தற்போதைய செய்திகள்

திருநாவுக்கரசர் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் -தமிழிசை சவுந்தரராஜன்….

தமிழகத்தின் முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் பதவிவகித்துவந்தவர் ஜெயலலிதா. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார். இதனையடுத்து இவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டது.

இதனால், கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்காக அ.தி.மு.க.வின் இரு அணிகளின் சார்பிலும் மதுசூதனனும், தினகரனும், தி.மு.க. சார்பில் மருதுகணேசும், பா.ஜ.க. சார்பில் கங்கை அமரனும் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இந்தநிலையில், பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.இந்தநிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21-ந் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இரண்டு நாட்கள்

இதனையடுத்து, நேற்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் பேட்டி அளித்தபோது கூறியதாவது:- ஆர்.கே.நகர் தேர்தல் தேதி இப்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றியும், வேட்பாளர் தேர்வு குறித்தும் கட்சியின் தேர்தல் பணிக்குழுதான் முடிவு செய்யும். இதுபற்றி ஆலோசனை நடத்துவதற்கு, தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களில் முடிவு செய்யப்படும்.

முக்கிய கட்சிகளே பல தேர்தல்களில் தயங்கிய போதும் கூட, நாங்கள் துணிச்சலாக போட்டியிட்டு எங்கள் பலத்தை காட்டி இருக்கிறோம். ஆர்.கே.நகரில் கடந்த முறை போல அல்லாமல், ஆரம்பத்தில் இருந்தே குற்றங்கள் களையப்பட்டு முழு கட்டுப்பாட்டுடன் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். இதன் பின்னணியில் பா.ஜனதா செயல்படுகிறது என்று திருநாவுக்கரசர் கூறி இருக்கிறார்.

சிறுபிள்ளைத்தனம்

மேலும், இரட்டை இலை சின்னத்தை பா.ஜ.க. வாங்கி கொடுத்தது என்று சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார். முதலில் அவரது கட்சிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தட்டும். அதன்பிறகு மற்ற கட்சிகளை பற்றி அவர் யோசித்தால் நல்லது. குஜராத்தில் டெல்லி மேல்சபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை பின்பற்றியதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் பா.ஜ.க. தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது. எனவே, வாக்குவங்கியை பெறுவதற்கு இரட்டை இலை சின்னம் பெற்றுள்ள அணியோடு கூட்டணி அமைக்கும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
Leave a Reply