BREAKING NEWS

தி.மு.க. ஒருபோதும் மூன்றாவது அணியில் இடம்பெறாது – துரைமுருகன் தகவல்

தி.மு.க. ஒருபோதும் மூன்றாவது அணியில் இடம்பெறாது. காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியே நீடிக்கும் என்று துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான துரைமுருகன் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கூட்டணி

2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைக்க சில மாநில கட்சிகள் முயற்சி செய்கின்றன. மேற்கு வங்க முதல்-அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாபானர்ஜி அந்த கூட்டணியை உருவாக்க வாய்ப்புள்ளது. ஆனால், மூன்றாவது அணியில் தி.மு.க. ஒரு போதும் இடம் பெறாது. காங்கிரஸ் கட்சியுடனான தி.மு.க. கூட்டணி தொடர்ந்து நீடிக்கும்.

முடியாத சூழல்

1989-ல் நடந்த சம்பவத்துக்கும், தற்போதைய சூழ்நிலைக்கும் வித்தியாசம் உள்ளது. தற்போது அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி மீதான ஏராளமான வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். எனவே, தி.மு.க. எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது.

18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில், உறுதியான தீர்ப்பு வந்து விடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், மாறுபட்ட தீர்ப்பு வந்துள்ளது. அடுத்து 3-வது நீதிபதி தீர்ப்புக்கு சென்றுள்ளது. 3-வது நீதிபதி தீர்ப்பால் ஆட்சி கவிழலாம் என்று நினைக்கிறோம்.

கட்டுக்கோப்பு

தி.மு.க.வை பொறுத்தவரை தி.மு.க. தொண்டர்கள் கட்டுக்கோப்புடன் உள்ளனர். தி.மு.க. கொள்கையால் அவர்கள் அனைவரும் பிணைந்துள்ளனர். தி.மு.க. கடந்த 7 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக உள்ளது. மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் தொண்டர்களை சந்திக்கிறார். இதனால் தி.மு.க.வினர் கட்டுக் கோப்புடன் உள்ளனர். கடந்த தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. தோல்வியை தழுவியது.

ஆலோசனை

தற்போது, தி.மு.க.வில் நாங்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் ஆலோசனை செய்து செயல்பட்டு வருகிறோம். மூத்த உறுப்பினர் என்ற ரீதியில் நான் மு.க. ஸ்டாலினுக்கு எந்த அறிவுரையும் சொல்வது இல்லை. ஏதாவது கருத்து கேட்டால் சொல்வேன். அரசியலில் சந்திரபாபு நாயுடு மாதிரி மு.க.ஸ்டாலின் உள்ளார். சந்திரபாபு நாயுடு எப்போதும் அரசியல் பற்றியே பேசுவார். சிந்திப்பார். மு.க.ஸ்டாலினும் அதே போன்று உள்ளார்.

இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

கருணாநிதி இல்லாத வெற்றிடத்தை உணர்கிறோம்

துரைமுருகன் வேதனை (பாக்ஸ்)

துரைமுருகன் பேசும்போது, கருணாநிதி உடல் நலம் இல்லாமல் செயல்பட முடியாதபடி இருப்பதால், அவர் இல்லாத வெற்றிடத்தை உணரத் தொடங்கியுள்ளோம். அவர் மட்டும் முன்பு போல அரசியலில் தீவிரமாக இருந்திருந்தால், அ.தி.மு.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவை அவர் வேறு விதமாக கையாண்டிருப்பார். மாறுபட்ட திட்டத்துடன் களம் இறங்கி இருப்பார். இவ்வாறு அவர் பேசினார்.




Leave a Reply