தற்போதைய செய்திகள்
pic

தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி பலாத்கார, கொலை வழக்கில்,காமக்கொடூரன் தஷ்வந்த்துக்கு மரண தண்டனை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….

செங்கல்பட்டு,

தமிழகத்தையே உலுக்கிய போரூர் சிறுமி ஹாசினி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கில் பொறியாளர் தஷ்வந்த் குற்றவாளியே என்று அறிவித்த செங்கல்பட்டு மகிளிர் நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியது.

சிறுமி மாயம்
சென்னைப் போரூரை அடுத்த மவுலிவாக்கம் மாதா நகரில் வசித்து வருபவர்கள் பாபு –தேவி தம்பதியினர். இவர்களின் மகள் ஹாசினி (வயது 6) கடந்த ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். இது குறித்த புகாரின்பேரில் மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாருடன் சேர்ந்து சிறுமியை தேடுவது போல் நடித்த, அதே குடியிருப்பில் ஹாசினியின் பக்கத்து வீட்டில் வசித்துவந்த தஷ்வந்த் (வயது 24) என்ற வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனிடையே, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவில் பதிவான காட்சியில் தஷ்வந்த் இடம்பெற்றதையடுத்து, தஷ்வந்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
எரித்து கொலை
விசாரணையில், சிறுமியின் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தி சிறுமி வெளியில் சொல்லிவிட கூடாது என்பதற்காக அவரை கொலை செய்து தீயிட்டு கொளுத்தி தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையோரம் சிறுமியின் உடலை புதரில் வீசியதை தஷ்வந்த் ஒப்புகொண்டான்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு காரணமான தஷ்வந்தை கடுமையாக தண்டிக்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தினர். இதையடுத்து இந்த வழக்கில் தஷ்வந்தை குண்டர் தடுப்பு காவலில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டான்.
குண்டர் சட்டம்
இந்த வழக்கில், 90 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது. ஜாமீனில் வெளியே வந்தபோது கடந்த ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி தனது தாய் சரளாவை அடித்துக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 25 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்று மும்பைக்கு தப்பியோடினான், தஷ்வந்த்.

சூதாட்டம் மற்றும் குதிரைப்பந்தயத்திற்கு அடிமையானவன் தஷ்வந்த். இந்த ஒரு துப்பு கொண்டு மும்பையில் பிரபல ரேஸ் கோர்சிற்கு வந்திருந்த தஷ்வந்தை, மாறுவேடத்தில் சென்றிருந்த தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து மடக்கிபிடித்தனர். பின்னர், போலீசாரின் பிடியிலிருந்து தப்பிய தஷ்வந்தை, மும்பை போலீசாரின் உதவியுடன் தனிப்படை போலீசார் மீண்டும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
சாட்சிகள்
தஷ்வந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது தாயார் சரளாவை அடித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டான். இந்த கொலை வழக்கு செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும், ஹாசினி கொலை வழக்கு மகிளா நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வந்தது.
இனியும் தஷ்வந்த் தப்பக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த போலீசார், சிறுமி ஹாசினி கொலை வழக்கில் சாட்சிகளை ஆஜர்படுத்தி வழக்கை துரிதப்படுத்தினர். ஹாசினி கொலை வழக்கு விசாரணைக்காக மகிளா நீதிமன்றத்தில் தஷ்வந்த்தை ஆஜர்படுத்தினர். தஷ்வந்த் மற்றும் சாட்சிகளான ஹாசினியின் தந்தை பாபு, தாய் தேவி, பக்கத்து வீட்டுக்காரர் முருகன் ஆகியோரிடம் நீதிபதி வேல்முருகன் ரகசிய விசாரணை நடத்தினார்.
பாலத்த பாதுகாப்பு
இந்த வழக்கில் 300 பக்க குற்றப்பத்திரிக்கை, 42 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு 32 சாட்சிகளிடம் நடைபெற்ற விசாரணை கடந்த வாரம் பிப்ரவரி 14-ந் தேதி முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் 19-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் அறிவித்திருந்தார். சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் சார்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகாததால், தஷ்வந்தே வாதாடினான்.

இதை தொடர்ந்து நேற்று காலை 11.30 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தஷ்வந்த் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிபதிமுன் ஆஜர் படுத்தப்பட்டான். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவத்தில் தஷ்வந்திற்கு வழங்கப்படும் தீர்ப்பு விவரங்களை அறிவதற்காக, செங்கல்பட்டு சுற்றுவட்டாரத்திலிருந்து மட்டுமின்றி, சிறுமி ஹாசினி வசித்த மாங்காடு பகுதியிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற வளாகத்தில் ஆர்வமுடன் திரண்டிருந்தனர்.

மரண தண்டனை

இந்த வழக்கு நடைபெறும் நீதிமன்ற கதவு மூடப்பட்டு இருதரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன. முக்கிய நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஹாசினியின் தந்தை பாபு குற்றவாளி தஷ்வந்துக்கு உயர்ந்தப்பட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில் 3 மணிக்கு தீர்ப்பை வாசித்த நீதிபதி வேல்முருகன் தனது தீர்ப்பில் தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அவரை குற்றவாளி என அறிவித்தார். பின்னர் தனது தீர்ப்பை வாசித்த நீதிபதி தஷ்வந்துக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்குவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் தஷ்வந்தை சிறையில் அடைத்தனர்.

நேற்று ஹாசினி கொலை வழக்கில் மட்டுமே தற்போது தஷ்வந்துக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரது தாயை கொலை செய்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதால் அதன் தீர்ப்பு விசாரணை முடிந்து தனியாக வரும்.
Leave a Reply