தற்போதைய செய்திகள்

தமிழகத்தை சுடுகாடாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு…..

மதுரை,
பல்வேறு நச்சுத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையே சுடுகாடாக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் தேனி நியூட்ரினோ மையத்துக்கு அனுமதி அளித்துள்ளது. அதற்கு, தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்துக்கு எதிராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரை முதல் கம்பம் வரையிலான விழிப்புணர்வு பயணத்தை நேற்று தொடங்கினார். இந்த பயணத்தை தொடங்கி வைத்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
சுடுகாடாக்கும் முயற்சி

இன்றைக்கு மத்தியில் இருக்கின்ற ஆட்சி மக்களைப் பற்றியும் கவலைப்படவில்லை, இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் சிந்திக்கவில்லை. மக்களிடையே கதிரியக்கம் எந்தளவுக்கு தாக்கும், இதனால் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு உருவாகும் என்பது பற்றியும் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டையே சுடுகாடாக மாற்ற வேண்டுமென திட்டமிட்டு மத்திய அரசு செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் சில மண்டலங்களை தேர்வு செய்து, அங்கு நச்சு திட்டங்களை நிறைவேற்றுகின்ற முயற்சியில், மோடி ஆட்சி ஈடுபட்டு வருகிறது. நியூட்ரினோ திட்டம், ஸ்டெர்லைட் விரிவாக்கத் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், காவிரி படுகையில் எரிவாயு ஆழ்கிணறுகள் தோண்டும் திட்டம், பெட்ரோ கெமிக்கல், கெயில் குழாய்கள் பதிக்கும் திட்டம் என தமிழகத்தின் பல மண்டலங்களை தேர்வு செய்து, மக்களை ஆபத்தான குழிகளில் தள்ளுகின்ற கொடுமையை பா.ஜ.க. தொடர்ந்து செய்கிறது.
தமிழகத்துக்கு துரோகம்

தமிழை ஆட்சி மொழியாக்க, சமூகநீதிக்காக, நிதி நிலையில் தன்னாட்சி பெற, தன்மானத்தோடும் சுயமரியாதை உணர்வோடும் வாழ்ந்திட தொடர்ந்து, நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறோம். இவையெல்லாம் மோடிக்கு பிடிக்கவில்லை. எனவே, தமிழர்களையும் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பிடிக்காத காரணத்தினால், இப்படிப்பட்ட நிலையை தமிழ்நாட்டில் உருவாக்கி வருகிறார்கள்.

ஆறு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். கால நீட்டிப்பு கிடையாது, என உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில், ஸ்கீம் என்பது என்ன? என விளக்கம் கேட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசே மதிக்கவில்லை என்றால், நீதித்துறையின் சுதந்திரம் எந்தளவுக்கு கீழே தள்ளப்பட்டு இருக்கிறது என்பதை உணர வேண்டும். தமிழக விவசாயிகளுக்கும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கும் ஆட்சியாக மத்திய ஆட்சி நடைபெறுகிறது.
எங்களுக்கு ஒரு நீதியா?
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நியூட்ரினோ திட்டத்தை, ஆபத்தான திட்டம் என்று தெளிவாக எடுத்துச் சொன்னார். மத்திய அரசு வழங்கியிருக்கின்ற அனுமதியில், இந்தத் திட்டத்தில் உள்ள ஆபத்து பற்றி அவர்களே குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் மீறி மத்திய ஆட்சி இன்றைக்கு அனுமதி தந்திருக்கிறது.

சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றும் முடிவெடுத்து, பணிகள் தொடங்கப்பட்டு, இடையில் நிறுத்தப்பட்டு இருப்பதற்கு என்ன காரணம்? ராமர் பாலம் இருக்கிறது என்று சதித்திட்டம் தீட்டி, அந்தத் திட்டத்தை நிறுத்தினார்கள். மிகுந்த பாரம்பரியமிக்கது இந்த மேற்கு தொடர்ச்சி மலை, இந்தத் திட்டத்தால் அதற்கு என்னென்ன ஆபத்துகள் விளையும் என்று யுனெஸ்கோ சொல்லியிருக்கிறது. அதையும் மீறி இந்தத் திட்டம் நிறைவேற்றுவீர்கள் என்று சொன்னால், உங்களுக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒரு நீதியா?

இவ்வாறு அவர் பேசினார்.
Leave a Reply