BREAKING NEWS

தூத்துக்குடி கலவரத்துக்கு யார் காரணம்? சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு தகவல்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவலியுறுத்தி நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தின்போது, ஏற்பட்ட கலவரத்துக்கு யார் காரணம் என்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதாரத்துடன் சட்டசபையில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமாக நேற்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் 22 ஆண்டுகளாக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆலையில், 23.3.2013ல் வாயு கசிவு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததின் அடிப்படையில், 24.3.2013 அன்று தொழிற்சாலை நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்கும் அறிவிப்பு அளிக்கப்பட்டு, பின்னர் தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும், ஜெயலலிதா 29.3.2013 அன்று உத்தரவிட்டார்கள்.

அதன் பேரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டது. அதனை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்த முறையீட்டை விசாரித்து தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதற்கு இடைக்கால அனுமதி அளித்து, தனது இறுதி தீர்ப்பை 8.8.2013 அன்று அளித்தது.

ஜெயலலிதா மேல்முறையீடு

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று ஜெயலலிதா 2013ல் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். மேற்படி வழக்கின் விசாரணை தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்திற்கு வழங்கிய இசைவாணை மார்ச், 2018 உடன் முடிவடைந்த நிலையில், ஸ்டெர்லைட் நிர்வாகம் இதனை புதுப்பிக்க கோரிய போது, ஏற்கெனவே பிறப்பித்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் 9.4.2018 அன்று அதனை நிராகரித்து உத்தரவிட்டது. அன்றிலிருந்து ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்கவில்லை.

9.4.2018 தேதியிட்ட மாசு கட்டுப்பாடு வாரிய நிராகரிப்பு ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல் முறையீட்டு ஆணையத்தில் மேல் முறையீடு செய்தது. இது குறித்த விசாரணை 4.5.2018 அன்று நடைபெற்றபோது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர், இத்தொழிற்சாலையை மீண்டும் இயக்க அனுமதிக்கக் கூடாது என கடுமையாக வாதிட்டார். இவ்விவரம் அன்றைய செய்தித்தாள்களில் விரிவாக பிரசுரிக்கப்பட்டது. ஆகவே, 9.4.2018 அன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அவர்கள் விண்ணப்பித்ததை ரத்து செய்துவிட்டது. அதிலிருந்து ஆலை இயங்கவில்லை.

14 முறை பேச்சுவார்த்தை

தூத்துக்குடி, குமரெட்டியாபுரம் கிராமத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் பல நாட்களாக அமைதியான முறையில் நடைபெற்று வந்தது. பல்வேறு அமைப்பினரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம், மனு அளித்தல் போன்ற நிகழ்வுகள் காவல் துறையினரின் பாதுகாப்புடன் நடைபெற்றது. அந்நிகழ்வுகளின்போது மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு அரசு எடுத்து வந்த நடவடிக்கைகளை அவர்களுக்கு எடுத்துரைத்து, போராட்டங்களை கைவிட கேட்டுக்கொண்டார். இதற்காக, சார் ஆட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 14 முறை மாவட்ட ஆட்சித் தலைவர், சார்ஆட்சியர் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசின் நிலையைக் குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் 31.3.2018 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதேபோல், 14.4.2018 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை தெளிவான ஒரு செய்தி வெளியீடு மூலம், அனைத்து பத்திரிகைகளுக்கும் வழங்கி, அந்த செய்தி பல பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், ஆலை நிர்வாகத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்து இருந்தது.

அனுமதி ரத்து

அதை மாவட்ட ஆட்சித் தலைவர் பத்திரிகை செய்தியின் வாயிலாக எல்லா பத்திரிகையிலும் விளம்பரப்படுத்தினார். ஆலையினர் மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு மேலும் 5 ஆண்டு காலம் தொடர்ந்து இயக்குவதற்கு அவர்கள் அனுமதி கேட்டார்கள். அந்த அனுமதியை அரசு 9.4.2018 அன்று ரத்து செய்தது என்ற செய்தியை பத்திரிகையின் வாயிலாக மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

20.5.2018 அன்று, தூத்துக்குடி சார் ஆட்சியர், போராட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தைக்குப் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் ஒரு நாள் அமைதியான முறையில், போராட்டம் நடத்திட போராட்டக் குழுவினர் ஒப்புக் கொண்டனர். போராட்டக்குழுவின் ஒரு பிரிவினர் இதற்கு ஒப்புக்கொள்ளாமல், திட்டமிட்டபடி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.

144 தடையுத்தரவு

எனவே, முன்னெச்சரிக்கை கருதி சுமார் 2 ஆயிரம் காவல் துறையினர் அங்கு பணியில் அமர்த்தப்பட்டனர். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவை பிறப்பித்தார். அதோடு, போராட்டக் குழுவினர் அமைதியாக கவன ஈர்ப்புப் போராட்டம் மட்டுமே நடத்த ஒப்புக்கொண்ட முடிவுக்கு மாறாக, 22.5.2018 அன்று காலை 10 மணியளவில், ஆயிரக் கணக்கானோர் மடத்தூர் பகுதியிலிருந்தும், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், திரேஸ்புரம், குரூஸ்புரம் பகுதிகளிலிருந்தும் வந்தனர்.

தி.மு.க.வினர் போராட்டம்

தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவன் மற்றும் சுமார் 200 தி.மு.க.வினர்களும், காலை 9 மணியளவில் இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ள ஊர்வலமாக சென்றனர். மேலும் சில அமைப்புகளைச் சார்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்களின் தூண்டுதலின் பேரில், அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் எண்ணத்தில், திடீரென மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 144 தடை உத்தரவையும் மீறி முற்றுகையிட்டனர்.

சில விஷமிகள் இக்கூட்டத்தில் ஊடுருவி, காவல் துறையினர் மீது கல்லெறிந்தும், அவர்களை விரட்டித் தாக்கியும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கல்லெறிந்து சேதப்படுத்தியும், மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 35 அரசு துறை வாகனங்களையும், இரண்டு காவல் வாகனங்களையும், 110 தனியார் வாகனங்களையும் தீயிட்டுக் கொளுத்தியும், கல்லெறிந்தும் சேதப்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டனர்.

விஷமிகள் ஊடுருவல்

ஆகவே, அப்பாவி பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள். நீங்கள் சொல்வதைப் போல 99 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது எந்த சம்பவம் நடைபெறவில்லை. அதற்கு முன்பும் போராட்டம் நடத்தினார்கள். எந்த சம்பவமும் நடைபெறவில்லை. ஆகவே, இந்த அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலே, சில விஷமிகள் அதிலே ஊடுருவி இப்படிப்பட்ட செயலிலே ஈடுபட்டு இருக்கிறார்கள். அதை எல்லாம் சட்டப்படி காவல்துறை கண்டுபிடிக்கும்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைய முற்பட்ட போதும், ஸ்டெர்லைட் குடியிருப்பிற்குள் நுழைய முற்பட்ட போதும், போராட்டக்காரர்களின் வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வரவும், பொதுமக்களின் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்கவும், பொதுச் சொத்துக்களுக்கு மேலும் சேதம் விளைவிக்காமல் தடுக்கவும், கலவரக்காரர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தும், அவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகித்தும், வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர தடியடியும் நடத்தப்பட்டது.

தவிர்க்க முடியவில்லை

பொதுமக்களின் உடமைக்கும், உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் வியாபார நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றின் மீது கல் வீசி வன்முறையில் ஈடுபட்ட போது, காவல் துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு பலமுறை கூறியும், கலைந்து செல்லாமல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால், காவல் துறையினர் பொதுமக்களின் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் நோக்கில், தவிர்க்க முடியாத சூழ்நிலையில், தகுந்த எச்சரிக்கைக்கு பிறகு நடவடிக்கை மேற்கொண்டு அவர்களைக் கலைந்து போக செய்தனர்.

அன்று மாலையில், திரேஸ்புரத்தில் கூடிய கும்பல் ஒன்று, தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசியது. இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட உடன், நான் காவல் துறை தலைமை இயக்குநரை நேரில் அழைத்து, தூத்துக்குடி நகரில் அமைதி திரும்பிட துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டேன்.

ரோந்து பணி

இச்சம்பவங்களையடுத்து, முக்கிய இடங்களில் காவல் துறையினர் போதுமான அளவிற்கு பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டும், ரோந்து பணிகள் மேற்கொண்டும், தூத்துக்குடி நகரில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர்.

இந்நிலையில், 23.5.2018 அன்று, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் என்ற போர்வையில் ஒரு கும்பல், தடையை மீறி மருத்துவமனையில் குழுமி, அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயன்றனர், காவல் துறையினர் அவர்களை கலைந்து போக செய்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், காயமடைந்தவர்களை சந்திக்க மருத்துவமனைக்கு வந்த போது, அவரை பார்க்கும் போர்வையில் மீண்டும் கூடிய ஒரு கும்பல், அவர் சென்ற பிறகும் கலைந்து செல்லாமல், மருத்துவமனை வளாகத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயன்றதால், காவல் துறையினர் அவர்களை கலைந்து போகச்செய்தனர்.

அனைவருக்கும் சிகிச்சை

அவர்கள் மீண்டும் வி.வி.டி. சிக்னல் சந்திப்பு அருகே அண்ணா நகர் பகுதியில் ஒன்று கூடி, காவல் துறையினர் மற்றும் பொதுமக்களின் உடமைகளுக்கு தீவைத்தும், தாக்குதல் நடத்தியும், வன்முறையில் ஈடுபட்டதால், காவல் துறையினர் தகுந்த எச்சரிக்கைக்கு பின்னர் கண்ணீர் புகை உபயோகித்தும், தடியடி நடத்தியும், கும்பல் கலைந்து செல்லாமல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டது. எனவே, அவர்களை கலைந்து போக செய்ய, உரிய எச்சரிக்கைக்கு பின்னர், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தகுந்த நடவடிக்கை எடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச்சம்பவங்களின் போது போராட்டக்காரர்கள் 58 பேரும், காவல் ஆளிநர்கள் 72 பேரும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். 196 அரசு மற்றும் பொதுமக்கள் வாகனங்களை தீயிட்டும், கல்வீசி தாக்கியும், கலவரக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டன. காயமடைந்த 58 நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கும் பொருட்டு, மருத்துவக்கல்வி இயக்குநர் அவர்களும், மதுரை மற்றும் திருநெல்வேலியிலிருந்து பல்வேறு துறைகளைச் சார்ந்த 20 சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் பலரும் தூத்துக்குடிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இயல்பு நிலை திரும்பியது

22.5.2018 மற்றும் 23.5.2018 ஆகிய தினங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போராட்டக்காரர்களில், 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இச்சம்பவங்களில் உயிரிழந்த 13 நபர்களுள், ஏழு நபர்களின் பிரேத புலன் விசாரணை நீதித்துறை நடுவர்களால் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்ைதயடுத்து, தமிழ்நாடு அரசால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு 16.1.1995ல் மத்திய அரசின் சுற்றுச் சூழல் அனுமதி வழங்கப்பட்டது. மத்தியில் உங்கள் ஆட்சி இருந்த போதுதான். உங்களுடைய ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்டது. ஆகவே, அ.தி.மு.க. தவறு செய்ததாக நீங்கள் கருத வேண்டாம்.

மத்தியில் காங்கிரஸ்

ஏற்கனவே, காங்கிரஸ் ஆட்சி மத்தியிலே இருந்தபோது 1995-லே, அதாவது எந்த ஆலையாக இருந்தாலும், ஆரம்பிப்பதற்கு முதற்கட்டமாக பில்டிங் கட்டுவதற்கு அனுமதி கொடுப்பது எல்லாமே அரசு செய்தது. ஆனால், திறக்கும்போது, அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றினார்களா என்று பார்த்துத்தான் திறக்க வேண்டும், அதுதான் முக்கியம். அது பின்பற்றப்படவில்லை. அதுதான் இப்பொழுது முக்கிய பிரச்சினையே. அங்கு மக்கள் வைக்கின்ற பிரச்சினையே அதுதான். ஏனென்றால், அதை பின்பற்றி அந்த ஆலை திறக்கப்பட்டிருந்தால், இப்படிப்பட்ட பிரச்சினையே வந்திருக்காது. ஆகவேதான், நீங்கள் எங்கள் மேலேயே குற்றம் சுமத்தினீர்கள் அல்லவா, அதற்காக சொல்கிறேன். லைசன்ஸ் கொடுத்தது நீங்கள்தான்.

தி.மு.க. ஆதரவு

ஸ்டெர்லைட் தொழிற்சாலை பாதுகாப்பு முறைகளை சரியாக அமைக்காததனால் ஏற்படும் மாசு மற்றும் விபத்துகள் குறித்தும் மேற்கூறிய வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், எல்லாவிதமான விதிமுறைகளையும், சட்டங்களையும், பின்பற்றி தொழிற்சாலையின் பணிகளை தொடர்ச்சியாக கண்காணித்த பிறகே அனுமதி வழங்கப்பட்டது என்று தனது நிலைப்பாட்டை உயர்நீதிமன்றத்தில் எடுத்துரைத்தது. அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க அரசு. அப்பொழுது ஆட்சியில் இருந்த தி.மு.க., ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான இந்த நிலைப்பாட்டை எடுத்தது.

ஆகவே, அப்பொழுது இருந்த தி.மு.க. அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக, இந்த ஆணையை தாக்கல் செய்திருக்கின்றது. ஆகவே, இன்றைக்கு வேண்டுமென்றே ஒரு நாடகம் நடிக்கின்றார்கள். ஆலைக்கு யார் ஆதரவு கொடுக்கின்றார்கள், அந்த ஆலையை யார் மூடியது என்பதை உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, முதன்முதலில் இந்த ஆலை இயங்க ஆரம்பித்தது தி.மு.க. ஆட்சியில்தான்.

நிலம் வழங்கியது யார்?

மேலும், இந்த ஆலையின் விரிவாக்கத்திற்கு 100 ஏக்கர் நிலம் வழங்கியதும், அப்போதைய தொழில்துறை அமைச்சராக இருந்த முதலமைச்சர் கருணாநிதிதான். இன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று கபட நாடகம் ஆடும் மு.க.ஸ்டாலின் தான், இந்த ஆலையின் இரண்டாவது விரிவாக்கத்திற்கு 230.63 ஏக்கர் நிலத்தை வழங்கியவர்.

திமுக ஆட்சி காலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை சமாளிக்க, காவல் துறையினர் எடுத்த நடவடிக்கைகளின் போது, குறிப்பாக துப்பாக்கி சூட்டின்போது, நடந்த உயிரிழப்பு சம்பவங்களையும், அச்சம்பவங்களை அடுத்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

கடந்த 1970ல், தற்போதைய திருப்பூர் மாவட்டம், கனக்கம்பாளையம் பிரிவில் விவசாய சங்கத்தினர் மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட போது, ஏற்பட்ட வன்முறையை சமாளிக்க, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று விவசாயிகள் பலியாகினர். இதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நடைபெற்ற சம்பங்கள்.

ஆகவே, இறந்தவர்களை, பாதிப்பப்பட்ட குடும்பத்தினரை உண்மையிலேயே வேதனையோடு இந்த நேரத்தில் நினைத்துக் கொள்கிறேன். நான் அதை நியாயப்படுத்தவில்லை, அதற்கு உண்மையான தீர்வு கிடைக்கவேண்டும், நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசினுடைய நோக்கம். ஆனால், இதை ஒரு அரசியல் பிரச்சினையாக திருப்பி, திசை திருப்ப பார்க்கின்றார்கள். இவர்களுடைய ஆட்சி காலத்திலே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் எல்லாம் விரிவாகச் சொன்னேன்.

அது கண்துடைப்பு இல்லையா?

அதற்கு யார், யாரெல்லாம் விசாரணைக் கமிஷனுடைய அதிகாரிகளாக நியமிக்கப்பட்டார்கள் என்றெல்லாம் சொன்னேன். அதே அடிப்படையில்தான், மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசும், இன்றைக்கு ஒரு தூய்மையான ஒரு நேர்மையான, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரரை விசாரணை கமிஷன் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதை இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன்.

அப்படியென்றால் திமுக ஆட்சிக்காலங்களில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையிலும், வருவாய் கோட்ட ஆட்சியர் தலைமையிலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதும் வெறும் கண் துடைப்புதானா?

தற்போதைய தமிழ்நாடு அரசு, இது போன்ற சம்பவங்களுக்காக விசாரணை ஆணையம் அமைத்தால், அது உண்மையை மறைப்பதற்கு என்றும், கண்துடைப்பு நாடகம் என்றும், குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு என்றும் குறை கூறுவது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், அவர்கள் ஆட்சியில் இருந்தால் ஒரு நியாயம், இல்லாவிட்டால் ஒரு நியாயம் என்பதே அவர்கள் கொள்கையாக இருந்து வருகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. (முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகக்கையில் தி.மு.க.ஆட்சியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பட்டியலிட்டார்)

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Leave a Reply