தற்போதைய செய்திகள்

தலைமை உத்தரவிட்டால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தயார் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அறிவிப்பு

சென்னை,

தலைமை உத்தரவிட்டால் காவிரி மேலாண்மை வாரியம் கோரி பதவியை ராஜினாமா செய்யத்தயார் என்று அ.தி.மு.க எம்.பி.க்கள் அருண்மொழித்தேவன், அரி, குமார் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

காவிரி விவகாரம்

காவிரி விவகாரம் குறித்த இறுதி தீர்ப்பில் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் தற்போது வரை காவிரி மேலாண்மை அமைப்பதுக் குறித்து மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தநிலையில் மத்திய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள ஸ்கீம் (திட்டம்) தொடர்பாக விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளது.

போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பிகள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக விவசாய சங்கத்தினரும் எதிர்கட்சிகளும், “தமிழக எம்.பி.க்கள் சபையை முடக்குவதைத் தவிர்த்து விட்டு, ஒட்டுமொத்தமாக எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்வதுடன் பா.ஜ.க அரசுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில், நேற்று முன்தினம் மாநிலங்களவையில் அ.தி.மு.க உறுப்பினரான நவநீதகிருஷ்ணன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆவேசமாகப் பேசினார். ஒருக்கட்டத்தில், வாரியம் அமைக்காது போனால் அ.தி.மு.க எம்.பி.க்கள் தற்கொலை செய்வோம் என்றார். இவரின் பேச்சு அனைத்து தரப்பிலும் பெரிதாகப் பேசப்பட்டன.

ராஜினாமா
நவநீதகிருஷ்ணனின் பேச்சில் அதிர்ந்த எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களை சார்ந்தவர்களும், “அ.தி.மு.க எம்.பி.க்கள் ராஜினாமா செய்தாலே அவர்களின் உண்மையான உணர்வினை வெளிப்படுத்துவதாக இருக்கும்” என்று கருத்து தெரிவித்தனர்.

இந்தநிலையில் நிருபர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘காவிரி பிரச்சினையில் நான் ராஜினாமா செய்வதால் எல்லாம் வந்துவிடும் என்றால், ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனால், ராஜினாமா என்பது ஒரு முடிவல்ல. அந்த முடிவை எடுத்தால், உடனே எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிடுவேன்” என்றார்.

முதல்வருடன் சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர் செல்வமும் காவிரி பிரச்சினைக்காக தனது பதவியை ராஜினாமா செய்ய தயார் என அதிரடியாக பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தநிலையில் அ.தி.மு.க எம்.பி-க்கள் குமார், அருண்மொழித்தேவன் மற்றும் அரி ஆகிய 3 பேர் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய எம்.பி.க்கள் அரி, அருண்மொழித்தேவன், குமார் ஆகியோர் கூறும்போது, ‘காவிரி விவகாரத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் பதவியை ராஜினாமா செய்யத் தயார். தலைமை உத்தரவிட்டால் நாங்கள் 3 எம்.பி-க்கள் அல்ல அனைவரும் ராஜினாமா செய்வோம்’ என்றனர்.

ஆலோசனை

இந்நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சி.வி.சண்முகம், ஓ.எஸ். மணியன், செங்கோட்டையன், துரைக்கண்ணு, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
சுமார் 1 மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காவிரி நதிநீர் விவகாரத்தில் சட்டப்பூர்வமாக எத்தகைய நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த ஆலோசனை முடிவுபெற்ற பின்னர் அதிகாரிகளையும் அனுப்பிவிட்டு அமைச்சர்களுடன் தனியாக முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
Leave a Reply