BREAKING NEWS

தென் அமெரிக்க நாடுகளில் நிகழும் அரசியல் மாற்றம்..!

உலக அளவில் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் தற்போது நடந்துவருகின்றன. எதற்கெடுத்தாலும் போராட்டம்… போராட்டம்… என்றால் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்கிற பிதற்றலுக்கு மாறாக, உலகமே தற்போது போராட்டத்தில்தான் மய்யம் கொண்டிருக்கிறது. சொகுசான வாழ்க்கைக்காகவும், உல்லாசங்களுக்காகவுமின்றி, அடிப்படைத் தேவைகளுக்கும், போதுமான உணவுக்கும், சுகாதாரமான வாழ்வுக்கும், சமூகப் பாதுகாப்பான வேலை வாய்ப்புக்கும் மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்கா இரண்டாம் உலகப்போரின் முடிவின் தொடக்கத்திலிருந்து உலக நாடுகளுக்கிடையே வல்லரசு நாடாகத் திகழ்ந்து வருகிறது. உண்மையில் வல்லரசு என்பதைக்காட்டிலும் ஏகாதிபத்திய நாடாக இருக்கிறது என்பதுதான் பொருத்தமானதாக இருக்கும். நைஜீரியாவில் எண்ணெய் வளங்களைத் கொள்ளையடிப்பதில் தொடங்கி, ஆப்பிரிக்கா நாடுகளின் கனிம வளங்களைச் சுரண்டுவதும், தென் அமெரிக்க நாடுகளைத் தங்களது நவீன காலணி நாடுகளாக மாற்றுவதற்கான முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது அமெரிக்கா. வெளிப்படையாகப் போர் தொடுத்து மக்களை அடிமைப்படுத்துவதற்கு மாறாக, நவீனமாக மக்களை முதாலாளித்துவ அரசாங்கங்களின் கீழ் கொண்டுவருவதன் மூலம், மக்களுடைய உழைப்பினை மலிவான விலைக்கு உறிஞ்சிக் கொழுத்துக்கொண்டிருக்கிறது. சிறுபான்மையின இஸ்லாமிய மக்களையும், நாடுகளையும் பயங்கரவாத நாடுகளாக சித்திரிப்பதில் அமெரிக்கா தொடர்ந்து வெற்றிகண்டு வருகிறது. உலகின் 70 சதவிகிதமான சொத்துகள் சில நூறு பெரு முதலாளிகள் கைகளிலும், உலகின் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வறுமையிலும், பசி பட்டினியிலும், நிச்சயமற்ற வாழ்க்கையிலும், நிரந்தரமற்ற வருமானம் ஈட்டும் தொழில்களிலும் இருப்பது என்பது எவ்வளவு பெரிய கொடுமை?

குளிருக்கு இதமாக ஒரு கோப்பை தேநீர் உங்களை உற்சாகமாக்கலாம். ஆனால், ஆனால், அந்தத் தேயிலையைப் பறிக்கும் கைகளுக்கு நெடிய வரலாறு உள்ளது. அந்த உழைக்கும் கைகள்தான் உலகினையே உருவாக்குகின்றது. கோடிக்கணக்கான உழைப்பாளர்களின் கரங்கள்தான் இந்த உலகத்தை சொந்தம் கொண்டாட வேண்டியவை. ஆனால், யதார்த்தத்தில் அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதுதான் நிதர்சனம். உலகின் வரலாறுகளை உழைப்பாளி மக்களின் கோணத்திலிருந்து எழுத வேண்டிய கட்டாயம் தற்போது தீவிரமடைந்துள்ளது.

பொலிவியாஈவோ மொராலிஸ்:

பொலிவியாவில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் ஈவோ மொரலிஸ் தவிர்க்க முடியாத வெற்றியைப் பெற்றுள்ளார். பொலிவியாவில் உள்ள புளுரிநேஷ்னல் மாகாணத்தில் நடைபெற்ற அதிபருக்கான மூன்றாவது மறு தேர்தலில் இந்த வெற்றியை ஈவோ மொராலிஸ் பெற்றிருக்கிறார். இந்தத் தேர்தலில் ஈவோவுக்கு 46.38% வாக்குகளும், கார்லோஸ் மேசாவுக்கு 36.03% வாக்குகளும் கிடைத்தன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அரசாங்கங்களை சீர்குலைப்பதற்காக அமெரிக்க மாநிலங்களின் அமைப்புகள் (Organizationof American States) மற்றும் வாஷிங்டன் முன்னெடுத்த பிரசாரங்கள் தோல்வியடைந்துள்ளன. இந்த தோல்வியானது புதிய தாராளமயக்கொடியை உயர்த்திப் பிடிக்கும் அமெரிக்காவுக்காவுக்கான தோல்வியாகும். ஆனாலும் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு புதிய முயற்சிகளை கார்லோஸ் மேற்கொண்டு வருகிறார். “ஒன்று நான் சிறைசாலைக்கு செல்ல வேண்டும், இல்லையெனில் அதிபராக வேண்டும்” என சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்துவருகிறார்.

பொலிவியாவின் ‘லா பஸ்’ (La Paz) தூதரகத்திலிருந்து அமெரிக்காவின் கூடுதல் வழிகாட்டுதலுடன் ‘அமெரிக்க மாநிலங்களின் அமைப்பானது’, பிராந்தியத்திலுள்ள ஜனநாயக வழிமுறைகளைக் கண்காணிக்கின்றது. என்பது போன்ற தொடர் குற்றச்சாட்டுகள் ஈவோ மொராலிஸ் சார்பில் நேரடியாக அமெரிக்கா மீது வைக்கப்படுகிறது. தென் அமெரிக்க நாடுகளைத் தங்களது நவீன காலணி நாடுகளாக வைத்திருக்க அமெரிக்கா தொடர்ந்து முயன்று வருகிறது. இந்நிலையில் பொலிவியாவில் இடதுசாரிகள் தலைமையில் ஈவோ மொராலிஸ் பெற்ற வெற்றியானது அமெரிக்காவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சிலியின் கிளர்ச்சி:

சிலியின் தலைநகரான சான்டியாகோவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று(25/10/2019) நடைபெற்ற போராட்டத்தில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் கலந்துகொண்டுள்ளனர். மக்கள் அரசியல், நிறுவன, தொலைநோக்கு, சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி முறை, பொருளாதாரம், வேலை ஆகியவற்றில் கட்டமைப்பு மாற்றங்களைக் கோரினர். தாராளமயக்கொள்கைக்கு எதிராக இவ்வளவு பெரிய மக்கள் திரள் போராடியது சிலியில் இதுதான் முதல் முறை. இது ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு என்று சிலி மக்கள் கருதுகின்றனர். போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்கப்படாததால் நூற்றுக்கும் மேற்ப்பட்ட சமூக அமைப்புகள் மற்றும், இயக்கங்கள் சேர்ந்து அக்டோபர் 30 அன்று தேசிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். நடந்து முடிந்த போராட்டத்தில் 42 பேர் இறந்துள்ளதாகவும், ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக போலீஸ் அடக்குமுறை காரணமாக 121 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 12-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன.

அர்ஜென்டினாஆல்பர்ட்டோ ஃபெர்னாண்டஸ்:

அர்ஜென்டினா நாட்டின் அதிபராக இடதுசாரி வேட்பாளர் தேர்வு. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் புதிய அதிபராகியுள்ளார் மத்திய-இடதுசாரி கொள்கையுடைய எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளர் ஆல்பர்ட்டோ ஃபெர்னாண்டஸ். அதிபர் தேர்தலில் மொத்தம் பதிவான 96.2% வாக்குகளில் 48.03% வாக்குகளைப் பெற்று ஆல்பர்ட்டோ ஃபெர்னாண்டஸ் ஏற்கெனவே பதவியில் இருந்த பழைமைவாத கட்சியின் மௌரிசியோ மக்ரியை வென்றுள்ளார். தேர்தலில் வெல்ல குறைந்தபட்சம் 45% வாக்குகளே தேவை. அர்ஜென்டினா மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு வறுமையில் உழலும் நிலையை தற்போதைய பொருளாதார நெருக்கடி உண்டாக்கியுள்ளது. தனது தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள மௌரிசியோ மக்ரி 40.44% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதன் மூலம் ஜனநாயகத்திற்குப் பின்னரான அர்ஜென்டினாவின் ஒன்பதாவது ஜனாதிபதியாக ஃபெர்னாண்டஸ் பதவியேற்கிறார்.

மேற்கண்ட நிகழ்வுகள் மக்களின் புதிய முயற்சியையும், அனைவருக்குமான சமூகத்தினை உருவாக்க விரும்பும் விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. தாராளவாத/தாரளமய பொருளாதாரக் கொள்கைகளை கடைபிடிக்கும் நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவு வேலை வாய்ப்பு பற்றாக்குறை, தனியார்மயத்தின் தலையீடுகள், மறுபுறம் மதவெறி அரசியல் போன்றவை வளர்ந்திருக்கின்றன. இந்தியாவிலும் இதே நிலைமைதான் நீடிக்கின்றது. இந்நிலையில் இந்தியாவும் இனி வரக்கூடிய காலங்களில் நவீன தாராளமய/தனியார்மய கொள்ளைகளுக்கு பதிலீடுகளாக ‘மாற்று பொருளாதாரக்’ கொள்கைக்கான பாதைக்கு பயணிக்கத் தன்னைத் தயார்படுத்த வேண்டியுள்ளது.

 

-கார்த்தி.ரா
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *