தற்போதைய செய்திகள்

தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் கிடைப்பது உறுதி செய்யப்படும்.உச்ச நீதிமன்றம் வாக்குறுதி மத்திய அரசுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு மீது 9-ந் தேதி விசாரணை……

புது டெல்லி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனுவை, அவசர வழக்காக நேற்றே விசாரிக்கக் கோரிய நிலையில், மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், அதை வரும் 9-ம் தேதி (திங்கள்கிழமை) விசாரிப்பதாக அறிவித்தது. மேலும் தமிழகத்துக்்கு உரிய காவிரி நீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் வாக்குறுதி அளித்தது.

உள் நோக்கத்துடன் வேண்டுமென்றே நீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்பட மறுப்பதாகவும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை (மார்ச் 31) இந்த நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் உமாபதி கோரிக்கை வைத்தார்.

அப்போது, காவிரி நீரில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கு கிடைப்பதை உச்ச நீதிமன்றம் நிச்சயம் உறுதி செய்யும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உறுதி அளித்தார். மேலும் இந்த மனு வரும் 9-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

காவிரி இறுதித் தீர்ப்பு

தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நதிநீரைப் பங்கிட்டுக் கொள்வது குறித்து கடந்த இரண்டு நூற்றாண்டு காலமாக பிரச்சினை நிலவிவருகிறது.

இதுதொடர்பாக, கடந்த 2007ம் ஆண்டு தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் சார்பிலும் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் 16ந் தேதி வழங்கப்பட்டது.

6 வாரம் அவகாசம்

அதில், தமிழகத்துக்கு ஏற்கனவே வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த 192 டி.எம்.சி. நீரின் அளவில் 14.75 டி.எம்.சி. குறைத்து 177.25 டி.எம்.சி.யாக உத்தரவிட்டது.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், இதற்காக, எந்தவித காலநீட்டிப்பும் இல்லாமல் ஆறு வார காலம் (மார்ச் 29வரை) அவகாசம் விதித்தும் உத்தரவிட்டது.

தமிழக அரசின் தீர்மானம்

ஆனால், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என தெரிவித்தார். இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் தரவேண்டும் என்று அனைத்துக்கட்சிகளும் வேண்டுகோள் விடுத்தன.

இதனையடுத்து, தமிழக அரசின் சார்பில் கடந்த பிப்ரவரி 22-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக தமிழகத்தின் அனைத்துக்கட்சித் தலைவர்களும், விவசாயிகளுடன் இணைந்து பிரதமரைச் சந்திப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு அலட்சியம்

ஆனால், பிரதமர் தமிழக தலைவர்களை சந்திக்க மறுத்து விட்டார். இதனையடுத்து, கடந்த மார்ச் 9ந் தேதி மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தலைமையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நான்கு மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற வார்த்தையே இல்லை என்று தெரிவித்தார். அவரின் இந்த கருத்து, தமிழகத்தின் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர் போராட்டம்

இதனையடுத்து, மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, 19 நாட்களாக நாடாளுமன்ற வளாகத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுடன், தி.மு.க., பா.ம.க. எம்.பிக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும், மத்திய அரசு நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.

விளக்கம் கோரும் மனு

ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் பேசிய நவநீதகிருஷ்ணன் எம்.பி. மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்வோம் என்று மிக வருத்தத்துடன் எச்சரித்து இருந்தார்..

இதற்கிடையில், காவிரி இறுதித் தீர்ப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த 28ந் தேதி மத்திய அரசு முடிவு செய்தது. அத்துடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் கால அவகாசம் கேட்கவும் முடிவு செய்தது. மத்திய அரசின் இந்த செயல் தமிழக அரசு உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.

முதல்வர் அவசர ஆலோசனை

இந்த நிலையில், உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு விதித்த காலக்கெடு கடந்த மார்ச் 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் அதே தினத்தில், அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என முடிவு செய்யப்பட்டது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இதன்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், நீதிமன்ற தீர்ப்பை மீறிய மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த மார்ச் 31-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அரசு அதிகாரிகள்

இந்த மனுவில் மத்திய அமைச்சரவை செயலாளர் பி.கே சின்கா, மத்திய நீர்வள ஆதாரத்துறை செயலாளர் யு.பி சிங் ஆகியோர், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி 6 வார காலத்திற்குள் செயல் திட்டத்தை அமல்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித் துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

கட்டுப்பட மறுப்பு

இந்த மனுவில், மத்திய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வேண்டும் என்றே, உள்நோக்கத்துடன் கட்டுப்பட மறுப்பதாகவும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், வலியுறுத்தப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் சார்பிலும், தீர்ப்பு தொடர்பாக விளக்கமும், கால அவகாசமும் கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply