BREAKING NEWS

தமிழகம் முழுவதும் 370 புதிய அரசுப் பேருந்துகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் ரூ.109 கோடி மதிப்பிலான 370 புதிய அரசு பேருந்துகளின் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

பேருந்து சேவை

தமிழ்நாடு அரசால் மக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்கிற வகையில், தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் இயக்கப்படும் பேருந்து சேவையின் மூலம் சுமார் 1 கோடியே 74 லட்சம் பயணிகள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், புதிய பேருந்துகள் மற்றும் வழித்தடங்களை துவக்கி வைத்தல், புதிய பணிமனைகள், அலுவலகக் கட்டிடங்கள், போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் கருதி தரம் மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள் கட்டுதல், இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு வசதி, பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள், சென்னையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

370 பேருந்துகள்

அந்த வகையில், பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 30 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 65 பேருந்துகளும், விழுப்புரம் – அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 27 பேருந்துகளும், சேலம் – அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 57 பேருந்துகளும், கோவை – அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 104 பேருந்துகளும், கும்பகோணம் – அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 41 பேருந்துகளும், மதுரை – அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 20 பேருந்துகளும், திருநெல்வேலி – அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 26 பேருந்துகளும் என மொத்தம் 109 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 370 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 5 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *