BREAKING NEWS

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகம் தகவல்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகம் தகவல்

சென்னை,மே 22-

2018-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 10 லட்சத்து 1 ஆயிரத்து 50 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளது என அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தேர்வு முடிவுகள்

16.03.2018 முதல் 20.04.2018 வரை நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2018, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in இந்த இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும், ஆன் -லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்குத்தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக தேர்வு அனுப்பப்படும்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்

28-ந் தேதி பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் வழியாகவும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை

மார்ச் – ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்பு தேர்வெழுதி விடைத்தாள்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் நாளை முதல் 26-ந் தேதி மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

மறுகூட்டல் கட்டணம்

பகுதி – I மொழி – ரூ.305, பகுதி II மொழி (ஆங்கிலம்) – ரூ.305, பகுதி – III – கணிதம், அறிவியல் மற்றும் – ரூ.205 சமூக அறிவியல்

பகுதி – IA விருப்ப மொழிப்பாடம் – ரூ.205 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒப்புகைச் சீட்டு

மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள்

பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்.

துணைப் பொதுத்தேர்வு

மார்ச் – ஏப்ரல் 2018-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவுசெய்து, தேர்ச்சி பெறாதோருக்கும் அல்லது வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத்தேர்வு ஜூன் 28-ந் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply