தற்போதைய செய்திகள்
11312CNI_CHNNN 02 13

தாயை கொலை செய்த வழக்கில்,தஷ்வந்துக்கு 18-ந் தேதி வரை நீதிமன்ற காவல் பெண்கள் தாக்கியதால் பரபரப்பு…..

சென்னை,டிச.14-
சிறுமி ஹாசினியை வன்கொடுமை செய்து பின்னர் ஜாமீனில் வெளிவந்து தாயை கொலை செய்து பிடிபட்ட தஷ்வந்தை வரும் 18-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாய் கொலை
குன்றத்தூர் சம்பந்தம் நகர் ராம் சாலையில் வசித்து வருபவர் தஷ்வந்த். கடந்த 2-ந் தேதி செலவுக்கு பணம் தராத ஆத்திரத்தில் தாய் சரளாவை கொலை செய்தான். பின்னர் தாயார் அணிந்திருந்த 25 பவுன் மற்றும் வீட்டில் இருந்த ரொக்கம் ரூ. 20 ஆயிரத்துடன் தப்பிச் சென்றுவிட்டான்.
தஷ்வந்த் ஏற்கனவே மவுலிவாக்கம் மாதாநகர் பகுதியில் வசித்த போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த 6 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்து உடலை எரித்து இருந்தான். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் தாயையும் கொலை செய்து இருந்தான்.
மும்பையில் கைது
இதையடுத்து தஷ்வந்தை பிடிக்க உதவி கமி‌ஷனர் கண்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனிப்படை போலீசார் பிடித்தனர். அவனை மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு சென்னைக்கு கொண்டு வர விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அப்போது ஓட்டலில் சாப்பிட்ட போது போலீசாரை தாக்கிவிட்டு தஷ்வந்த் தப்பி ஓடிவிட்டான். அவனை பிடிக்க மும்பை போலீஸ் உதவியுடன் தனிப்படை போலீசார் தீவிர வேட்டை நடத்தினர். மும்பை அந்தேரி பகுதியில் பதுங்கி இருந்த தஷ்வந்தை மீண்டும போலீசார் கைது செய்தனர். அவனை மும்பை பாந்த்ரா மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றத்தில் ஆஜர்
பின்னர் 9-ம் தேதி தஷ்வந்தை போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, பணம் தராததால் தாயை அடித்து கொன்றதாக அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று அவர் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் போலீசார் அவரை அழைத்து வரும் போதே, அங்கிருந்த பெண்கண் அவரை கடுமையாக தாக்கினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து, நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை என நீதிபதியிடம் கூறினார்.
தஷ்வந்தை வரும் 18-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Leave a Reply