BREAKING NEWS

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி தொடங்கியது

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச நீட் பயிற்சி நேற்று தொடங்கியது.

நீட் தேர்வு பயிற்சி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ உட்பட உயர்கல்விக்கான போட்டித் தேர்வுகளுக்கு 2017-ம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித் துறை சார்பில் இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் வட்டாரத்துக்கு ஒன்று வீதம் 412 மையங்களில், இந்த முயற்சியை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.

இதில் நீட் தேர்வுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. எனினும், அரசின் மையங்களில் பயிற்சி பெறும் மாணவர்களில் மிகவும் குறைந்த நபர்களே நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். சுமார் 42 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றதில் 7 மாணவர்களுக்கே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைத்தது. இதனால் அரசின் இலவசப் பயிற்சி மையங்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

பயிற்சி வகுப்புகள்

இதையடுத்து இந்த ஆண்டு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி முறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. முதல்கட்டமாக அரசுப் பயிற்சி மையங்களில் சேர விரும்பும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆகஸ்ட் 7-ல் தகுதித்தேர்வு நடத்தி அதன்மூலம் 20 ஆயிரம் பேரைத் தேர்வு செய்தது. அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 2-வது வாரத்தில் தொடங்கும் என்றும் வாரந்தோறும் குறுந்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

எனினும் பயிற்சி வகுப்புகள் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன. ”வரும் மே 3-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. இதில் ஜனவரி முதல் மார்ச் வரை பொதுத்தேர்வுக்கு முக்கியத்துவம் தந்தாக வேண்டும்” என்று பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.

தேர்வு முறை

இந்நிலையில் 11, 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு முடிவுக்குப் பிறகு, நீட் தேர்வுக்கான பயிற்சி நேற்று தொடங்கியது. நேற்று (செப்.24) முதல் செப். 28-ம் தேதி வரை தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வகுப்பு நடைபெறும். அதைத் தொடர்ந்து வார இறுதி நாட்களில் மட்டும் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

முந்தைய நாட்களில் நடத்தப்பட்ட பாடங்களின் அடிப்படையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *