தற்போதைய செய்திகள்
mks.cms

தி.மு.க. கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து விவசாயிகளையும் அழைக்கும்படி அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை `தமிழக அரசு நடத்தும் கூட்டத்தில் பங்கேற்போம்’….

சென்னை,

தமிழக அரசு நாளை மறுநாள் நடத்த உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும் என்றும், இதனால் தி.மு.க. தலைமையில் நடைபெற இருந்து அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் அந்த கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விவசாய பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவிரி தீர்ப்பு

தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்தநிலையில், கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் இறுதித்தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

அதில், தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை 192 டி.எம்.சி.யில் இருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைத்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதே சமயத்தில், ஆறுவார காலத்துக்குள் காவிரி மேலாண்வாரியம் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக பல்வேறு கட்சிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்துக்கட்சி கூட்டம்

இதனையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக தமிழக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இல்லாவிட்டால், தி.மு.க. தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் வரும் 23-ந் தேதி நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க நாளை மறுநாள்(22-ந் தேதி) அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இந்த நிலையில், தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. கூட்டம் ரத்து

காவிரி நதி நீர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, தமிழக அரசின் சார்பில் வரும் 22-ந் தேதி அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என்ற அறிவித்திருப்பதை தி.மு.க. சார்பில் வரவேற்கிறேன்.

தமிழக அரசே கூட்டத்தை நடத்துவதால், தி.மு.க. சார்பில் 23-ந் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட அனைத்து கட்சி கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. அரசின் அனைத்து கட்சி கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்று காவிரி நதி நீர் பிரச்னை குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளை தெரிவிக்கும்.

விவசாயிகளையும் அழைக்க வேண்டும்

காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழக விவசாயிகளின் கருத்துகள், ஆலோசனைகள் மிக முக்கியமாக கேட்கப்பட வேண்டிய தேவையிருப்பதால், அனைத்து கட்சிகள் மட்டுமின்றி தமிழக விவசாயிகள் சங்கங்களின் பிரநிதிகளையும் அழைத்துப் பேச வேண்டும் என்று தீர்ப்பு வெளிவந்தவுடன், தி.மு.க. சார்பில் கோரிக்கை விடுத்திருந்தேன்.

எனவே, காவிரி பிரச்னையில் அனைத்து கட்சிகள் மற்றும் விவசாயிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் பொருட்டு, அரசின் அனைத்துகட்சி கூட்டத்திற்கு தமிழக விவசாய சங்கங்களின் பிரநிதிகளையும் அழைக்க வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Leave a Reply