BREAKING NEWS

தஹிலா ரமானி பணியிடை மாற்றமும் மத்திய அரசும்..!

அண்மைக்காலமாகவே நீதித்துறையில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதிவியேற்று கடந்த ஓர் ஆண்டு காலமாக சிறப்பாக பணியாற்றி வந்த நீதிபதி தஹிலா ரமானி, அவர்கள் மீதான பணியிடைமாற்ற நிகழ்வு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமனுடன் பேசினோம். அப்போது நம்மிடம் அவர்,

“சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான தஹிலா ரமானியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக தனது பொறுப்பினை துறந்திருக்கிறார். இந்த இடமாற்றும் நடவடிக்கை நியாயமற்றது என்று பொதுவாக கருதப்படுகிறது. ஏற்கெனவே முப்பை நீதிமன்றத்தில் பணியாற்றியிருந்தார். பின்னர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்று பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில், சென்னைப் போன்ற பெரிய நீதிமன்றத்தில் பணியாற்றிவிட்டு மீண்டும் சிறிய நீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்பது என்பது நடைமுறையல்ல.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக ஒரு நீதிபதி இருக்கும்பட்சத்தில் அவரை தலைமையாக நியமிக்கலாம். ஆனால், உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதியை உச்ச நீதிமன்றத்திற்கான நீதிபதியாக மாற்றுவதே சரியாக இருக்கும். மேலும் இருக்கக் கூடிய உயர் நீதிமன்ற நீதிபதிகளில் தஹில் ரமானி மூத்த நீதிபதியாவார். 25 தலைமை நீதிபதிகளில் 2 நீதிபதிகள் மட்டுமே பெண்கள். இவ்வாறு இருக்கையில் இருவரில் ஒருவரான தஹிலா ரமானியை மீண்டும் சிறிய மாநிலத்திற்கான நீதிபதியாக மாற்றி இவ்வாறு சிறுமைப்படுத்துவது எவ்வாறு சரியாக இருக்கும்?

ஆகவே, உச்ச நீதிமன்ற கோலேஜியத்தின் நடவடிக்கைக்கு எதிர் நடவடிக்கையாக நீதிபதி தஹிலா ரமானி தனது பொறுப்பினை துறந்திருக்கிறார். இது நீதித்துறையில் ஓர் கலகக்குரலே. நீதித்துறையில் நடைபெறும் பல்வேறு அதிருப்திகளுக்கு எதிரான கலகக்குரலில் நீதிபதி தஹிலா ரமானியும் தனது பங்களிப்பை செலுத்தியிருக்கிறார். கோலேஜியத்தின் இந்நடவடிக்கை தவறு என சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் கொடுத்திருக்கிறது.

பொதுவாக நீதித்துறையில் இம்மாதிரியான அதிருப்தி நடவடிக்கைகள் புதிதானது அல்ல.

10.05.2019 அன்று கூடிய உச்ச நீதிமன்ற கோலேஜியம், மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள அகில் அப்துல் ஹமீது குரேஷி அவர்களை மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது. அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த மூத்த நீதிபதி.

ஆனால், அவரை இதுநாள் வரை மத்திய அரசு தலைமை நீதிபதியாக நியமிக்கவில்லை. அதே 10.05.2019-ல், சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி ராமசுப்ரமணியம் அவர்களை இமாச்சல பிரதேசத்தின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது உச்ச நீதிமன்ற கோலேஜியம். அவர் அப்பொழுது ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்தார்.

நீதிபதி ராமசுப்ரமணியம் அவர்கள் மத்திய அரசால் உடனடியாக இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் தலைமை நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார். உச்ச நீதிமன்றத்தின் கோலேஜியம் 28.08.2019-ல் தலைமை நீதிபதி ராமசுப்ரமணியம் அவர்களை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்துள்ளது என 31.08.2019 தேதியிட்ட இந்து பத்திரிகை செய்தி கூறுகிறது. எனவே, உடனடியாக முதலில், நீதிபதி குரேஷியை தலைமை நீதிபதியாக மத்திய அரசு நியமிக்க வேண்டும். அவர் இதுநாள் வரை தலைமை நீதிபதியாக பணியாற்ற முடியாதவாறு மத்திய அரசு செயல்படுவது வருந்தத்தக்கது. குஜராத் வழக்குரைஞர்கள் சங்கம் நீதிபதி குரேஷியை தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற கோலேஜியத்தின் முடிவின்படி மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டும் இன்றுவரை அவர் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமை நீதிபதி ராமசுப்ரமணியம் அவர்களை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ஒருவர் கடைசியாக உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டது 2014-ல் நீதிபதி பானுமதி அவர்கள். இப்போது 5 ஆண்டு நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ்நாட்டை சேர்ந்த நீதிபதி ராமசுப்ரமணியம் அவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி சுதாகர் அவர்கள், மார்ச் 2017 முதல் காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் (Acting Chief Justice), மே 2018 முதல் மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதியாகவும் பணியாற்றுகிறார். அவரை விடுத்து, அவரைவிட பணியில் இளையவரான நீதிபதி ராமசுப்ரமணியம் அவர்களை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது எவ்வாறு சரியாகும் என்பதே எனது கேள்வி.

ஆனால், இந்திரா காந்தியின் அவசரநிலை காலம் போல மோடியின் காலத்திலும் தொடர்ந்து பணியில் இளையவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. பணியில் இளையவரான டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இப்போது மீண்டும் பணியில் இளையவரான நீதிபதி ரவீந்திர பட் அவர்கள் மூத்தவர்களை விடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மும்பை, டெல்லி உயர் நீதிமன்றத்தை சேர்ந்த நீதிபதிகள் எப்பொழுதும் குறைந்தபட்சம் 3 முதல் 5 பேர் வரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கும் பொழுது சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்தவர்கள் இன்றைய நாளில் ஒருவர் மட்டுமே (நீதிபதி பானுமதி அவர்கள்) உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பதால், மேலும் இருவரை — நீதிபதி சுதாகர் மற்றும் நீதிபதி ராமசுப்ரமணியம் ஆகிய இருவரை — நியமிப்பதே சரியானது.

இதற்கு முன்னர் தமிழ் நாட்டைச் சேர்ந்த மூவர் ஒரே நேரத்தில் பல காலங்களில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்துள்ளனர். சமீபத்தில் நீதிபதி சதாசிவம், நீதிபதி நாகப்பன், நீதிபதி கலிபுல்லா என மூவர் ஒரே நேரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்துள்ளனர். எனவே, நீதிபதி சுதாகர் மற்றும் நீதிபதி ராமசுப்ரமணியம் ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்பதும், பணியில் மூத்தவர் என்பதால் நீதிபதி சுதாகரை முதலில் உச்ச நீமன்ற நீதிபதியாக நியமிப்பதுதான் சரியாக இருக்கும்.

ஆனால், இப்பொழுது நீதிபதி சுதாகர், நீதிபதி ராமசுப்ரமணியம் இருவரையும் ஒரே நேரத்தில் நியமிக்க இயலாது. காரணம், ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிர்ணயிக்கப்பட்ட மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 34 என்பதாலும், ஏற்கெனவே 31 நீதிபதிகள் இருக்கின்றனர் என்பதாலும், நீதிபதி ராமசுப்ரமணியம் உட்பட 3 நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கோலேஜியம் முடிவெடுத்திருப்பதாலும், நீதிபதி ராமசுப்ரமணியம் மற்றும் நீதிபதி சுதாகர் ஆகிய இருவரையும் இப்பொழுது ஒரே நேரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முடியாது. நீதிபதி சுதாகர் பணியில் மூத்தவர் என்பதால், அவரை இப்பொழுது நியமித்து, அடுத்து உடனடியாக வரும் காலி பணி இடத்தில் நீதிபதி ராமசுப்ரமணியம் அவர்களை நியமிப்பதே நியாயம் ஆகும்.

மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பற்றிய சட்டம் இல்லை என்றாலும், சமூகத்தின் அனைத்து பிரிவினரும் போதுமான அளவில் (Adequate Representation) நீதிபதிகளாக இருப்பதுதான் அரசமைப்பு சட்டம் கூறும் சமூக நீதியை நிலைநிறுத்துவது ஆகும். ஆனால், மக்கள் தொகையில் சுமார் 25% இருக்கும் தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவர் மட்டுமே உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பதும் (கடந்த 10 ஆண்டுகளாக ஒருவர் கூட இல்லை, சமீபத்தில்தான் ஒருவர் நியமிக்கப்பட்டார்), மக்கள் தொகையில் 14% இருக்கும் இஸ்லாமியர்களில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் ஒருவர் மட்டுமே என்பதும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் மக்கள் தொகையில் பெரும்பான்மை பகுதியினர் என்றாலும், அம்மக்களில் மிகக் குறைந்த அளவே (எனக்கு தெரிந்து தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி அவர்கள் மட்டுமே) இருக்கின்றனர் என்பதும் புறந்தள்ள முடியாத செய்தி. 73 ஆண்டுகால சுதந்திற்குப்பின்னும் இதுதான் நிலைமை என்பது ஒரு அவலம். இனி வரும் எதிர்காலத்திலாவது இந்த அவலம் போக்கப்பட வேண்டும். சமூக நீதி காக்கப்படவேண்டும்.’’ என்றார்.

 

ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கலந்துரையாடல்…




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *