BREAKING NEWS

துப்பாக்கி பயன்பாடு சட்டத்தை கடுமையாக்குகிறது, நியூசிலாந்து அரசு

நியூசிலாந்தில் துப்பாக்கி பயன்பாடு சட்டத்தை கடுமையாக்கும் விதமாக, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன், கிறைஸ்ட்சர்ச் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 51 பேர் பலியாகினர்.

உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து, கிறைஸ்ட் சர்ச்சில் ராணுவத்தினர் பயன்படுத்தும் செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும் துப்பாக்கிகள் திரும்ப பெறும் நடவடிக்கையில் கீழ், பலரும் தங்களது துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைத்தனர். இந்தநிலையில், துப்பாக்கி பயன்பாடு தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில் உரிமம் பெற்று தனிநபர்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை முறையாக கண்காணிக்க பதிவேட்டை உருவாக்குவது என்றும் தனிநபர்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளுக்கான உரிம காலத்தை 10 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக குறைப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்லாது, துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையாளரின் மனநிலை சரியில்லை எனில் அதனை மருத்துவர்கள் கண்டறிந்து காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதாவனது இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




Leave a Reply