தற்போதைய செய்திகள்

`தினகரனின் அநியாயத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை’ நாஞ்சில் சம்பத் தீவிர அரசியலில் இருந்து விலகல் அ.மு.மு.க.வில் உடன்பாடு இல்லை என அறிவிப்பு….

கன்னியாகுமரி,
தினகரனின் அநியாயத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரின் புதிய கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உடன்பாடு இல்லை. எனவே, இனிமேல் நான் எந்த அரசியலிலும் ஈடுபடப் போவதில்லை என்று நாஞ்சில் சம்பத் தீவிர அரசியலில் இருந்து நேற்று விலகினார்.
நாஞ்சில் சம்பத்
தி.மு.க.வில் இருந்து வெளியேறிய பின்னர், ம.தி.மு.க.வில் வைகோவுடன் நெருக்கமாக இருந்தவர் நாஞ்சில் சம்பத். பின்னர், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ம.தி.மு.க.வில் இருந்து விலகி, அ.தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு, மறைந்த அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கினார்.

அதன்பின்னர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தினகரன் அணிக்கு ஆதரவாக செயல்பட்டார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே தினகரனுக்கும், நாஞ்சில் சம்பத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாகவே, அவர் மதுரை, மேலூரில் நடைபெற்ற தினகரன் கட்சி தொடக்க விழாவிலும் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், கன்னியாகுமரியில் நேற்று நாஞ்சில் சம்பத் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

அரசியலில் விலகல்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அண்ணா, திராவிடம் என்பதை தவிர்த்து விட்டு என்னால் பேச முடியாது. அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு கட்சி நடத்தலாம் என தினகரன் நம்புகிறார். அவரது நம்பிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனால், அதில் நான் இல்லை. இனிமேல் நான் எந்த அரசியலிலும் நான் இல்லை. தினகரனின் அநியாயத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதற்காக அவருக்கு எதிர்வினையாற்ற மாட்டேன். அரசியல் தமிழில் இனி அடைபட்டுக் கிடக்க மாட்டேன். இனி தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

தினகரன் கட்சி தொடங்கி ஒரு வாரகாலத்துக்குள் முக்கிய ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் கட்சியில் இருந்து விலகியிருப்பது அவரது கட்சி வட்டாரத்துக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாஞ்சில் சம்பத் விலகல் வருத்தம் அளிக்கிறது – தினகரன் விளக்கம் (பாக்ஸ்)

நாஞ்சில் சம்பத் பெயர் காரணம் சொல்லி விலகுவது வருத்தமளிக்கிறது. அண்ணாவையும், திராவிடத்தையும் நாங்கள் அவமதித்தது போல் பேசி இருக்கிறார். அவர் என்னை விட வயதில் மூத்தவர். அவர் அண்ணாவை பார்த்திருக்கலாம், பெரியாரை பார்த்திருக்கலாம். அவர் ஜெயலலிதாவுக்கும், திராவிடத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று ஜெயலலிதாவை அவமதிப்பது போல் பேசியது வருத்தம் அளிக்கிறது. எங்களை பொருத்தவரை இது ஒரு இடைக்கால ஏற்பாடு. அதை தெரியாதது போல் மறைத்துக் கொள்கிறார். கே.சி.பழனிச்சாமி என்னை தொடர்பு கொண்டு பேசினால், அவரை கட்சியில் இணைத்து கொள்வது பற்றி பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply