டது. அதையெதிர்த்து ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் சென்று வராமலிருக்க அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவர் தொடுத்த வழக்கில் விசாரணைக்கு தனியார் புகார்களை எடுத்துக் கொள்ளும் குற்றவியல் நடுவர்கள் தங்களது முழு மனத்தையும் செலுத்தி குற்றம் நிரூபிக்க வாய்ப்பு இருந்தாலொழிய அறிவிக்கை அளிக்கக் கூடாது என்று கூறியுள்ளது.

தற்பொழுது 49 பிரபலங்கள் அறிவிக்கை அளித்துள்ள குற்றவியல் நடுவர் முன்னால் அவர்கள் பிரதம மந்திரிக்கு அனுப்பிய கடிதத்தின் அசல் கிடையாது.  மேலும் அது பொறுப்பிலுள்ள அதிகார மட்டத்தின் உச்சியில் இருக்கும் அமைச்சர் ஒருவருக்கு அனுப்பிய கடிதம். அக்கடிதத்தை பிரதம மந்திரி படித்தாரா என்று கூட தெரியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தனிப்பட்ட சிலரது விளம்பரத்துக்காக போடப்படும் வழக்குகளை அனுமதி கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால், இன்று தொலைக்காட்சிகளும் செய்தி ஊடகங்களும் பெருகிவிட்ட சூழ்நிலையில் சில நீதிபதிகளும் இப்படி ”புகழ்” தேடி அலைவது கண்டிக்கத்தக்கது.

இன்றைக்கு எவர் மீது வேண்டுமானாலும்  தேசத்துரோக குற்றம் சுமத்துவது வாடிக்கையாகிவிட்டது. ஜேஎன்யூ  மாணவர்த் தலைவர் கன்னையா குமார் முதல் மணிரத்னம் வரை அது தொடர்கிறது.  அச்சட்டப்பிரிவை எத்தகைய சூழ்நிலையில் பயன்படுத்தலாம் என்று வழிமுறைகளை உச்ச நீதிமன்றம் கேதார் நாத் (1962) வழக்கில் தெளிவாகக் கூறியுள்ளது. இருப்பினும் அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக அப்பிரிவு தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் விடிவு காண வேண்டுமென்றால் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124A ரத்து செய்யப்பட வேண்டும். இதுபோல் பிரபலங்கள்  மீது வழக்கு தொடர்வதனால் அப்பிரிவை ரத்து செய்யும் கோரிக்கைக்கு வலு சேரும். ’’

 

‘தமிழ்நாடு தேர்வாணையம்’ கீழமை நீதிமன்ற நீதிபதி தேர்வுகளுக்கு தமிழ் மொழி தெரியாதவர்கள் கூட விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. இது குறித்து உங்கள் கருத்து.

‘‘ அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 16(1) ன் கீழ் எல்லாவிதமான அரசு வேலைகளில் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டுமென்று போடப்பட்டுள்ளது. பிரிவு 16(2)ன் கீழ் எந்த இந்தியக் குடிமகனும் மதம், இனம், சாதி, பாலினம், பரம்பரை, பிறப்பிடம், உறைவிடம் போன்ற காரணங்களுக்காக மட்டுமே பொது வேலைவாய்ப்புகளில் வேறுபாடு காட்டக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது.

1980களிலேயே சென்னை உயர் நீதிமன்றம் எல்.ஐ.சி நிறுவனம் கடைநிலை ஊழியர்களை அலுவலகத்தையொட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களை மட்டும் முன்னுரிமை கொடுத்து வேலைக்கு எடுப்பதற்கு தடைவிதித்தது. அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மண்டல வாரியாக ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. தமிழ்நாட்டிலும் இடைநிலை ஆசிரியர்களை மாவட்ட ரீதியாக தேர்ந்தெடுப்பதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒன்றென்றால் கிருஷ்ணகிரி முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாவட்டங்களை வேறு வேறு தேர்ந்தெடுக்கும் பகுதிகளாக கருத முடியாது என்று கூறிவிட்டது. அதேபோல்தான் பல்கலைக்கழக மானியக் குழு கல்லூரி ஆசிரியர் பணிக்கு அரசு அகில இந்திய ரீதியில் விளம்பரம் அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. எனவே, பொது சேவைகள் / பணிகள் எவையாக இருப்பினும் அவற்றிற்கு அகில இந்திய ரீதியில்தான் மாநில அரசுகள் கூட பணிநியமனம் தர வேண்டும்.

மாவட்ட நீதிபதிகள் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நடுவர்கள் இவர்களை தேர்ந்தெடுக்கும் விதிகளை அந்தந்த மாநில அரசுகள் அங்குள்ள உயர் நீதிமன்றத்தின் கலந்தாலோசனையுடன் உருவாக்கினாலும், அந்த நீதிபதிகள் பணிக்கு தேர்ந்தேடுக்கும்போது அகில இந்திய ரீதியில் விளம்பரம் அளிக்க வேண்டும். தகுதியுள்ள இந்தியக் குடிமகன்கள்  அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் விதி. அதேசமயத்தில் மாநில அரசுகள் தங்களுடைய அலுவல்மொழியை அனைத்து ஊழியர்களும் அறிந்திருக்க வேண்டும் என்று கூறுவது சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சேவைகள் விதியின்படி (பிரிவு 12A) தமிழக ஆட்சிப்பணியில் பணியாற்றும் ஒவ்வொருவரும் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தமிழ்த்தேர்வில் பங்கு கொண்டு வெற்றி பெற்றால் மட்டுமே பணியில் தொடர முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் ஆண்டு ஊதிய உயர்வு மட்டுமே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது அவர்களை பணியிலிருந்து நீக்கவும் முடியும். தமிழ்நாட்டில் பணியாற்றுவதற்காக மாநில விருப்பம் தெரிவித்து வரும் இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி அதிகாரிகளுக்கும் இவ்விதி பொருந்தும்.

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தமிழ் ஆட்சி மொழி தேர்வுத்தாளை படித்தால் சிரிப்புதான் வரும். அத்தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் தமிழை தாய்மொழியாய் கொண்டிராத அலுவலர்களுக்கு உரையாடல் மற்றும் கோப்புகளை பரிசீலித்தல் இவற்றில் மிகவும் கஷ்டப்படுவார்கள்.

இருப்பினும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கான தேர்வில் தமிழ் தாய்மொழியில்லாத நீதிபதிகள் வெற்றி பெற்றாலும் அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை  தமிழில் நடத்த முடியாமல் தடுமாறுவார்கள். தீர்ப்புகளை ஆங்கிலத்திலேயே எழுதுவதற்கு உயர் நீதிமன்றம் விதி விலக்கு அளித்துள்ளது. இவ்வாறு விதிவிலக்கு அளிப்பதை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் (தற்பொழுது உச்ச நீதிமன்ற நீதிபதி) ரத்து செய்திருப்பினும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது.   அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலொழிய தமிழ் மொழி அறியாதவர்கள் தமிழ்நாட்டில் நீதிபதிகளாகவும் பணியாற்றலாம் என்ற கேவலமான சூழ்நிலை உள்ளது.

ஆனால், தற்பொழுது உச்ச நீதிமன்றம் அகில இந்திய நீதிபதிகள் சேவை என்ற அமைப்பை உருவாக்குவதன் மூலம் மாவட்ட நீதிபதிகள் நியமனத்தையே இந்திய ஆட்சிப்பணி போல் ஒரு அகில இந்திய சேவையாக மாற்ற முயற்சிக்கிறது. அக்கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

எனவே, மாவட்ட நீதிபதிகள் தேர்விற்கு தமிழை அத்தியாவசிய தேவையாக்குவதன் மூலம்தான் தமிழ் தெரியாத நீதிபதிகள் தமிழ்நாட்டில் நீதிபதியாக பணியாற்ற முடியாது என்ற சூழ்நிலை உருவாகும். அப்பொழுது அகில இந்திய ரீதியில் அளிக்கப்படும் விளம்பர வாய்ப்புகளை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நீதிபதி நியமனம் பெற விழைவோர் தமிழையும் கட்டாயமாக கற்றுக் கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

அகில இந்திய ரீதியில் நீதிபதி நியமனங்களுக்கு விளம்பரம் செய்வது அரசியல் சட்டப்படி கட்டாயத் தேவையாகும். அதைத் தவிர்க்க முடியாது.  கீழமை நீதிமன்றத்தில் நியமிக்கப்படும் நீதிபதிகள் தமிழரா (அ) இதர மாநிலத்தவரா என்பதல்ல முக்கியம். அவர்களால் நீதிமன்றத்தை தமிழ்மொழியில் பரிபாலனம் செய்ய முடியுமா என்பதுதான் முக்கியம்.

 

லட்சக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கியுள்ள நிலையில், நீதித் துறையில் எந்த மாதிரியான மாற்றங்களை செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்.?

நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே தேங்கியிருக்கும் வழக்குகளை பைசல் செய்து விட முடியாது.  தற்பொழுதுள்ள நடைமுறையில் அதிகரிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை வழக்குகளின் தேக்கத்தை குறைக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக தேங்கிக்கிடக்கும் வழக்குகளை பைசல் செய்ய வேண்டுமென்றால் அதற்கு பல கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக நீதிமன்றங்களின் விடுமுறைகளை குறைக்க வேண்டும். இன்றைக்கு நர்சரிப் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை விட குறைந்த நாட்களே நீதிபதிகள் வேலை செய்கிறார்கள். அது தவிர வக்கீல்கள் கேட்கும்போதெல்லாம் வாய்தாக்கள் அளிப்பது நிறுத்தப்பட வேண்டும்.  வக்கீல்கள் பிழைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வழக்குகளை ஆரம்ப கட்டத்தில் அனுமதிப்பதை கட்டுப்படுத்தி முதல் நோக்கில் அடிப்படையான சட்டப்பிரச்சினை இருந்தால் மட்டுமே வழக்குகள் மறுகட்ட விசாரணைக்கு அனுமதிக்கப்பட வேண்டும். புதிதாக அனுமதிக்கும் வழக்குகளை கட்டுப்படுத்துவதுடன் தேங்கியுள்ள பழைய வழக்குகளை முடிப்பதற்கு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் தவிர, எத்தகைய சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தகுதி, திறமையின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட வேண்டும்.   அறிவியல் சாதனங்கள் அதிகரித்துள்ள இச்சூழ்நிலையில் திட்டமிட்டு செயல்பட்டால் வழக்குகள் தேக்கத்தைக் குறைக்க முடியும்.  வழக்குகளின் தேக்கத்தைக் குறைப்பதற்காக சம்பந்தப்பட்டவர்களுடன் முறையான ஆலோசனை நடத்தப்பட்டு சிறப்பான திட்டமிடல் தேவை. ’’

– கே.சந்துரு,

மேனாள் நீதிபதி,  சென்னை உயர்நீதிமன்றம்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *