BREAKING NEWS

திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும் – முத்தரசன் வலியுறுத்தல்.


 

மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும், என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

கைது

பசுமை வழிச்சாலை திட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது தமிழக அரசின் சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் பங்கேற்று திரும்பிய அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முத்தரசன் கண்டனம்

இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்து கூறுவோரையும், போராடுபவர்களையும் தேச துரோக வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளின் கீழ் தமிழக அரசு கைது செய்து வருகிறது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துச் சொல்லும் உரிமைகளுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருவதும், அடக்கு முறைகளை ஏவுவதும் கண்டனத்துக்குரியது.

வழக்கை வாபஸ் பெற வேண்டும்

தமிழக அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. உடனடியாக திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply