BREAKING NEWS

தமிழக ஆளுநர் எஜமானர் ஆட்சி நடத்துகிறார் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.


 

தமிழகத்தில் ஆளுநர் எஜமானர் ஆட்சி நடத்துகிறார் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆளுநர் ஆய்வு விவகாரம் தொடர்பாக பேச அனுமதி கோரினார். ஆனால், சபாநாயகர் பேச அனுமதி மறுத்த காரணத்தால், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர், மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஆளுநர் விளக்கம்

ராஜ்பவனில் இருந்து (நேற்று) ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில், தலைமைச் செயலாளரிடமும், வருவாய் நிர்வாக ஆணையரிடமும் மாவட்ட அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறப்பட்டுள்ளதாக மிகத் தெளிவாக உள்ளது. முதலமைச்சருக்கோ, அரசுக்கே தெரியாமல் நேரடியாக ஆளுநர் மாளிகையில் இருந்து தலைமைச் செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதனோடு தொடர்பு வைத்துக்கொண்டு, அந்த அடிப்படையில் தான் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறேன் என்ற செய்தி வந்திருக்கிறது.

முதல்வரிடம் விளக்கம்

இந்த செய்தி அரசுக்கு தெரியுமா? முதலமைச்சருக்கு தெரிந்து தான் நடக்கிறதா? அப்படி இருந்தால், ஏற்கனவே முதலமைச்சர் சார்பில் விளக்கம் தந்திருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு, ஆளுநர் மாளிகையிலிருந்து ஆய்வு நடத்துவதற்காக செல்லவில்லை என்று ஒரு அறிக்கை வந்தது. ஆனால், இன்றைக்கு தலைமைச் செயலாளரின் ஒப்புதலோடு அவர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு தான் ஆய்வு நடத்துகிறோம் என்ற செய்தி வந்திருக்கிறது. இதைப்பற்றி, அவையில் முதல்வர்விளக்கம் அளிக்க வேண்டுமென கேட்ட நேரத்தில், அதற்கு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

எஜமானர் ஆட்சி

எனவே, எந்த பதிலும் அளிக்காமல் அவர் அமைதியாக இருந்தததால், அதனைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம். இதிலிருந்து என்ன தெரிகின்றது, மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், மாநில உரிமைகள் பறிபோகின்ற நிலையிலே ஒரு ஆட்சி நடக்கிறது. கவர்னர் ஆட்சி ஒரு எஜமானர் ஆட்சியாக நடக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.




Leave a Reply