தற்போதைய செய்திகள்

திராவிடத்தை யாராலும் ஒழிக்க முடியாது கமல்ஹாசன் பேச்சு….

சென்னை,

திராவிடத்தை யாராலும் ஒழிக்க முடியாது என்று கமல்ஹாசன் பேசினார்.

விழிப்புணர்வு

நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் மத்தியில் நேற்று பேசினார்.
அதில், ‘என்னை பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல விடாமல் பல தடைகள் வருகிறது.

நான் செய்ய வேண்டியதை நானும், நீங்கள் செய்ய வேண்டியதை நீங்களும் செய்யும் நேரம் வந்து விட்டது. போருக்கு செல்பவர்களுக்கு பதற்றமும் பயமும் இருக்காது. மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மாணவர்கள் அரசியல் புரிந்தவர்களாக இருந்தால், அரசியல்வாதிகள் நியாயமானவர்களாக இருப்பார்கள்.

எதிர்ப்பார்ப்பு

மாணவர்கள் படித்து விட்டு வெளியே வரும் போது அரசியலும் ஊழலும் தாக்கும். மக்கள் நீதி மய்ய மேடைகளில் காலில் விழுவது, பொன்னாடைகள் போர்த்துவது இருக்காது. என்னைப்பற்றி அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. அதைப் பார்க்கும் போது பதற்றம் ஏற்படுகிறது. நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு இருக்கும் தெளிவு மத்தியில் யாருக்கும் இல்லை. நம் வீட்டுப் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என தீர்மானிக்கும் உரிமை தமிழக அரசுக்கு உள்ளது’ என்றார்.

திராவிட நாடு

இதனையடுத்து மாணவர்களின் கேள்விக்கு கமல் பதிலளித்தார். தென் மாநிலங்களை இணைத்து திராவிட நாடு உங்களால் உருவாக்க முடியுமா என்று ஒரு மாணவி கேள்வி எழுப்பினார். அதற்கு கமல் நம்மால் முடியும் என்று கூறினார். திராவிடத்தை ஒழிப்போம் என்று ஒரு சிலர் கூறினார் அதற்கு நான் ஏற்கனவே திராவிடத்தை ஒழிக்க முடியாது என்று கூறியுள்ளேன்.

6 கைகள்

திராவிடம் என்பது இனம், நிலத்தை குறிக்கிறது. திராவிடம் என்பது இந்தியா முழுமைக்கும் இருக்கிறது. மகாராஷ்டிராவிலோ, வட இந்தியாவிலோ நம்மைப்போன்ற முகங்களை காண முடியும். தென்மாநிலங்கள் இணைந்த திராவிட கூட்டமைப்பு உருவாக வாய்ப்புள்ளது. திராவிடத்தை விஞ்ஞானமும், மெய்ஞானமும் நிரூபிக்க முடியும். மக்கள் நீதி மய்யத்தின் கட்சி கொடியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 6 மாநிலங்களை இணைத்து 6 கைகள் இணைந்த சின்னத்தை உருவாக்கியுள்ளோம் என்றார் கமல்.
Leave a Reply