தற்போதைய செய்திகள்
Photo 01

தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடும் சான்றோர், தமிழ் அறிஞர்களை சிறப்பிக்கும் வகையில்-90 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருதுகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்…..

சென்னை,
தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடும் சான்றோர்களையும், தமிழறிஞர்களையும் சிறப்பிக்கும் வகையில் 90 பேருக்கு, உலகத் தமிழ்ச் சங்க, தமிழ்ச்செம்மல் விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.

தமிழ் விருதுகள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில், 2017-ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு. போப் விருது, உமறுப்புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளையும், 2016-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது, 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் மற்றும் தமிழ்ச் செம்மல் விருதுகள், என மொத்தம் 90 விருதுகளை வழங்கினார்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடும் சான்றோர்களையும், தமிழறிஞர்களையும் சிறப்பிக்கும் வகையில், ஆண்டுதோறும் சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் வழங்கி சிறப்பித்து வந்தார். அந்்த வகையில், ெஜயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, 2017-ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருதிற்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம் தெரிவு செய்யப்பட்டு, விருதுத்தொகையாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, கேடயம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றை அச்சங்கத்தின் நிர்வாகிகளிடம் முதல்வர் வழங்கினார்.

கம்பர் விருது

மேலும், கல்வெட்டியியலிலும், தொல்லியல் துறையிலும் தனிமுத்திரை பதித்துவரும் முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியனுக்கு 2017-ம் ஆண்டிற்கான கபிலர் விருது, சுவடியியல் பதிப்பிலும் அகழாய்வுத் துறையிலும் சிறந்து விளங்கும் கிருட்டின மூர்த்திக்கு 2017-ம் ஆண்டிற்கான உ.வே.சா. விருது, மேடைகளிலும் அரங்குகளிலும் புலவர் பெருமான் கம்பர் புகழ்பாடும் சுகி.சிவத்துக்கு 2017-ம் ஆண்டிற்கான கம்பர் விருதையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தன் நாவன்மைகொண்டு சொல்லிலும் செயலிலும் தமிழ்ச் சமூகப்பணியை ஆற்றிவரும் வைகைச்செல்வனுக்கு 2017-ம் ஆண்டிற்கான சொல்லின் செல்வர் விருது, அயல்நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்கும் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் ராஜேஸ்வரி கோதண்டனுக்கு 2017-ம் ஆண்டிற்கான ஜி.யு.போப் விருது, உமறுப்புலவர் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை போற்றும் வகையில், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞர் ஹாஜி எம். முகம்மது யூசுப்க்கு 2017-ம் ஆண்டிற்கான உமறுப்புலவர் விருதும் முதல்வர் வங்கினார்.

அம்மா இலக்கிய விருது

இதனைத் தொடர்ந்து, தேசியக் காப்பியம் சிலப்பதிகாரத்தை வடித்தெடுத்த அருந்தமிழ்ப் பாவலர், இளங்கோவடிகள் நடையில் தமிழ்த் தொண்டாற்றிவரும் முனைவர் நல்லதம்பிக்கு 2017-ம் ஆண்டிற்கான இளங்கோவடிகள் விருது,
பெண்ணியத்தின் பெருமை பேசும் பைந்தமிழிலக்கியங்களைப் படைத்துத் தமிழ்ப்பணியாற்றி வரும் சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் எம்.எஸ். ஸ்ரீலெட்சுமிக்கு 2017-ம் ஆண்டிற்கான அம்மா இலக்கிய விருது, கணினித் துறையில் கன்னித் தமிழ் வளர்த்து சிறந்த தமிழ்ப்பணியாற்றிவரும் அல்டிமேட் மென்பொருள் தீர்வக நிறுவனர் துரைபாண்டியனுக்கு 2016-ம் ஆண்டிற்கான முதல் அமைச்சர் கணினித் தமிழ் விருதும் வழங்கினார்.

மேலும், விருதாளர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தார். 2017-ம் ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள் நெல்லை சு. முத்து,தெய்வசிகாமணி, செல்வராசு (எ) குறிஞ்சிவேலன், முனைவர் ஆனைவாரி ஆனந்தன்,மறவன் புலவு சச்சிதானந்தம், வசந்தா சியாமளம், முனைவர் ஆல்துரை, பேராசிரியர்
சங்கரநாராயணன், ஆண்டாள் பிரியதர்சினி, முனைவர் தர்லோசன் சிங் பேடி ஆகிய விருதாளர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கி சிறப்பித்தார்.

தமிழ் சங்க விருது

2016-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகளான இலக்கிய விருதினை சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ஆண்டியப்பன், இலக்கண விருதினை பிரான்சு நாட்டைச் சேர்ந்த பெஞ்சமின் லெபோ, மொழியியல் விருதினை ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த முனைவர் சுபாஷினி, 2017-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகளான இலக்கிய விருதினை ஆசுதிரேலியா நாட்டைச் சேர்ந்த முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், இலக்கண விருதினை ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த முனைவர் உல்ரிகே நிகோலஸ், மொழியியல் விருதினை ஆசுதிரேலியா நாட்டைச் சேர்ந்த மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ஆகிய விருதாளர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கியும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பழகன், மா.பா. பாண்டியராஜன், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசுத்துறை செயலாளர்கள் கலந்துக்கொண்டனர்.
Leave a Reply