BREAKING NEWS

திருச்சி நகைக்கடையில் கொள்ளை அடித்த போது பதிவான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் முகமூடி அணிந்த மர்மநபர்கள், நகைகளை கொள்ளையடிக்கும் புதிய சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

6 பேரிடம் விசாரணை

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. புதன் கிழமை அதிகாலை 2 மணி அளவில், கடைச் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த இரு கொள்ளையர்கள், தங்கம் மற்றும் வைர நகைகளை அள்ளிச் சென்றனர்.

கடைக்குள் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போது விலங்குகளின் முகத்தைப் போன்ற முகமூடிகளை கொள்ளையர்கள் அணிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொள்ளை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் விடுதிகளில் தங்கி இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டனர். அதன் அடிப்படையில், புதுக்கோட்டையில் விடுதியில் தங்கி இருந்த 6 பேரைப் பிடித்து விசாரித்தனர்.

முகமுடி அணிந்து கைவரிசை

ஆனால் அவர்களுக்கு இந்தக் கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பது போல் தெரியவில்லை என்று திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்து இருந்தார். இருப்பினும் அவர்களில் சிலர் மீது குற்றப்பின்னணி இருப்பதாகக் கூறப்படுவதால் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே கொள்ளையர்கள் அணிந்து வந்த முகமூடி தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுபோன்ற விலங்குகளின் முகமூடிகள் எங்கெங்கெல்லாம் விற்கப்படுகின்றன என்பது தொடர்பாக ஆராய்ந்து வரும் போலீசார், அந்தக் கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். ஒருவேளை, முகமூடிகள் வாங்குவதற்கு கொள்ளையர்கள் கடைக்குச் சென்றிருக்கும் பட்சத்தில், சிசிடிவி காட்சிகள் அல்லது, அங்க அடையாளங்களை வைத்து கொள்ளையர்களை நெருங்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

போலீசார் விசாரணை

இதனிடையே, நகைக் கடைக்குள் புகுந்து கொள்ளையர்கள் அள்ளிச் சுருட்டிச் செல்லும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. காலில் கயிறைக்கட்டிக் கொண்டு உள்ளே வரும் கொள்ளையன், ஸ்குரூ டிரைவர் உபகரணம் மூலம், நகைகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி காட்சிப் பெட்டியின் லாக்கை உடைப்பது அதில் பதிவாகியுள்ளது. பின்னர் முகமூடி அணிந்திருக்கும் இரு கொள்ளையர்களை, நகைகளால் பைகளை நிரப்புகின்றனர்.

கொள்ளையன் ஒருவனின் காலில் கட்டப்பட்டிருக்கும் கயிறை, வெளியில் இருந்த சில கொள்ளையர்கள் பிடித்துக் கொண்டிருந்திருக்கலாம் என்றும், ஆட்கள் யாராவது வந்தால் கயிறை இழுத்து எச்சரிக்க பயன்படுத்தி இருக்கலாம் என்றும் போலீசார் கூறியுள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து, இதேபாணியில் நடந்த கொள்ளைகள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *