BREAKING NEWS

தாய்லாந்து குகைக்குள் சிக்கியிருந்த அனைவரும் மீட்பு, மீட்புக்குழுவினருக்கு குவியும் பாராட்டு.


 

தாய்லாந்து குகைக்குள் சிக்கியிருந்த சிறுவர்கள் மற்றும் பயிற்சியார் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து மீட்புக்குழுவினருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சாகச பயணம்

தாய்லாந்தின் மா சே நகரில், தாம் லுவாங் என்ற குகை, 10 கி.மீ நீளத்தில் மியான்மர் மற்றும் லாவோஸ் நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. குகைக்குள் சென்றுவிட்டால் பாதை அறிந்து திரும்பி வருவது மிகவும் கடினம். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயது வரை உடைய 12 சிறுவர் கொண்ட கால்பந்து அணி மற்றும் பயிற்சியாளருடன் இந்த குகைக்குள் கடந்த மாதம் 23-ம் தேதி சாகச பயணம் சென்றனர்

இவர்கள் குகைக்குள் சென்ற நாளில் இருந்து அங்கு பருவமழை தீவிரமடைந்தது. குகையை சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. இதனால் குகைக்குள் சென்றவர்கள் கதி என்ன? என்ற அவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் பதறினர். 9 நாட்களுக்கு பிறகு குகைக்குள் சென்றவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது.

அதிரடிப்படை

சிறுவர்களை மீட்க குகைக்குள் செல்ல அதிரடிப்படை வரவழைக்கப்பட்டது. ஆனால் பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் மீட்புப்படையினர் உள்ளே செல்ல முடியவில்லை. தாய்லாந்து நாளிதழ்களில் இந்த செய்தி முக்கியத்துவம் பெற்றது. உலக அளவில் செய்தி பரவியதையடுத்து பல நாடுகள் உதவ முன்வந்தன.

குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் மிகுந்த பசியுடன் சோர்வாக இருந்ததால் அவர்களுக்கு முதலில் உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டன. பின்னர் அவர்களை வெளியே கொண்டு வரும் வழிமுறைகளை மீட்புக்குழுவினர் ஆராய்ந்தனர்.

பெரு மழை

திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்திருந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை உடனே வெளியே கொண்டு வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் நிதானமாக பணியை தொடங்கினர்.

கடும் சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்பு பணியின்போது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மீட்பு பணியில் சற்று பின்னடைவு ஏற்பட்டது.

முதலுதவி

அதன்பின்னர் மழை எச்சரிக்கைக்கு மத்தியிலும் துரிதமாக மீட்பு பணியை மேற்கொண்ட குழுவினர், இரண்டு கட்டங்களாக 8 சிறுவர்களை மீட்டனர். இந்நிலையில், நேற்று 3-வது கட்ட மீட்பு பணியின்போது 2 சிறுவர்களை பத்திரமாக மீட்டு குகைக்கு வெளியே அழைத்து வந்தனர்.

நேற்று மாலை கூடுதல் முக்குளிப்பவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டார்கள், அப்போது பயிற்சியாளரையும், 3 சிறுவர்களையும் அவர்கள் வெளியே பத்திரமாக கொண்டு வந்தார்கள். மிகவும் குறுகிய குகைக்குள், சகதி கலந்த வெள்ள நீரில், ஆஜ்ஸிஜன் டேங்குகளுடன் பயணித்து முக்குளிப்பவர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை பத்திரமாக மீட்ட மீட்பு குழுவினருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.




Leave a Reply