BREAKING NEWS

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் 2 ஆயிரம் பேர் பாதிப்பு

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை அரசு ஆஸ்பத்திரியில் 100 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில எல்லை மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது. சென்னையில் இருந்து கோவை வரை உள்ள மாவட்டங்களில் டெங்குவின் தாக்கம் அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காய்ச்சல் பாதித்து அரசு மருத்துவமனைகளில் அதிகளவில் சிகிச்சை பெற்று வருவதால் சுகாதாரத்துறை பணியாளர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். டெங்குவை ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிக்க அனைத்து மாவட்டமும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் கொசுக்கள் உற்பத்தி அதிமாகி காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

குழந்தைகள், சிறுவர்கள் அதிகமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரத்தில் சென்னையில் மட்டும் 3 பேர் டெங்குவால் உயிர் இழந்தனர்.சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 100 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தடுப்பு நடவடிக்கை

ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டுகளில் டெங்கு அறிகுறியுடன் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 முதல் 40 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவரிடமோ, மருத்துவமனைக்கோ செல்ல வேண்டும். 3 நாட்களுக்கு பிறகும் தீவிர காய்ச்சல் இருந்தால் ரத்த பரிசோதனை செய்யப்பட்டு டெங்கு அறிகுறி இருந்தால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மருத்துவமனைகளில் கண்காணிப்பதோடு நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது:-

இந்த வருடத்தில் இதுவரையில் டெங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து செல்கிறது. கடந்த வருடத்தை ஒப்பிடும்போது குறைவாக இருந்தாலும் தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்க களப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மழை நீர் வீடுகளை சுற்றி தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

காய்ச்சல் வந்தவுடன் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றாலே உயிர் இழப்பை தவிர்க்கலாம். அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்குவிற்கு முழுமையான சிகிச்சை அளிக்க வசதிகள் உள்ளன. தட்டணுக்கள், ரத்தம், மருந்து-மாத்திரை உள்ளிட்ட அனைத்தும் தேவையான அளவு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *