தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி மக்கள் போராட்டம் தீவிரம்:ஆலையை மூடும்வரை போராட்டம் தொடரும் கல்லூரி மாணவர்களும் களத்தில் குதித்தனர்……

தூத்துக்குடி,

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்து உள்ள நிலையில் கல்லூரி மாணவர்களும் போராட்ட களத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவுபடுத்தும் நோக்கத்தில், ஆலை நிர்வாகம் தமிழ்நாடு சிப்காட் நிறுவனம் மூலம் 640 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், புதியம்புத்தூர், குமரரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சனிக்கிழமை வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து, அன்றைய தினம் மாலையில் வணிகர்கள், பொதுமக்கள், குழந்தைகள், பல்வேறு இயக்கத்தினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவர்கள் 200 க்கும் மேற்பட்டோர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் தங்களுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாகவும், நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும் மாணவர்கள் கடும் குற்றம்சாட்டியுள்ளனர். அதனால், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தைக் கைவிட்டு, அந்த ஆலையை முழுவதும் மூட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கிராம மக்கள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று 43-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பொது மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய அட்டையை ஏந்தியிருந்தனர். பொதுமக்களின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆலை விரிவாக்கம் விவகாரத்தில் அரசு தலையிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போராட்டக்குழுவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
மீன்வளம்
ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் கடலில் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு இருக்கும் நேரத்தில் 20 எம்.ஜி.டி. திட்டத்தில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. தினமும் ஒரு கோடியே 5 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை.

இந்த ஆலைக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் வழங்கப்படவில்லை. மத்திய, மாநில அரசிடம் அனுமதி பெற்று இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் உள்ளூரில் உள்ள பிரச்சினைகள் மாவட்ட நிர்வாகத்துக்குத்தான் தெரியும். அவர்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் ஆலை அமையும் பகுதியில் நீர்நிலை இல்லை, மக்கள் அடர்த்தி குறைவாக உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்கள்.
வடமாநிலத்தவர்கள்
ஆனால், ஆலை அமையும் பகுதியில் நீர்நிலை உள்ளது. அதே போன்று அருகில் தூத்துக்குடி மாநகராட்சி அமைந்து உள்ளது. இந்த தொழிற்சாலையில் 90 சதவீதம் வடமாநிலத்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அதிக அளவில் கந்தகடைஆக்ஸைடு வெளியிடப்படுகிறது. கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந் தேதி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து வெளியான நச்சுவாயு காரணமாக பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக, அப்போதைய மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
காற்றில் மாசு
ஸ்டெர்லைட்டினால் அதிக காற்று மாசு உள்ள நகரமாக தூத்துக்குடி உருவெடுத்து உள்ளது. தூத்துக்குடியில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆகையால் தூத்துக்குடியில் ஒட்டுமொத்த மருத்துவ ரீதியான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை வெளிக் கொண்டு வர வேண்டும். கண்காணிப்பு கமிட்டி, மாசு விவரங்களை மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை மீனவர்கள், விவசாயிகள், உப்பளத் தொழிலாளர்களை திரட்டி மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்த உள்ளோம். அதைத்தொடர்ந்து மாநில அளவுக்கு போராட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மஞ்சள் நிறத்தில் குடிநீர் (பாக்ஸ்)

குமரெட்டியாபுரத்தை சேர்ந்த கண்ணன் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையால் எங்கள் பகுதியில் குடிநீரின் தன்மை மாறிவிட்டது. லேசான மஞ்சள் நிறத்தில் குடிநீர் வருகிறது. ஏற்கனவே இதை பருகிய குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றார்.கணேசன் என்பவர் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுக் கழிவுகளால் ஏற்கனவே எங்கள் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தண்ணீர் மாசுபட்டதால் விலை கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளது. இதற்கெல்லாம் காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்றார்.

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை (பாக்ஸ்)

நஞ்சு நிறைந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் வலியுறுத்தல். கட்சி, மதம், இன வேறுபாடு பார்க்காமல் அனைத்து மக்களும் இதில் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட கடந்த 22 ஆண்டுகளில் பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. 1994 முதல் 2004 க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர், 13 பேர் இறந்துள்ளனர். வெளியில் தெரியாமல் பல இறப்புகள் மூடி மறைக்கப்பட்டு விட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு கடையடைப்பு போராட்டமும், பிரம்மாண்ட பேரணியும் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.

தாய்ப்பாலுக்கு பதில் மாத்திரை கொடுக்கிறோம் (பாக்ஸ்)

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியிறுத்தி, நடக்கும் போராட்டத்தில் 4 வயது குழந்தையுடன் வந்திருந்த ஒரு பெண் கூறுகையில், இந்த குழந்தை என்ன பாவம்ங்க பண்ணிச்சி. எல்லாரும் பொறந்த குழந்தைங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பாங்க. எங்க ஊர்ல பிறந்த குழந்தைகளுக்கும் மாத்திரை தாங்க கொடுக்கிறோம். சுவாசிக்க சுத்தமான காற்று இல்லை, தண்ணீரில் கழிவு கலந்துவிட்டது. என்றார்

மற்றொரு பெண்மணி தனது 2 வயது குழந்தையை நிருபர்களிடம் காண்பித்து, இவனது நிலையை நீங்களே பாருங்கள். ஐ.சி.யூ.வில் அவ்வப்போது அட்மிட் செய்து சிகிச்சையளிக்கும் நிலையில் இந்த குழந்தை உள்ளது. எங்கள் ஊரில் இருந்து யார், குழந்தைகளுடன், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு போனாலே போதும். டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும், என்ன பிரச்சினை என்று தெரிந்துவிடும். எங்கள் பிரச்சினைகளுக்காக நீண்ட காலம் போராடி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலைக்கு வக்காலத்து வாங்கும் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள், எங்கள் ஊரில் வந்து இருந்து பார்க்கட்டும். இந்த காற்றை சுவாசித்து பார்க்கட்டும். உங்களுக்கும் பிள்ளை, குட்டிகள் இருக்கிறது என்பதை மறந்துவிட்டு பேசாதீங்கய்யா, என்றார் தழுதழுத்த குரலில்.
Leave a Reply