தற்போதைய செய்திகள்
eps

‘தமிழ்நாடு’ பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…

சென்னை, ஜன.12-
‘‘வரும் ஜனவரி 14-ம் நாள், வரலாற்று சிறப்பு மிக்க நமது மாநிலம் “தமிழ்நாடு” என்ற பெயரோடு 50-வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு “தமிழ்நாடு” பொன் விழா ஆண்டாக அரசு கொண்டாட முடிவு செய்துள்ளது’’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் அறிவித்தார்.
மொழிஞாயிறு
இதுகுறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் நேற்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து பேசியதாவது:
தமிழ்நாட்டின் வரலாறும், தமிழ் மக்களின் பண்பாடும், மிகவும் தொன்மை வாய்ந்தவை ஆகும். பூமியில், முதல் மனிதன் தோன்றியது தமிழ் பேசும் நிலத்தில் தான் என்று மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் சொல் ஆராய்ச்சிகளால் விளக்கியுள்ளார்.
வடவேங்கடம்-தென்குமரி
“வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” என்று வடக்கே வேங்கட மலை முதல், தெற்கே குமரி வரை, ‘தமிழ்நாடு’ சீரோடும் சிறப்போடும் விளங்கியதை வரையறுத்துச் சொல்கிறார்.
தொடர்ந்து, இருபதாம் நூற்றாண்டில் இணையில்லாத் தமிழ்ப்பெருங்கவியாய் விளங்கிய மகாகவி பாரதியார், “வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து, வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்றும் “கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ், கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்றும் ‘தமிழ்நாடு’ என்ற உணர்வோடு பாடி அன்றைக்கே பரவசப்படுத்தினார்.
“நம் நாடு தமிழ்நாடு, நாமெல்லாம் தமிழ் மக்கள்” என்று புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார் ஆணித்தரமாக உரைத்தார். இவ்விதமாக, ஆளுமைத் திறம்கொண்ட தமிழ்ப் புலவர்கள் ‘தமிழ்நாடு’ என்று வாயாரப் பாடி மனதார அழைத்த நாடு, நம் தமிழ்நாடு.
தியாகி சங்கரலிங்கனார் கோரிக்கை
நம்மோடு ஆந்திரம், கர்நாடகம், கேரளம் இணைந்து, ‘பிரசிடன்சி ஆப் மெட்ராஸ்’ என்று ஆங்கிலத்திலும், ‘சென்னை மாகாணம்’ என்று தமிழிலும் அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மாநில பிரிவினை ஏற்படுத்தப்பட்ட பிறகு, சென்னை மாகாணம் என்னும் பெயரை மாற்றித் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றப்படவேண்டும் என்று அன்றைக்கு ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் அரசிடம் 1956, ஜூலையில் கோரிக்கையினைக் தியாகி சங்கரலிங்கனார் முன் வைத்தார்.
1967-ல் தீர்மானம்
அண்ணா தலைமையிலான அரசு அமைந்தவுடன், 1967-ம் ஆண்டு அப்போதைய, “சென்னை மாகாணத்திற்கு” “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட, சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1969-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் நாள் “தமிழ்நாடு” என்று நமது மாநிலத்திற்கு பெயர் சூட்டப்பட்டது.
உலகத் தமிழ்மாநாடுகள்
அண்ணா 2-வது உலகத் தமிழ் மாநாட்டினையும், எம்.ஜி.ஆர் 5-வது உலகத் தமிழ் மாநாட்டினையும், ஜெயலலிதா 8-வது உலகத் தமிழ் மாநாட்டினையும் சிறப்பாக நடத்தி, தமிழின் பெருமையையும், தொன்மையையும் உலகறிய செய்தனர். எம்.ஜி.ஆர் தமிழுக்கென்று தனிப் பல்கலைக்கழகத்தை தஞ்சாவூரில் நிறுவினார். மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்தார்.
தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையிலும், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், சித்திரை முதல் நாளை மீண்டும் தமிழ் புத்தாண்டாக ஜெயலலிதா அறிவித்தார். உலக நீதி நூலான திருக்குறளை அதிக மக்கள் பேசும் சீன, அரபு மற்றும் கொரிய மொழிகளிலும், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் மற்றும் ஔவையாரின் “ஆத்திச் சூடி” ஆகியவை சீன மற்றும் அரபு மொழிகளிலும், மொழி பெயர்த்து தமிழர்களின் பெருமைகளை உலகறியச் செய்தார். தமிழ் அறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் “முதலமைச்சர் கணினித் தமிழ் விருது”, “தமிழ்த் தாய் விருது”, “தமிழ்ச் செம்மல் விருது”, “அம்மா இலக்கிய விருது”, போன்ற 55 விருதுகளை அறிவித்தார்.
தமிழ் இருக்கைக்கு ரூ.10 கோடி
தமிழுக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில், தமிழ் மொழியின் தொன்மை, இலக்கியம், இலக்கணம் மற்றும் பண்பாடு தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்டு, தமிழ் மொழியின் சிறப்பினை ஆவணப்படுத்தி உலகெங்கும் கொண்டு செல்ல, அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க இந்த அரசு, 10 கோடி ரூபாய் வழங்கி உள்ளது.
பொன் விழா ஆண்டு
வரும் ஜனவரி 14-ம் நாள், வரலாற்று சிறப்பு மிக்க நமது மாநிலம் “தமிழ்நாடு” என்ற பெயரோடு 50-வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு “தமிழ்நாடு” பொன் விழா ஆண்டாக அரசு கொண்டாட முடிவு செய்துள்ளது.
போட்டிகள்-நிகழ்ச்சிகள்
நம் கண் போன்ற தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் பெருமையை பறை சாற்றும் வகையில், கலை, விளையாட்டு, கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டி போன்ற நிகழ்ச்சிகள் சென்னையிலும், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்தப்படும். தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இளம் தமிழ் ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் நடைபெறும் நிறைவு விழாவில் இவர்கள் அனைவரும் சிறப்பிக்கப்படுவார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசு, “தமிழுண்டு, தமிழ் மக்களுண்டு – இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு” என்ற பாவேந்தரின் வரிகளுக்கேற்ப தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும் கண்ணின் மணி போல தொடர்ந்து காத்து வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.




Leave a Reply