BREAKING NEWS

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் சென்னையில் 30 இடங்களில் எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் கைது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து, சென்னையில் எதிர்கட்சிகள் 30 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் 100வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் தீக்கிரையானது.

50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதையடுத்து போலீசார் நடத்தி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது நடந்த வன்முறையை கையாண்ட விதத்தை கண்டித்து, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் நடைபெற்ற சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

3 ஆயிரம் பேர்

நேற்று காலை சென்னையில் மட்டும் 30 இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தது. இந்த போராட்டங்களில் ஈடுபட்ட 2 ஆயிரத்து 652 ஆண்கள் மற்றும் 349 பெண்கள் என மொத்தம் 3001 பேர் கைது செய்யப்பட்டனர்.

கனிமொழி கைது

இவர்களை போலீசார், அருகிலுள்ள சமூகநலக் கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். இவர்கள் சைதாப்பேட்டையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்ரமணியன், வாகை சந்திரசேகர் மற்றும் கராத்தே தியாகராஜன் (காங்கிரஸ்), எழும்பூர், உடுப்பி ஓட்டல் பாயிண்ட் அருகில் எம்.பி. கனிமொழி, எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, ரங்கநாதன் மற்றும் வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன், குன்றத்தூரில் எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன், பல்லாவரம் நகராட்சி அருகே எம்.எல்.ஏ. கருணாநிதி, மாதவரம் அருகே எம்.எல்.ஏ. சுதர்சனம் மற்றும் தி.நகர் பேருந்து நிறுத்தம் அருகில் எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் ஆகியோர் ஆவார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிமொழி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேர பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போக்குவரத்தை மாற்றி விட்டு இருந்தனர். இதனால் பொதுமக்கள் அவதியுற்றனர். எழும்பூரில் எதிர்கட்சியினரை கைது செய்து அழைத்து வந்த போது, அங்கிருந்த தி.மு.க., தொண்டர்கள் சிலர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.

——




Leave a Reply