BREAKING NEWS

தென்மேற்கு பருவமழை தொடங்கியது

தென்மேற்கு பருவமழை தொடங்கியது. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, மே 25-

தென் மேற்கு பருவ மழை அந்தமான் – நிகோபார் பகுதிகளில் தொடங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:

கத்திரி வெயிலில் வாடி வரும் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை அறிவித்தார். அப்போது, அந்தமான் – நிகோபார் பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியிருப்பதாகக் கூறினார். மேலும், 48 மணி நேரத்தில் தென் மேற்கு பருவ மழை தெற்கு அரபிக் கடலின் சில பகுதிகள், குமரி, மாலத்தீவு பகுதிகளில் துவங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்மேற்கு பருவ மழை தொடங்குவதையொட்டி குமரி, கேரளா, லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும். அதே சமயம், இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் கன்னியாகுமரி, கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பகுதிகளில் மே 30-ந் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழக வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அதிகபட்சமாக திருவையாறில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மழை விவரம்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் திருவையாறு, சத்திரபட்டியில் தலா 8 செ.மீ., திருச்சுழி, கமுதி, காரைக்குடியில் தலா 7 செ.மீ., திருபுவனம், கடலாடி, பெரையாறு, சிவகங்கையில் தலா 6 செ.மீ., திருக்காட்டுபள்ளி, சாத்துார், திருப்பத்துார், செங்கம், ராசிபுரம், அரிமளம், மேலுார், பரமத்திவெல்லுாரில் தலா 5 செ.மீ., கதவூர், சிட்டாம்பட்டி, விருதுநகர், பஞ்சப்பட்டி, கூடலார் பஜார், நீடாமங்களம், பையூர், சோளவந்தானில் தலா 4 செ.மீ., மற்றும் 3 செ.மீ., 20 இடங்களிலும் தலா 2 செ.மீ., 25 இடங்கள் மற்றும் 30 இடங்களில் தலா ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளது.




Leave a Reply