BREAKING NEWS

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆறுதல், அரசின் நிதி உதவிகளையும் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து அமைதி நிலவிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஆலைக்கு எதிரான போராட்டம்

கடந்த 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போரட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியானதும், 60-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததும் தெரிந்ததே.

இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியினை வழங்கினார்கள். அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் செ.ராஜூ அவர்கள், வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

அமைதி திரும்புகிறது

இதைத்தொடர்ந்து, துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்து கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை பிரச்சனை குறித்து நடைபெற்ற துயர சம்பவம் அனைவரின் நெஞ்சை உருக்குகின்ற சம்பவமாக நடந்துள்ளது. தமிழக அரசின் சார்பாக ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சம்பவத்தின் போது காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறப்பட்டுள்ளது. அவர்கள் உடல் நலம் முழுமையாக தேறி நல்ல நிலைக்கு வருவார்கள் என நம்புகிறேன்.

வழக்கு நிலுவையில் உள்ளது

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது ஸ்டெர்லைட் குறித்து பொதுமக்களிடம் இருந்து வரபெற்ற கோரிக்கையை ஏற்று 2013-ல் இந்த ஆலை மூடப்பட்டது. ஆனால் ஆலை நிர்வாகத்தினர் டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் திறப்பதற்கான உத்தரவு பெற்று இந்த ஆலை இயங்கிக்கொண்டிருந்தது. தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

நிரந்தரமாக மூடல்

கடந்த மார்ச் மாதம் வரை இயங்கிய ஆலை ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதுப்பிக்க வேண்டும் என ஆலையின் சார்பாக முயற்சி மேற்கொண்ட போது, அனுமதி மறுக்கப்பட்டது. இன்று மக்களிடையே உள்ள தலையாய கோரிக்கை ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே, மக்கள் விருப்பத்திற்கேற்ப இந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஆலை நிரந்தரமாக மூடுவதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாவட்ட நிர்வாகம்

தமிழக அரசின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர், அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று தொடர்ந்து அமைதி நிலவுவதற்கு தேவையான பணிகளை துரிதமாக செய்து வருகிறது. தற்சமயம் அப்பகுதியில் அமைதி நிலவி வருகிறது. அரசின் சார்பாக மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அமைதி நிலவிட பணியாற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பார்வையிட்டார்

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற விவகாரத்தில் சேதமடைந்த அரசு அலுவலகங்கள், வாகனங்கள், உட்பட பாதிக்கப்பட்ட இடங்களையும் துணை

இந்நிகழ்வின் போது, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.த.செல்லப்பாண்டியன், கண்காணிப்பு அதிகாரியும் போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளாருமான டேவிதார், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.




Leave a Reply