தற்போதைய செய்திகள்

தி.மு.க. நடத்தும் முழு அடைப்புக்கு போக்குவரத்து தொழிற்சங்கம் ஆதரவு 70 சதவீத பேருந்துகள் இயங்காது….

சென்னை,

தி.மு.க. நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு போக்குவரத்து தொழிற்சங்கம் சி.ஐ.டி.யு. ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் 70 சதவீத பேருந்துகள் இயங்காது.

தொடர் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்துவது தொடர்பாக, கடந்த ஞாயிறன்று தி.மு.க. தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் வரும் 5ந் தேதி(நாளை) தமிழகம் முழுவதும் மத்திய அரசைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டம், காவிரி உரிமை மீட்பு பேரணி நடத்துவது, பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு அடைப்பு

மேலும், தி.மு.க. தரப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தினந்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, தி.மு.க.வினர் கடந்த மூன்று நாட்களாக தொடர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க.வினர் அறிவித்தபடி நாளை தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

சி.ஐ.டி.யு ஆதரவு

இந்தப் போராட்டத்துக்கு மாணவர்கள், இளைஞர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில், தி.மு.க.வின் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக போக்குவரத்து தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு. தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் 70 சதவீதத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படாது.
Leave a Reply