BREAKING NEWS

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு பிறப்பித்துள்ள  தமிழக அரசாணைக்கு தடை விதிக்க மறுப்பு – மேல் முறையீட்டு மனு மீது பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.

 

 

போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் நீண்ட காலமாக போராடி வந்தனர் இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கான பணிகள் நடந்தது. இதை தொடர்ந்து ஆலைக்கு எதிராக பொதுமக்களின் போராட்டமும் தீவிரம் அடைந்தது. 3 மாத்திற்கும் மேலாக போராடிய மக்கள் 100-வது நாளான மே மாதம் 22-ந் தேதி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.

துப்பாக்கி சூடு

அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள் மேலும் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இந்தநிலையிலும் 23-ந் தேதி போலீசார் நடத்தி துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் பலியானார்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார். தேசிய, மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்தியது. துப்பாக்கி சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

ஆலைக்கு சீல்

மக்களின் போராட்டத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரத்தை தமிழக அரசு துண்டித்து நடவடிக்கை எடுத்தது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை மே மாதம் 28-ந் தேதி வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அந்த ஆலைக்கு சீல் வைத்தது.

இந்நிலையில் ஆலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த டேங்கில் இருந்து கந்தக அமிலம் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 2,124 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டது.

உயர்மட்ட குழு

இதன் தொடர்ச்சியாக ஆலையில் இருக்கும் பாஸ்பாரிக் அமிலம், எரிவாயு (எல்.பி.ஜி.), டீசல், தாமிர தாது, ஜிப்சம், திரவ ஆக்சிஜன், திரவ நைட்ரஜன் உள்ளிட்ட ரசாயனங்களை முழுமையாக அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஆலையில் உயர்மட்ட குழுவினர் ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வு விவரம் அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து ஆலையில் உள்ள அமிலங்கள் அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

மேல்முறையீடு

இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.

அந்த மனுவில், ‘ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டத்துக்கு புறம்பானது. ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்க போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. திடீரென்று ஆலை மூடப்பட்டதால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் ஆலை இயக்கப்பட்டு வந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணி

மேலும் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்கால அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் ஜவாத் ரஹீம், ரகுவேந்திர எஸ்.ரத்தோர், சத்யவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அதேசமயம், வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, 10 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.




Leave a Reply