BREAKING NEWS

தமிழகத்தில் 46 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவில் தவறு நடந்துள்ளது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் மறுவாக்குப்பதிவு குறித்து விரைவில் ஆலோசனை

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 46 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின்போது தவறு நடைபெற்றுள்ளது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், மறு வாக்குப்பதிவு நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல்

தமிழகத்தில் கடந்த 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. மேலும், வரும் 19-ந் தேதி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கடசிகள் தீவிர அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேர்தல் அதிகாரிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு தொகுதிகளிலும் தீவிர வாகன சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோவையில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சில தேனி மாவட்டத்திற்கு திடீரென கொண்டு செல்லப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தேனி வருவாய் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக, நேற்று பதிலளித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, இது இயல்பான ஒன்றுதான். மறுவாக்குப்பதிவு தேவை ஏற்படும்பட்சத்தில் மின்னணு இயந்திரங்கள் இடமாற்றம் செய்ப்படுவது இயல்புதான் என்று விளக்கம் அளித்தார். இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

46 இடங்களில் தவறு

தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 46 வாக்குச்சாவடிகளில் முறையாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை, தவறு நடந்துள்ளது. இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மறு வாக்குப்பதிவு நடத்துவது குறித்து அரசியல் கட்சியின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.

மறு வாக்குப்பதிவுக்கு தயாராகவே தேனி மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 13 மாவட்டங்களில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பற்றாக்குறை இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

மறுவாக்குப்பதிவா?

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு, தேர்தல் அதிகாரிகளால் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். அப்போது 10 முறை வாக்கு இயந்திரங்களில் பல்வேறு கட்சிச் சின்னங்களில் வாக்களித்து சோதனை செய்வார்கள். பிறகு வாக்குப்பதிவுக்கு வைக்கும் போது மாதிரி வாக்குப் பதிவுக்காக பதிவு செய்த வாக்குகளை அழித்துவிட்டு வாக்குப்பதிவை பூஜ்யத்தில் வைத்துத் தொடங்குவார்கள். ஆனால், தேனி, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 46 வாக்குச்சாவடிகளில் அவ்வாறு பூஜ்யத்தில் வைக்காமல் வாக்குப்பதிவு தொடங்கியிருப்பதன் மூலம், வாக்குப்பதிவில் தவறுகள் நடந்திருப்பது தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது. தலைமைத் தேர்தல் அதிகாரியின் தகவலால் தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




Leave a Reply